மகிழ்ச்சியற்றவர்களின் மோசமான 10 பழக்கங்கள்



இதுவும் ஒருவகையில் மாத்தி யோசி ஃபார்முலாதான். ‘வெற்றியாளர்களின் கதைகளைப் படிக்காதீர்கள். அவற்றில் இருந்து செய்திகள் மட்டுமே கிடைக்கும். தோல்வியாளர்களின் கதைகளைப் படியுங்கள்... அதில்தான் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்கள் கிடைக்கும்’ என்பது முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமின் புகழ்பெற்ற வாசகம். உண்மைதான். வெற்றியாளர்களிடம் கற்றுக் கொள்வதைவிட, தோல்வியாளர் களிடம் நாம் கற்றுக் கொள்ள இன்னும் அதிக விஷயங்கள் இருக்கின்றன. இப்போது நாம் கற்றுக் கொள்ளப் போவது என்ன செய்யக் கூடாது என்பதைத்தான்! ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் சிலரைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். இவர்களால் மட்டும் எப்படி இதுபோல் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்று வியப்பதும் உண்டு. அதேபோல், சிலரைப் பார்க்கும்போது ஏன் எப்போதும் இப்படி செய்கிறார்கள் என்று எரிச்சலும் தோன்றுவதுண்டு.

இந்த இரண்டாவது வகையான மகிழ்ச்சியற்றவர்களுக்கென்று சில உளவியல் பழக்கங்கள் இருக்கிறது என்று வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் நிபுணர்கள். அவற்றைச் செய்யாமல் விட்டுவிட்டாலே போதும் அல்லது அந்த பழக்கங்கள் இல்லாதவர்களாக இருந்தால் உங்களுக்கு நீங்களே சபாஷ் சொல்லிக் கொள்ளுங்கள்.

சோகமான மனிதர்கள் செய்யும் 10 பழக்கங்கள் இதோ...
1. தொடர்ந்து புகார் சொல்வது...
புகார் சொல்வதை மகிழ்ச்சியான மனிதர்கள் விரும்புவதில்லை. OK. Fine... என்று எந்த ஒரு கசப்பான சம்பவத்தையும் கடந்துவிட முயற்சிக்கிறார்கள் அல்லது எதிர்மறையான இடத்தில் இருந்து முடிந்தால் நகர்ந்துவிடுகிறார்கள். ஆனால், மகிழ்ச்சியற்ற மனிதர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் மீது பலவிதமான வருத்தங்களைக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். சந்தோஷமாக இருப்பவர்களைப்பார்த்து பொறாமைப்படுபவர்களாகவும், அவா்கள் மீது எதிர்மறையாக எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். நாம் எல்லோருமே வெவ்வேறு சூழ்நிலைகளை சந்திக்கிறோம். அவை நமக்கு சாதகமாகவும் இருக்கலாம்; பாதகமாகவும் இருக்கலாம். சில நேரங்களில் தேவையற்றதாகவும் இருக்கலாம். அவற்றைப்பற்றி புகார் சொல்லிக்கொண்டே இருப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை. அதனால், புகார் சொல்வதைத் தவிர்த்துவிடுங்கள். பிரச்னைகளுக்கான தீர்வுகளைக் கண்டுபிடியுங்கள்.

2. குறை கண்டுபிடித்தல்
தன்னைப்பற்றியோ, அடுத்தவரைப்பற்றியோ நாம் பேசும் விதம்தான் நம்மைப் பற்றிய பிம்பத்தை உருவாக்குகிறது. மகிழ்ச்சியற்றவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் குறைகளைக் கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால், மற்றவர்களிடம் குறை காணும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒருவரிடம் குறைகளை உணர்ந்தால் அதைப் பற்றி மூன்றாம் நபரிடம் பேசக்கூடாது. சம்பந்தப்பட்டவரிடமே அதுபற்றி சொல்லி விளக்கலாம். இதன்மூலம் அவரும் தன் குறையை உணரவும், மாற்றிக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். மாற்றிக் கொள்ள முடியாத குறைகளாக இருக்கும்பட்சத்தில் பிறரின் குறையை ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். உங்களின் குறைகளை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டு உங்களோடு பயணிக்கவில்லையா?! அப்படித்தான். சந்தோஷத்துக்கு மதிப்பு மிக முக்கியம். முதலில் நம்மை, நாம் விரும்பினால், மற்றவர்கள் விரும்பத் தொடங்குவார்கள். குறையுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியாக வாழ உரிமையுள்ளது என்பதை உணருங்கள். அவர்களை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். முக்கியமாக, உணர வேண்டிய ஒன்று... குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

3. புத்திசாலித்தனமற்ற ஆசைகள்
லேட்டஸ்ட்டாக வரும் கார், மொபைல், எலக்ட்ரானிக் பொருட்கள் என புதிதாக எது வந்தாலும், தேவையில்லாத பட்சத்தில் வாங்குவது ஒரு தவறான பழக்கம். இதன் அடுத்தகட்டமாக, ‘சொந்த வீடு கனவா... நாங்க லோன் கொடுக்கிறோம்’ ‘கார் வேணுமா லோன்’ ‘கிரெடிட் கார்டு வேணுமா’ என தொடர்ந்து நம் மீது திணிக்கப்படும் விளம்பரங்களை மகிழ்ச்சியற்றவர்கள் எளிதில் நம்புகிறார்கள். அவற்றின் வலையிலும் வீழ்ந்துவிடுகிறார்கள். இதுபோன்ற சந்தைப் பொருளாதாரத்துக்கு அடிமையாகி எல்லாவற்றையும் லோனில் வாங்கி, மகிழ்ச்சியைத் தொலைத்து கடனாளியாக சுற்றிக் கொண்டிருப்பதும் ஒருவகையில் தவறான அணுகுமுறைதான்.தேவைக்கு கார் வாங்க ஆசைப்படுவதில் தவறு இல்லை. ஏற்கெனவே, கார் இருக்கும் பட்சத்திலும் லேட்டஸ்ட் மாடல் காருக்கு நிலவரம் புரியாமல் ஆசைப்படுவதுதான் தவறு. புதிய பொருள் வாங்கும் அந்த நிமிட சந்தோஷத்தில் மயங்கி, வாழ்க்கையில் கிடைக்கும் பிற மகிழ்ச்சிகளை இவர்கள் இழக்கிறார்கள். கற்றல், வாசித்தல், இயற்கையை ரசித்தல் போன்ற எத்தனையோ கடனில்லாத மகிழ்ச்சிகள் கொட்டிக் கிடக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை.

4. எதிர்மறை அடிமைத்தனம்

விருந்துகள், நண்பர்களோடு பொழுதுபோக்குகள் இவையெல்லாம் இன்றைய சூழலில் மொத்தமாக ஒதுக்கிவிட முடியாதுதான். அவ்வப்போது அளவோடு இருந்தால் பிரச்னையில்லை. ஆனால், அளவுமீறும் போதும், அவற்றுக்கு அடிமையாகும்போதும் தான் பிரச்னை ஆரம்பமாகிறது. இவர்கள் சந்தோஷத்தை இழக்கிறார்கள். தேவையில்லாத பழக்கங்கள், நட்புகளை ஒதுக்கி பயனுள்ள விஷயங்களில் நேரத்தை செலவிட்டால் அது ஹெல்த்துக்கும் நல்லது; வெல்த்துக்கும் நல்லது என்பது புரியாதவர்கள் இவர்கள்.

5. கடந்தகால வருத்தம்
பழைய விஷயங்களை நினைக்காமல் நம்மால் இருக்க முடியாது என்பது உண்மை. குறிப்பாக, ஏதேனும் கசப்பான அனுபவங்களாக இருந்தால், அவற்றை நினைத்து வருந்தாமலும் இருக்க முடியாது. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும். ஆனால், மகிழ்ச்சியற்ற மனநிலை கொண்டவர்கள், திரும்பத் திரும்ப கடந்த கால நினைவுகளிலேயே வாழ்கிறார்கள். அது உபயோகமற்றது என்பதைவிட அது மேலும் உங்களை புண்படுத்தவே செய்யும் என்கிறார்கள் உளவியலாளர்கள். முன்பு எடுத்த தவறான முடிவுகளை மீண்டும் மீண்டும் நினைத்து வருந்துவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஏற்படும் என்பதையே ஆராய்ச்சியாளர்களும் உறுதிசெய்கின்றனர். நான்கு விதிகளை பின்பற்றி பழைய தவறுகளிலிருந்து மீண்டு வரலாம் என்றும் கற்றுக் கொடுக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தவறிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள், வருந்தி பலனில்லை எனும்போது அதைக் கடந்துவிடுங்கள், அளவுக்கு மீறிய குற்ற உணர்வுக்குள்ளாக வேண்டாம், சூழ்நிலையை மேலும் சாதகமாக்குங்கள்.

6. வருங்காலத்தைப் பற்றிய கவலை
தொலைநோக்கு சிந்தனை இருக்கலாம். ஆனால், கவலை இருக்கக்கூடாது. மகிழ்ச்சியற்றவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். ஒன்று, அவர்கள் கடந்த கால தவறுகளை நினைத்து கவலைப்படுகிறார்கள் அல்லது எதிர்காலத்தை நினைத்து பயம் கொள்கிறார்கள். நிகழ்காலத்தில் அவர்கள் வாழ்வதே இல்லை. வாழ்க்கையில் நமக்கு வாய்த்த அழகான தருணங்களை நினைத்து நிகழ்காலத்தில் வாழுங்கள். கடவுள் நமக்கு கொடுத்த திறமைகள், திறன்களை முழுமையாக பயன்படுத்தி முடிந்த அளவு சந்தோஷமாக வாழ முயற்சி செய்யுங்கள். எதிர்காலம் நன்றாகவே இருக்கும்.

7. எல்லாம் பய மயம்
தேர்வு பயம், நேர்காணல் பயம், மேடை பயம் இப்படி எங்கும் எதற்கும் பயந்துகொண்டே இருப்பதும் இவர்களுடைய பழக்கம். பயந்தால் சந்தோஷம் கிடைக்காது; சோகம்தான் தேடி வரும். பயம் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தக்கூடியது. தேர்வு பயம் என்றால் தனக்குத்தானே நிறைய தேர்வுகள் வைத்துக் கொண்டு அந்த பயத்திலிருந்து விடுபடலாம். நேர்காணல் பயத்துக்கு அதிகமான நேர்காணல்களில் பங்கு கொண்டால் தானாகவே பயம் போய்விடும். தைரியமான மேடைப் பேச்சுக்கு கண்ணாடி முன்னால் நின்று பேசிப் பார்த்தால் மேடை பயம் போயே போச்சு. பயம் நம் சந்தோஷத்துக்கு எதிரி. அதிலிருந்து முதலில் வெளியே வாருங்கள்.

8. புறம் கூறுதல்
மற்றவர்களைப்பற்றி புறம்பேசுபவர்கள், தங்களுடைய பாதுகாப்பின்மையையும், எதிர்மறைத்தன்மையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்கிறார்கள். இதுவே வெற்றியாளர்களைப் பாருங்கள். அவர்கள் மற்றவர்களைப்பற்றி கண்டுகொள்ளாமல் தங்கள் வழியில் முன்னோக்கி செல்பவராகவே இருப்பார்கள். புறம்பேசுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. பெரியவர்களின் இத்தகைய பண்பை பார்க்கும் குழந்தைகளும் நாளை இதே பழக்கத்தை கடைபிடிப்பார்கள்.

9. காழ்ப்புணர்ச்சி
மற்ற எதிர்மறை உணர்ச்சிகளைப்போலவே, காழ்ப்புணர்ச்சியும் நம் முதுகில் தேவையற்ற சுமையைக் கூட்டிவிடும். மற்றவர்களின் செயல்கள் நியாயமாக இருந்தாலும் அவர்கள் மீது வெறுப்படைகிறோம். இதனால் அவர்களுக்கு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. உங்கள் சந்தோஷம்தான் கெடும். தவறு செய்திருந்தாலும் மன்னியுங்கள், மறக்கக் கற்றுக் கொள்ளுங்கள் அல்லது அதை புறக்கணித்துவிட்டு உங்கள் வழியில் சென்று கொண்டிருங்கள்.

10. பிரச்னைகளைப் பெரிதாக்குவது...
எளிதில் உணர்ச்சி வசப்படுவதால் பண்பையும், சந்தோஷத்தையும் இழந்துவிடுகிறோம். சின்ன விஷயங்களைக்கூட பெரிதுபடுத்தி கூச்சல், சண்டை, அழுகை என ஒரு உணர்ச்சிமயமான நாடகம் நடந்து முடிந்துவிடும். மாறாக சூழலை எளிதாக்கி, பிரச்னையை குறைக்க முற்படலாம் அல்லது பிரச்னைக்கான தீர்வை கண்டறியலாம். பின்னொரு சமயத்தில் அந்த நிகழ்வை நினைத்துப்பார்த்தால் அது நமக்கே சங்கடத்தை கொடுக்கும். எதிர்மறையானவர்கள் கடைபிடிக்கும் இந்த 10 பழக்கங்களை கைவிட்டால், எப்போதும் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சிதான்.

- என்.ஹரிஹரன்