நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு



Colour Psychology

நிறங்கள் மனதினைப் பிரதிபலிக்கக் கூடியவை. ஒருவர் விரும்பும் வண்ணத்தை வைத்தே அவர்களின் குணநலன்களைச் சொல்லிவிட முடியும். ஒருவரின் குணநலத்தை மாற்றும் திறனும் வண்ணங்களுக்கு உண்டு என்பது நமக்குத் தெரியும். வண்ணங்களுக்கும்  மனதுக்கும் அப்படி என்ன தொடர்பு? உளவியல் மருத்துவர்
கீர்த்திபாயிடம் கேட்டோம்...

‘‘தினசரி வாழ்விலேயே நிறங்களின் இந்த தாக்கத்தை நாம் உணர முடியும். நம் மனதின் அன்றைய மனோநிலையைப் பொறுத்தே நாம் உடைகளைத் தேர்வு செய்கிறோம். கொஞ்சம் நுட்பமாகச் சொன்னால், நிறத்தைத் தேர்வு செய்வதில் கொஞ்சம் கவனமோடு இருந்தால் நம் மனநிலையில் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்க முடியும். உதாரணமாக, கோபமாகவோ அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போதோ பிரகாசமான நிறத்தைத் தேர்வு செய்வது நல்லது. மஞ்சள், பச்சை, நீலம் போன்ற நிறங்களைத் தேர்வு செய்வதால் அந்த மனநிலையில் மாற்றம் கொண்டு வர முடியும். சிலரது வீடுகளில் பிங்க், நீலம் போன்று இனிமையான, சாந்தமான பெயின்ட் நிறங்களை தேர்வு செய்வதற்கு இதுதான் காரணம். இதனால் என்ன மனநிலையில் இருந்தாலும் மனதை ஓரளவுக்கு சாந்தப்படுத்த முடியும்.

பள்ளி மாணவர்களின் சீருடைகளும் பெரும்பாலும் சாந்தமான நிறங்களாகவே இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். சீருடை பழக்கம் உள்ள நிறுவனங்களிலும் நீலம், சாம்பல் போன்ற நிறங்களையே பின்பற்றுவார்கள்.  சிவப்பு, ஆரஞ்சு, அடர் பச்சை போன்ற நிறங்கள் மிகுந்த எரிச்சல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால் இவற்றைத் தவிர்த்துவிடுவார்கள். அதுவே சாந்தமான நிறங்களைக் கொண்ட உடைகளை அணியும்போது வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனத்துக்கும் நல்லிணக்கமும் ஏற்படுகிறது’’ என்பவர் நிறங்களைத் தேர்வு செய்யும் முறை பற்றி விளக்குகிறார். ‘‘கோபமாகவோ அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போதோ இனிமையான நிறங்களைத் தேர்வு செய்வது நல்லது. அப்போது மனநிலையில் மாற்றம் ஏற்படும். கருப்பு, சிவப்பு, அடர் பச்சை, ஆரஞ்சு போன்ற அடர்நிறங்களைத் தவிர்ப்பது நல்லது. கருப்பு நிறமானது ஒல்லியாகவும், அழகாகவும் அனைவருக்கும் பொருந்தக் கூடியதாகவும் இருக்கிறது என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. ஆனால், கருப்பை விட வெள்ளை நிறமே நல்ல தோற்றத்தைத் தரும். மரியாதைக்குரிய நிறமாகவும் வெள்ளை கருதப்படுகிறது. அதனால்தான் பெரிய பதவியில் இருப்பவர்கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் வெள்ளை நிறங்களை விரும்புகின்றனர்.

எனவே கொஞ்சம் மாறுபட்ட, அதாவது கான்ட்ராஸ்ட்டாக கருப்புடன் நீலம் அல்லது சாம்பல் நிறம் கலந்த உடைகளை அணியலாம். அடர் பிங்க் நிறத்துடன் நீலம் கலந்தும் அணியலாம். அதேபோல் சிவப்புக்கும் மற்ற நிறம் கலந்த உடை அணியலாம். கான்ட்ராஸ்ட்டாக மற்ற நிறத்துடன் கலந்து அணியும்போது இனிமையான எண்ணம் ஏற்படும். அதிகமாக கோபப்படும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் நிறங்களில் மாற்றத்தை ஏற்படுத்த உளவியலில் அறிவுறுத்தப்படுகிறது’’ என்கிற கீர்த்தி பாய், நிறங்களுக்கான தன்மைகள் பற்றியும் குறிப்பிடுகிறார். ‘‘நீல நிறம் நல்லிணக்கத்தையும், வெள்ளை மன அமைதியையும், பச்சை வளர்ச்சியையும், சிவப்பு மற்றும் கருப்பு எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும். கருப்பு நிறம் மன அழுத்தத்தையும், சிவப்பு நிறம் கோபத்தையும் ஏற்படுத்தக்கூடியது. அதே நேரத்தில் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் ஃபேஷனாகவும் கருதப்படுகிறது. ஆரஞ்சு, அடர் பிங்க் போன்ற நிறங்கள் மன அழுத்தத்தைக் கொடுக்கும். இவற்றை மற்ற நிறங்களோடு சேர்த்து அணியும்போது அதன் தன்மை குறைந்துவிடும். உதாரணமாக, வீட்டின் மூன்று சுவர்களில் க்ரீம் கலரும் ஒன்றில் ஆரஞ்சும் உபயோகிக்கலாம். கோயில்களில் விபூதி, குங்குமம் என கான்ட்ராஸ்ட்டாக கொடுக்கப்படும் பிரசாதத்திலும் கூட கலர் சைக்காலஜி இருக்கிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் விருப்பமானதாக இருக்கும். ஒருவருக்கு நீலம் பிடித்தது என்றால் எந்த கடைக்கு சென்றாலும் நீல நிறத்தில் உடை வாங்குபவராக இருப்பார். கலகலப்பான குணம் கொண்டவர் என்றால் பிரகாசமான நிறங்களைத் தேர்வு செய்வார். தலைவர் பொறுப்பில் இருப்பவர் என்றால் வெள்ளை நிற உடைகளை விரும்புவார். அதனால் எண்ணங்களிலும், மனநிலையிலும் மாற்றம் தேவை என நினைப்பவர்கள் வீட்டுச்சுவர், உடுத்தும் உடை, உபயோகிக்கும் பொருட்களின் நிறங்களில் மாற்றம் செய்யலாம். நிறங்களில் மாற்றம் செய்யும் போது அவர்களின் எண்ணங்களிலும் உணர்வுகளிலும் மாற்றம் கொண்டு வர முடியும்!’’

- மித்ரா

வாழ்க்கையில் மாற்றம் தேவை என நினைப்பவர்கள் வீட்டுச்சுவர், உடுத்தும் உடை, உபயோகிக்கும் பொருட்களின் நிறங்களில் மாற்றம் செய்யலாம்.