மன அழுத்தம் என்ன செய்யும்?



பெண்களுக்கு ஏற்படும் செரிமானக் கோளாறில் ஆரம்பித்து இதய நோய்கள் வரை எல்லாவற்றுக்கும் மன அழுத்தம் காரணமாகலாம் என்றால் நம்புவீர்களா? ஆமாம்... மன அழுத்தம் என்பது கிட்டத்தட்ட ஆளையே விழுங்கும் அபாயமான பிரச்னைதான். மன அழுத்தம் அதிகரிக்கிறபோது மறைமுகமாக ஏற்படுகிற உடல்நலக் கோளாறுகள் பற்றியும், அவற்றிலிருந்து மீள்வதற்கான வழிகள் பற்றியும் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

‘‘பெண்களின் உடலில் சுரக்கும் சில ஹார்மோன்களும், அவர்களது மூளை ரசாயனமும் மன அழுத்தத்தில் இருந்து அவர்களுக்கு ஓரளவுக்குப் பாதுகாப்பு தருகின்றன. ஆனாலும் மன அழுத்தத்துக்கு ரியாக்ட் செய்வதில் பெண்களின் உடல் விசித்திரமானது.

உண்ணுதல் கோளாறுகள்
அனோரெக்சியா மற்றும் புலிமியா போன்ற பிரச்னைகள் ஆண்களைவிட பெண்களைத் தாக்கும் வாய்ப்புகள் 10 மடங்கு அதிகம். செரட்டோனின் என்கிற ஹார்மோன் குறைபாடே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு செரட்டோனின் அளவைத் தூண்டும் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.

வயிற்றுக் கோளாறுகள்
மன அழுத்தம் அதிகரிக்கிறபோது அளவுக்கதிகமாக சாப்பிடத் தோன்றலாம். ஜங்க் உணவுகளின் மீது ஈர்ப்பு உண்டாகலாம் அல்லது சாப்பாட்டின் மீதே வெறுப்பை ஏற்படுத்தலாம். மன அழுத்தத்தால் வயிற்று உப்புசம், வயிற்றுப்பிடிப்பு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம். அதன் தொடர்ச்சியாக எடை ஏறலாம் அல்லது குறையலாம்.

சருமப் பாதிப்புகள்
மன அழுத்தம் காரணமாகவும் சருமத்தில் பாதிப்புகள் வரலாம். சிவந்த தடிப்புகள் போன்று தென்படலாம்.

மனநிலையில் மாற்றங்கள்
எப்போதும் எரிச்சலான மனநிலையில் இருக்க வைக்கும் அல்லது மன அழுத்தம், மனச்சோர்வு அதிகரிக்கும். கோபம், வெறி போன்ற சில உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் ஆண்களைவிடப் பெண்களுக்குத் திறமை அதிகம். ஆனாலும் அந்த உணர்ச்சிகளை அடக்கி வைப்பதால் ஏற்படுகிற மன அழுத்தம் பெண்களுக்கே அதிகம்.

தூக்கப் பிரச்னைகள்
மன அழுத்தத்தை விரட்டுவதில் தூக்கத்துக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் அதே மன அழுத்தம் அளவு கூடும்போது தூக்கமின்மையை ஏற்படுத்தலாம். படுத்த உடன் தூங்குவதில் அல்லது ஆழ்ந்த உறக்கம் கொள்வதில் பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதய பாதிப்பு
அதீத மன அழுத்தம் என்பது ஒட்டுமொத்த இதயநலனையும் பாதிக்கக்கூடியது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்து, பக்கவாதம் முதல் மாரடைப்பு வரை ஏற்படுத்தும் அளவுக்கு அது அபாயமானது.

குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி
எப்போதும் மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள் வருவதைப் பார்க்கலாம். மன அழுத்தத்துக்குக் காரணமான மூளையின் ரசாயனங்கள் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும்.

புற்றுநோய்
பருமன் முதல் பக்கவாதம் வரை எல்லாவற்றுக்கும் காரணமாகச் சொல்லப்படுகிற மன அழுத்தம் புற்றுநோய்க்கும் ஓரளவு காரணமாவதாக சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. கட்டுப்படுத்தாத மன அழுத்தத்தினால் பெண்களுக்கு மார்பகம் மற்றும் கர்ப்ப வாய் புற்றுநோய்களுக்கான அபாயங்கள் அதிகரிக்கலாம் என்கின்றன ஆய்வுகள்.

மீள்வதற்கான வழிகள்

சரிவிகித உணவுகளை உண்ணுங்கள். துரித உணவுகளையும், அதிகக் கொழுப்புள்ள உணவுகளையும் தவிருங்கள். உணவு, உறக்கம் போல உடற்பயிற்சிகளையும் உங்கள் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக மாற்றுங்கள். நடை, மாடிப்படிகளில் ஏறி இறங்குவது என அந்தப் பயிற்சி எதுவாகவும் இருக்கலாம். உடற்பயிற்சிகள் உடலை மட்டுமின்றி, உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பதை உணர்வீர்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களுக்காக மாதத்தில் ஒருநாளையாவது ஒதுக்குங்கள். அந்த ஒருநாளை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்
கொடுக்காதீர்கள்.

- ராஜி