கண்களுக்கான எளிய பயிற்சிகள் !



நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளில் முதன்மையானவை கண்கள். ‘கண்ணை இமை காப்பது போன்று உன்னைப் பார்த்துக் கொள்வேன்’ என்று நம் அன்பைவெளிப்படுத்து வதில்கூட கண்களை உதாரணமாகக் காட்டுகிறோம். அப்படிப்பட்ட கண்களை நாம் எப்படிப் பார்த்துக் கொள்கிறோம்? கண்களுக்கான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறோமா? அவற்றுக்குத் தேவையான ஓய்வைக் கொடுக்கிறோமா? நேர்மையாகப் பதில் சொன்னால் மேற்கண்ட கேள்வி களுக்கெல்லாம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

இரவும், பகலும் நமக்காக உழைக்கிற கண்களுக்கு அடிக்கடி ஓய்வை நிச்சயம் கொடுக்க வேண்டும். கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சில எளிமையான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக எல்லோரும் எல்லா நேரமும் மொபைல் மற்றும் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தபடியே இருக்கிறார்கள். கண்களுக்கு வேலை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதன் விளைவாக கண்கள் களைத்துவிடுகின்றன. பார்வை தொடர்பான பிரச்னைகளும் வருகின்றன. அவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு ஆரம்பத்திலிருந்தே கண்களுக்கான
பயிற்சிகளை செய்வதுதான்.

கண்களுக்கான பயிற்சிகள் எப்போது தேவை?
படிக்க சிரமப்படுகிறவர்களுக்கு, அறுவை சிகிச்சை செய்தவர்களுக்குக் கண்களின் தசைகளைப் பலப்படுத்துவதற்காக, மாறுகண் பிரச்னை உள்ளவர்களுக்கு, சோம்பேறிக் கண் பிரச்னை உள்ளவர்களுக்கு, காட்சிகள் இரண்டிரண்டாகத் தெரிவதாக உணர்கிறவர்களுக்கு, கண்களின் நீர் வறண்டு, எரிச்சலும் உறுத்தலும் இருப்பவர்களுக்கு, நீண்ட நேரம் கணினித் திரையைப் பார்க்கிறவர்களுக்கு.

எல்லோருக்குமான எளிய பயிற்சிகள்
பாமிங் (PALMING)
கம்ப்யூட்டர் டேபிளின் மேல் உங்கள் முழங்கைகளை ஊன்றிக் கொள்ளுங்கள். உங்கள் உள்ளங்கைகளை கண்களின் மேல் குவித்தபடி வைத்துக் கொள்ளுங்கள். கண்களில் சில நொடிகள் அந்த இருளை உணர்வீர்கள். இதே மாதிரி உள்ளங்கைகளை கண்களுக்கு மேல் பொத்திப் பொத்தி எடுப்பது கண்களின் களைப்பை போக்கும்.

சன்னிங் (SUNNING)
இளம் காலை அல்லது இளம் மாலை வெயிலில் மட்டுமே செய்யப்பட வேண்டியது இது. கைகளால் கண்களை லேசாக மூடியபடி இளம் வெயிலைப் பார்க்கும் பயிற்சி இது. ரொம்ப நேரம் செய்ய வேண்டாம். நேரடியாக வெயிலைப் பார்க்க வேண்டாம். வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும்போதும் செய்ய வேண்டாம். இது கண்களுக்கான ரிலாக்சேஷன் பயிற்சியாக அமையும்.

ஷிஃப்டிங் (SHIFTING)
இதைக் கண்களைத் திறந்தபடியோ அல்லது மூடிக்கொண்டோ செய்யலாம். உங்களது கருவிழிப் பகுதியை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் நகர்த்திப் பார்க்கவும். கழுத்தோ, முகமோ திரும்பக்கூடாது. உங்கள் பார்வை மட்டுமே இடவலமாகவும், வலஇடமாகவும் சென்று வர வேண்டும். இதே பயிற்சியை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் செய்ய வேண்டும். பிறகு வலது கண்ணால் மேல்பக்கம் பார்த்து இடப்பக்கம் கீழ்நோக்கிப் பார்க்க வேண்டும். அதேபோல இடது கண்ணால் மேல்நோக்கிப் பார்த்து வலது பக்கம் கீழே பார்க்க வேண்டும். பிறகு கண்களை வட்டவடிவில் எல்லாத் திசைகளிலும் சுழற்றி முதலில் இடவலமாகவும், பிறகு வல இடமாகவும் பார்க்க வேண்டும். இது கண்களுக்குள் உள்ள நுண்ணிய தசைகளை உறுதிப்படுத்தி அந்த இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். ஒரே இடத்தில் பார்வையைக் குவிக்கிற பயிற்சிஇந்தப் பயிற்சியில் உங்களுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு பொருளை சில நொடிகள் உற்றுப் பார்க்க வேண்டும். பிறகு தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்க்க வேண்டும். கழுத்துப் பகுதியானது பார்வைக்குச் சமமான நிலையில் இருக்க வேண்டும். முதலில் அருகிலுள்ள பொருளைத்தான் பார்க்க வேண்டும்.

கண்களுக்கும் மசாஜ் செய்யலாம்
கண்களை மூடிக் கொண்டு மென்மையாக இரண்டு விரல்களால் வட்டவடிவில் மசாஜ் செய்யலாம். அதேபோல கீழ் இமையின் அருகில் விரலை வைத்து மேல் நோக்கி மகாஜ் செய்து விடலாம். இப்படிச் செய்கிற போது நகங்கள் கண்களில் குத்திவிடாதபடி கவனமாக இருக்க வேண்டும்.

எட்டுப்போடுங்கள்
டூ வீலர் ஓட்டத்தான் எட்டு போட வேண்டும் என்றில்லை. கண்களுக்கான பயிற்சியிலும் எட்டு போடலாம். உங்களிடமிருந்து 10 அங்குலம் தள்ளி ஓர் இடத்தில் கற்பனையாக எட்டு என்கிற எண்ணை பெரிதாக எண் வடிவில் எழுதியிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த வடிவத்தின் மீது பார்வையைப் பதித்து திரும்பத் திரும்ப எட்டு வரைவது போன்று பார்வையை மட்டும் எட்டின் மேல் செலுத்துங்கள். கண்களின் தசை இயக்கத்துக்கு இது சிறந்த பயிற்சி.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கண்களுக்கு வேலைகளும், பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு கண்களுக்கான பயிற்சிகளை செய்வதுதான்.

(காண்போம்!)
எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி