GST யால் மருந்து தட்டுப்பாடு அபாயம்?!



சர்ச்சை

கடந்த ஜூலை முதல் தேதியிலிருந்து இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையால், தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. உண்மை நிலவரம் என்னவென்று மருத்துவ வட்டாரத்தில் விசாரித்தோம்...

‘பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பின் காரணமாக மருந்துப் பொருட்களை பில்லிங் செய்வதில் மென்பொருள் சார்ந்த பிரச்னைகள் உள்ளது. தமிழகத்தில் மருந்துப் பொருட்கள் விற்பனையாளர்களும், விநியோகஸ்தர்களும் தங்களிடம் இருப்பு வைத்துள்ள மருந்துப் பொருட்களை ஜூலை 1-ஆம் தேதிக்கு முன்னர் விற்று தீர்த்து விட்டனர்.

மேலும் மருந்துகள் மீதான புதிய வரிவிதிப்பு வீதங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கலால் சில தினங்களுக்கு மருந்துப் பொருட்கள் பில்லிங் மற்றும் மருந்து விநியோகம் போன்றவற்றை நிறுத்திவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மருந்து விற்பனையாளர்கள் தங்களிடமுள்ள பழைய கையிருப்பு மருந்து களை மருந்து உற்பத்தியாளர்களுக்கு திருப்பி அனுப்புவதா அல்லது மருத்துவமனைகளிடம் விற்பதா என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழலும் ஓர் காரணமாக இருக்கிறது.

இதனால் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அவசர சிகிச்சை பெறும் நோயாளிகள் தங்களுக்கான மருந்துகளை மருந்தகங்களில் வாங்கச் செல்கின்றபோது, மருந்துகள் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்’’ என்று மருத்துவர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

‘சென்னையிலுள்ள பெரிய அளவிலான மருந்தகங்கள் தங்களிடமுள்ள மருந்துகள் கையிருப்பை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே அதிகப்படுத்தியது. ஆனால் மற்ற பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் இருக்கக்கூடிய மருந்தகங்களின் நிலைமை சிரமத்திற்குரியதாகவே உள்ளது’ என்கிறார் சென்னையில் 700 மருந்தகங்களுக்கு மருந்துப் பொருட்களை விநியோகம் செய்துவரும் சாந்தி சந்த்.

இந்த மருந்து தட்டுப்பாடு செய்திகள் பற்றி தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்...‘‘ஜி.எஸ்.டி. என்பது மத்திய அரசின் வரிவிதிப்புமுறை என்பதால் எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம்தான் மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்கிறது.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையால் மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எந்த ஒரு தகவலும் இதுவரை எங்கள் கவனத்துக்கு வரவில்லை. அப்படி நீங்கள் சொல்வது போல பிரச்னைகள் இருக்குமானால், அதற்குரிய அதிகாரிகளோடு இணைந்துபேசி அதை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுப்போம்’’ என்கிறார். மருந்து தட்டுப்பாடு நிஜமாகவே ஏற்படாமல் இருந்தால் சரி!

- க.கதிரவன்