செயற்கை மூட்டு விலையை கட்டுப்படுத்த திட்டம்!



வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் செயற்கை மூட்டு விலை 3 மடங்கு அதிக லாபத்துக்கு விற்கப்படுவதாகவும், இந்த கொள்ளை லாபப் போக்கை கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய மருந்துவிலை கட்டுப்பாட்டு ஆணையம்(NPPA) தெரிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவத்துறையில் மட்டும் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. இங்குள்ள சிகிச்சை முறைகள் சிறப்பாக இருப்பதால்தான் வெளிநாடுகளிலிருந்தும் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர். இதனால், சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் வெளிநாடுகளிலிருந்து வரவழைக்கப்படுகின்றன. இதனால் சிகிச்சைக்கான கட்டணமும் அதிகமாகி விடுகிறது. உதாரணமாக, தமனியில் அடைப்பை நீக்க பொருத்தப்படும் ஸ்டென்ட் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இவை 2.5 லட்சம் ரூபாய் வரை பல மடங்கு லாபத்துக்கு விற்கப்பட்டன. NPPA-வின் அதிரடி நடவடிக்கைகளால் இவற்றின் விலை தற்போது 85% வரை குறைக்கப்பட்டுள்ளது.

 இதேபோல், மூட்டு பாதிப்பு ஏற்பட்டவர்களுக்காக செயற்கை மூட்டுகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை இறக்குமதி செய்பவர்கள் 76% லாபத்துக்கும், மருத்துவமனைகள் மற்றும் விநியோகஸ்தர்கள் 1.35 மடங்கு லாபத்துக்கும் விற்பனை செய்கிறார்கள். இதையெல்லாம் சேர்த்து நோயாளிக்கு பொருத்துவது வரை மொத்த லாபம் 3.13 மடங்காக உள்ளது. செயற்கை மூட்டு மட்டுமின்றி அவற்றை பொருத்துவதற்கான உதிரி பாகங்களும் சேர்ந்து சிகிச்சை கட்டணத்தை மேலும் அதிகமாக்கி விடுகின்றன. இதனாலேயே இப்படி ஓர் அதிரடி முடிவை தேசிய மருந்துவிலை கட்டுப்பாட்டு ஆணையம் எடுத்துள்ளது. செயற்கை மூட்டுபோல மேலும் 18 மருத்துவ கருவிகளின் விலை விபரங்களையும் NPPA கேட்டுள்ளது. எனவே, கட்டணக் கொள்ளைகள் முடிவுக்கு வருவதற்கான சாத்தியங்கள் உள்ளது என்று எதிர்பார்க்கலாம்!

- க.கதிரவன்