பார்வையிழப்பின் அறிகுறிகள்



விழியே கதை எழுது

விழித்திரை சிறப்பு சிகிச்சை நிபுணர் வசுமதி வேதாந்தம்


வெ ளிச்சம் உட்பட எதையுமே பார்க்க முடியாத நிலையை பார்வையின்மை என்கிறோம். இதில் Partial blindness வகையில் ஓரளவுக்கு மட்டுமே பார்வை இருக்கும். உதாரணத்துக்கு, உங்கள் பார்வை மங்கலாகத் தெரியும் அல்லது பொருட்களின் வடிவங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் திணறுவீர்கள்.

ஆனால், முழுமையான பார்வையின்மை என்பது உங்களால் எதையுமே பார்க்க முடியாத நிலை... அதாவது இருள் சூழ்ந்த உலகில் வாழ்வது போன்ற நிலை. ஆரோக்கியமான பார்வை உள்ள ஒருவரால் 200 மீட்டர் தொலைவில் உள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும்.
இந்த பார்வையிழப்பின் அறிகுறிகள் என்ன?

முழுமையான பார்வையிழப்பு என்பது ஏற்கெனவே சொன்னது போன்று எதையுமே பார்க்க முடியாத நிலை. பகுதிப் பார்வையிழப்பில் கீழ்க்கண்ட அறிகுறிகளை உணர்வீர்கள்...மங்கலான பார்வைவடிவங்களைத் தெளிவாக வித்தியாசப்படுத்திப் பார்க்க இயலாமை, பொருட்களின் உருவங்கள் நிழல் போன்று தெரிவது, இரவில் பார்வைத்திறன் வெகுவாகக் குறைவது.

குழந்தைகளிடம் காணப்படுகிற அறிகுறிகள்கருவிலிருக்கும்போதே குழந்தையின் பார்வையானது வளரத் தொடங்கிவிடும். ஆனால், 2 வயது வரை அது முழுமையடையாது. 6 முதல் 8 வாரங்களில் குழந்தை ஒரு பொருளையும் அதன் அசைவையும் கவனிக்கத் தொடங்கும். 4 மாதங்களில் குழந்தையின் கண்களானது சரியான வடிவம் பெறும்.குழந்தைக்குப் பார்வையின்மை பிரச்னை இருப்பதன் அறிகுறிகளை சில விஷயங்களை வைத்துக் கண்டறியலாம்.

கண்களைத் தொடர்ச்சியாகத் தேய்த்துக்கொண்டே இருப்பது, வெளிச்சத்தைப் பார்த்தால் கண்களில் அதிகக் கூச்சம் உணர்வது, கண்கள் அதிகமாக சிவந்திருப்பது, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருப்பது, கண்ணின் பாப்பா கருப்பாக இருப்பதற்குப் பதில் வெள்ளையாக இருப்பது, பொருளையோ காட்சியையோ கவனிப்பதில் சிரமம் உணர்வது, 6 மாதங்களுக்குப் பிறகும் குழந்தையின் கண்கள் சரியான வடிவம் பெறாமலிருப்பது...

பார்வையின்மைக்கான காரணங்கள்கண் அழுத்த நோய். இதில் மூளையிலிருந்து கண்களுக்குத் தகவல் அனுப்புகிற ஆப்டிக் நரம்பானது பாதிக்கப்பட்டு பார்வையிழப்பு ஏற்படும். வயதானவர்களுக்கு ஏற்படுகிற Macular degeneration பிரச்னையின் காரணமாக வயதானவர்களுக்குப் பார்வையிழப்பு ஏற்படும். கண்புரை எனப்படுகிற கேட்டராக்ட் காரணமாக ஏராளமானவர்கள் பார்வையிழக்கிறார்கள்.

சோம்பேறிக்கண் எனப்படுகிற பிரச்னையில் பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் இருக்கும். ஒரு கட்டத்தில் பார்வை முற்றிலும் போய்விடும். Optic neuritis என்கிற பிரச்னையில் பகுதியாகவோ முழுவதுமாகவோ பார்வையிழப்பு ஏற்படும்.விழித்திரையைப் பாதிக்கிற Retinitis pigmentosa பிரச்னை அரிதாக சிலருக்குப் பார்வையிழப்பை ஏற்படுத்தலாம். விழித்திரையில் அல்லது ஆப்டிக் நரம்பில் ஏற்படுகிற கட்டியும்கூட பார்வையிழப்புக்குக் காரணமாகலாம்.

குழந்தைகளின் பார்வையிழப்புக்கான காரணங்கள் தொற்று, கண்ணீர் சுரப்பிகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு, கண்புரை, ஸ்ட்ராபிஸ்மஸ் (Strabismus) எனப்படுகிற மாறுகண் பார்வை பிரச்னை, சோம்பேறிக் கண், குறைமாதப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்கிற ஆர்.ஓ.பி என்கிற Retinopathy of prematurity, குழந்தையின் பார்வை அமைப்பு வளர்ச்சியில் தாமதம்.யாருக்கு ரிஸ்க் அதிகம்?

கண் நோய்கள் உதாரணத்துக்கு Macular degeneration போன்று ஏதேனும் உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், பக்கவாதம் உள்ளவர்கள், கண்களில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், ஆபத்தான கருவிகள் அல்லது கெமிக்கல்கள் இருக்கும் இடங்களில் வேலை பார்ப்பவர்கள், குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள்.எப்படி கண்டுபிடிப்பது?

கண் மருத்துவர் கண்களைப் பரிசோதித்து பார்வையின்மைக்கான காரணத்தைக் கண்டறிவார். அது பகுதி பார்வையின்மையா முழுமையான பார்வையின்மையா எனக் கண்டறிவார். சில சோதனைகளைப் பரிந்துரைப்பார். கண் தசைகளைப் பரிசோதிப்பார். வெளிச்சத்துக்கு அவை எப்படி ரியாக்ட் செய்கின்றன எனப் பார்ப்பார். ஸ்லிட் லேம்ப் என்கிற பிரத்யேகக் கருவியைக் கொண்டு கண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பரிசோதிப்பார்.

குழந்தைகளின் பார்வையிழப்பானது அவர்கள் பிறந்த உடனேயே பரிசோதிக்கப்படும். குழந்தையின் 6-வது மாதத்தில் கண் மருத்துவரிடம் காட்டி அதன் கண்களின் அமைப்பு மற்றும் வடிவம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
தீர்வுகள் என்ன?

கண்ணாடி, கான்டாக்ட் லென்ஸ், அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள்.நிரந்தரப் பார்வையிழப்புக்கான நம்பர் ஒன் காரணம் கேட்டராக்ட் எனப்படுகிற கண்புரை. ஆனால் அதிர்ஷ்டவசமாக இதை சரியான நேரத்து முறையான சிகிzசையால் குணப்படுத்திவிட முடியும். சரியாக்கவே முடியாது என்கிற பார்வையிழப்பு உறுதி செய்யப்பட்டால் குறைவான பார்வைத் திறனுடன், அந்தக் குறைபாட்டுடன் வாழ்க்கை எளிதாக்கிக் கொள்கிற வழிகளை மருத்துவர் சொல்லித் தருவார்.

உதாரணத்துக்கு பொருட்களைப் பெரிதுப் படுத்திப் பார்க்கும் கண்ணாடிகளைப் பரிந்துரைப்பார். ஆடியோபுத்தகங்களைப் பழகிக்கொள்ள அறிவுறுத்துவார்.தவிர்க்கும் வழிகள்அடிக்கடி முறையான கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கண் அழுத்தம், கண் புரை போன்ற பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைகள் மேற்கொண்டால் பார்வையிழப்பைத் தவிர்க்க முடியும். பிறந்த குழந்தைக்கு உடனே கண் பரிசோதனை மேற்கொள்ளவும். சந்தேகங்கள் இருந்தால் 6 மாதங்களில் ஒரு முறையும் 3 வயதில் இன்னொரு முறையும் பிறகு வருடம் ஒருமுறையும் கண் பரிசோதனை மேற்கொள்ளலாம்.

(காண்போம்!)

எழுத்து வடிவம்: எம்.ராஜலட்சுமி