டயட் என்பது டயட் அல்ல... ஜீரோ என்பது ஜீரோவும் அல்ல!



டயட் டரிங்க்ஸ், டயட் உணவுகள், ஜீரோ கலோரி என்ற பெயரில் மார்க்கெட்டில் விற்கப்படும் பல பொருட்கள் உண்மையில் டயட்டே கிடையாது. அவை எடையையும் குறைப்பதில்லை. ஆரோக்கியத்துக்கும் உதவுவதில்லை. மாறாக, அவை எடையை அதிகரிப்பதோடு, நீரிழிவுக்கும் காரணமாக அமைகின்றன. அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு கள் தரும் அதிர்ச்சி உண்மை இது.

இதற்குக் காரணம் என்ன? நம் மூளைதான். எத்தனை கலோரிகள் இந்தப் பொருளில் அடங்கியிருக்கின்றன என்று நம் மூளையைக் குழப்பும் வகையில் இவை தயாரிக்கப்படுவதுதான் காரணம். தன்னை ஏமாற்ற நினைத்தால் மூளை சும்மா இருக்குமா? வளர்சிதை மாற்றத்தின் அளவையே குறைத்து விடுகிறது அது. உணவின் இனிப்புத்தன்மைக்கும் அதன் கலோரி அளவுக்கும் பொருத்தம் இல்லாதபோது (Mismatch), மூளையானது அந்த உணவிலிருந்து கிடைக்கும் சக்தியை எரியவிடாமல் தடுத்து விடுகிறது. இயற்கையாகவே, இனிப்பு என்பது ஆற்றல்... அதிக இனிப்பு என்பது அதிக கலோரி... அதனால், நம் மூளை இனிப்பையும் ஆற்றலையும் சேர்த்தே பாவிக்கும் வகையிலேயே பரிணமித்திருக்கிறது. அப்படி, இனிப்போடு சேர்ந்து அதற்கான கலோரி வரை குழம்பிப் போகிறது.  எரிப்பதற்கு மிகக்குறைவான கலோரிகளே உள்ளன என நினைக்கிறது. அதனால்தான் வளர்சிதை மாற்றம் என்கிற மெட்டபாலிசம் செயல் பாட்டையும் குறைக்கிறது. இதனால்தான் செயற்கை இனிப்புகள், ஜீரோ கலோரி சர்க்கரை என்றெல்லாம் சொல்லப்படுகிற பொருட்கள் சேர்க்கப்பட்ட டயட் பானங்களும், இனிப்பு வகைகளும் ரத்த சர்க்கரை அளவை எகிறச் செய்கின்றன; நீரிழிவையும் தூண்டுகின்றன.

`கலோரி என்பது கலோரி மட்டுமல்ல’ - இப்படி யேல் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் வேடிக்கை போல சொன்னாலும், உண்மை கொஞ்சம் கசப்பானது. அதிக கலோரி மட்டுமே வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்பது தவறு. இந்த வினையில் கலோரியின் பங்கு பாதிதான். மீதி பாதிக்கு அது இனிப்புச்சுவை என மூளை அறிந்துகொள்வதே போதுமானது. இப்படியிருக்கையில், ஜீரோ கலோரி என்று மூளையை ஏமாற்றி உண்ணப்படும் போது குழப்பம் ஏற்படுவது நியாயம்தானே? இயற்கையான பொருட்களை ஏற்று, சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறன் நமது உடலுக்கு உண்டு. ஆனால், இப்போது நாம் எடுத்துக்கொள்கிற ஜீரோ கலோரி போன்ற நவீன மயமாக்கப்பட்ட உணவுகள் நம் உடலுக்குப் பழக்கப்படாதவை. இனிப்புச்சுவையும் அதற்கான ஆற்றலும் மேட்ச் ஆகாதபோது, குறைவான அளவு வளர்சிதை மாற்றமே நிகழ்கிறது. அதோடு, குறிப்பிட்ட உணவு பற்றிய பலவீனமான, துல்லியமற்ற சமிக்ஞைகளே மூளையை அடைகின்றன. வளர்சிதை மாற்றத்தை முறையாக நிகழவிடாமல் செய்ய இதில் ஏதாவது ஒன்றுகூட போதும்.

15 நபர்களை டயட் பானம் பருகச் செய்து, அவர்களின் மூளை ஸ்கேன் செய்யப்பட்டது. அவர்களின் உடலில் எவ்வளவு ஆற்றல் எரிக்கப்படுகிறது என்பதும் ஆராயப்பட்டது. டயட் பானத்துக்குப் பதிலாக மற்ற பானங்கள் அளித்தும் இதே சோதனை செய்யப்பட்டது. இனிப்புச்சுவைக்கும் கலோரிக்கும் ஒருவிதமான சமமற்ற நிலை இருந்ததால், டயட் பானங்கள் மற்றும் உணவுகளை எடுத்துக்கொண்டபோது, அவற்றிலுள்ள கலோரிகளால் வளர்சிதைமாற்றச் செயல்பாட்டினைத் தூண்ட முடியவில்லை. மூளையிலுள்ள ரிவார்ட் சர்க்யூட் அமைப்புக்கும் கலோரி அளவு சரியாகப் பதிவாகாததால், அளவுக்கு அதிகமாக உணவு அல்லது பானத்தை உட்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது, இதனால் ஏற்படும் விளைவுகள்தான் அச்சப்படச் செய்கின்றன. எடை குறைப்புக்காக எடுத்துக்கொள்ளப்படும் இந்த டயட் உணவு, பானங்களால் எடை அதிகரிக்கிறது. நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இதுவே காரணமாகிறது. இந்த ஆராய்ச்சி இன்னும் தொடர்ந்தாலும் கூட, இப்போதே வெளிப்படையாகத் தெரியும் உண்மை ஒன்று உண்டு. இயற்கை அல்லாத செயற்கையான ஒரு பொருளால் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்துவிட முடியாது என்பதுதான் அது. அதனால் இனிப்புச்சுவையை விடவும் எது முக்கியம் என நாம் முடிவெடுக்க வேண்டும்!

- கோ.சுவாமிநாதன்