Forest bathing



 டிரெண்டிங்

ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் வாழ்வதற்கான வழிகளை எல்லா வகையிலும் தேடிக் கொண்டிருக்கிறது இன்றைய நவீன உலகம். அப்படி சமீபகாலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, பிரபலமாகிவரும் ஒரு சிகிச்சைமுறைதான் Forest bathing என்கிற வனக்குளியல். மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு அளிக்கக் கூடியது இந்த சிகிச்சை என்பதால் வெளிநாட்டவர்கள் இதை மிகுந்த ஆசையோடு செய்து வருகிறார்கள். அப்படி என்ன வனக்குளியலில் விசேஷம்? என்னதான் செய்வார்கள்? மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் மேற்கொள்ளும் நடைப்பயணம்தான் வனக்குளியல். வனங்களின் நடுவே பயணம் மேற்கொள்ளும்போது நம்முடைய தேவையற்ற சிந்தனைகள் குறைந்து மனம் அமைதியாகிறது என்பதும், வனங்களிலிருந்து வீசும் காற்று உடலுக்குப் புத்துணர்வு தருகிறது என்பதும்தான் இதன் அடிப்படை ரகசியம்.

முக்கியமாக மரங்கள், தாவரங்கள், காய்கள், பழங்களிலிருந்து வெளிப்படும் Phytoncide எனப்படும் தாவர எண்ணெய் மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தருகிறது என்று வனக்குளியல் பற்றி ஆய்வாளர்கள் விளக்கியிருக்கிறார்கள். Phytoncide காரணமாக ரத்த அழுத்தம் குறைகிறது, இதயத்துடிப்பு சீராகிறது, மன அழுத்தத்துக்குக் காரணமான கார்ட்டிசோல் ஹார்மோன் உற்பத்தி கட்டுப்படுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும் வனக்குளியலின் பயன்களைப் பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

குறிப்பாக, ஜப்பானியர்கள் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். 2004 முதல் 2012 வரையான காலக்கட்டத்தில் ஜப்பான் அரசாங்கம் வனக்குளியல் பற்றிய உடலியல், உளவியல்ரீதியான விளைவுகளை அறிவதற்காக மட்டுமே 4 மில்லியனுக்கும் அதிகமான டாலர்களை செலவழித்திருக்கிறது, 48 வகையான புதிய சிகிச்சை முறைகளையும் வடிவமைத்திருக்கிறது என்றால் பாருங்களேன்! வெளிநாடுகளில் உருவான இந்த வனக்குளியல் தற்போது பெங்களூரு ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கும் கட்டாயமாகிவிட்டதாம்.
மறுபடியும் காட்டுக்கே போயிருங்க மக்களேன்னு சொல்ற மாதிரி தோணுதா?!
Same blood...

- இந்துமதி