Think like a BOSS



தன்னம்பிக்கை

படிப்பு முடிந்து, முதன்முதலாய் வேலைக்கு சேரும் இளைஞராக இருந்தாலும் சரி... பதவி உயர்வுக்காக காத்திருப்பவராக இருந்தாலும் சரி... ‘பாஸ்’ நாற்காலியில் ஒருநாள் அமர்வதுதான் லட்சியக் கனவாக இருக்கும். ஆனால், அந்த கனவு நனவாக வெறும் கடின உழைப்பு மட்டுமே போதாது என்கிறார்கள் வாழ்வியல் மேலாண்மை நிபுணர்களும், பிரபல உளவியலாளர்களும்.

தாங்கள் எடுத்துக் கொண்ட லட்சியத்தில் ஜெயிக்க கடின உழைப்புடன் சிந்திக்கும் முறையிலும் மிகப்பெரிய மாற்றம் தேவை. அந்த சிந்தனை மாற்றத்தில் மிக முக்கியமானது என்று நிபுணர்கள் குறிப்பிடும் தந்திரம்... பாஸ் ஆக வேண்டும் என்று நினைத்த உடனே பாஸ் மாதிரியே யோசிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது...

இந்த அணுகுமுறையை Think like a boss என்றே குறிப்பிடுகிறார்கள். சரி... எப்படி ஒரு பாஸ் மாதிரி யோசிப்பது? வாருங்கள் நிபுணர்கள் அலசி ஆராய்ந்து கூறியிருப்பதைக் கேட்போம்...

கழுகுப்பார்வை செயல், பொருள், சொல் இவற்றின் மீதான தனிப்பட்ட பார்வையே ஒரு முதலாளியை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. எந்த இடத்தில் இருக்க வேண்டும்? எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதில் தெளிவு இருந்தால்தான், அதற்கான வேலைகளை செய்ய முடியும்.

எதிலும் தொலை நோக்குப் பார்வை இருந்தால் மட்டுமே வெற்றியை நோக்கிய முழு கவனமும் செல்லக்கூடிய அதே நேரத்தில், அதில் நேர்மறையான கண்ணோட்டமும் அவசியம். ஒரு விஷயம் தங்களுக்கு சாத்தியம் என்பதில் அசாத்திய நம்பிக்கை வைத்து, தொடர்ந்து அதற்கான வாய்ப்புகளை தேடுவதாலேயே எதிர்மறை எண்ணங்களை உடையவர்களைக் காட்டிலும், நேர்மறை சிந்தனையாளர்களே அதிகம் வெற்றிவாய்ப்பை பெறுகிறார்கள்.

மனிதர்களை வெல்லுங்கள்சுற்றியிருப்பவர்களிடம் பழகும் விதம், அவர்களைக் கையாளும் முறை போன்றவைதான் ஒரு நல்ல ‘Boss’-ஐ அடையாளம் காட்டுகிறது. வேலைசெய்யும் இடமோ அல்லது சொந்த வியாபாரமோ எதுவாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் திறமைகளை மேம்படுத்துவது மற்றும் அவர்களுக்கு இணையாக பணியாற்றுவதன் மூலம்தான் அவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். இதை மிக முக்கியமான விஷயமாக நினைவில் கொள்ள வேண்டும். மக்களோடு இணைந்து அவர்களை கையாள்வதில் வெற்றி பெற்றுவிட்டால் முதலாளியாக மட்டுமல்ல, தங்களின் தலைவனாகவும் கொண்டாடத் தொடங்கிவிடுவார்கள்.

போட்டி அவசியமே!

காலையில் ஆபீஸ் போனோமா, ஏதோ வேலையை செய்தோமா, வீட்டுக்கு வந்தோமா என வழக்கமான செயல்களில் தேங்கிவிடாதீர்கள். இந்த எண்ணம் ஒருபோதும் உங்களை முன்னேற்றாது. இன்று உங்களுக்கு Bossஆக இருப்பவர் ஒருநாள் உங்களோடு வேலை செய்தவராகத்தான் இருப்பார். தன்னுடைய தனித்தன்மையை நிலை நிறுத்தியதால்தான் இன்று அவருக்கு தலைமைப் பதவி கிடைத்திருக்கும். எப்போதும் வசதியான வட்டத்துக்குள்ளாகவே சுழன்று கொண்டிருக்காதீர்கள். சற்றே வெளிவந்து பந்தயத்தில் கலந்து கொள்ளுங்கள்.

நம்பினால் நடக்கும்எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் அதில் முழு நம்பிக்கை வையுங்கள். நம்பிக்கையோடு ஒரு செயலைச் செய்யும்போது பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வீர்கள். அதே நேரத்தில் மிகச்சிறப்பான முறையில் அந்த செயலை செய்து முடிப்பீர்கள். அந்த நம்பிக்கை கொடுக்கும் தைரியத்தால் உங்களை மற்றவர் தாழ்வாக உணர்வதை அனுமதிக்க மாட்டீர்கள். நம்பிக்கையே ஒரு நல்ல ‘Boss’க்கான முதல் தகுதி.
கனவு மெய்ப்பட...

நிறைய பேருக்கு இதைச் செய்ய வேண்டும், அதை சாதிக்க வேண்டும் என்ற கனவுகள் உண்டு. ஆனால், அதை செயல்படுத்த சரியான நேரத்தை எதிர்பார்த்தபடியே தேங்கி விடுவார்கள். நடைமுறையில் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு இதுதான் சரியான நேரம் என்று கிடையாது. பின் எதற்காக தள்ளிப் போட வேண்டும்? கனவு காண்பவராக மட்டும் இல்லாமல் செயல்வீரராக இருங்கள்.

தடைகளைத் தாண்டுங்கள்

வெற்றியை நோக்கி செல்லும் பாதையில் தடைகள் இருக்கத்தானே செய்யும். இவ்வுலகில் எதுவும் எளிதில் கிடைத்துவிடாது. பொறுமை, நிதானம்,  நிலைத்த தன்மையுடன் முன்னேறுவதில் மட்டும் கவனம் இருக்கட்டும்.

சுய தூண்டுதல்

நீங்கள் தொழிலாளியாக இருந்தால் உங்களின் மேலதிகாரியோ, முதலாளியோ ஒரு வேலையை இப்படிச் செய்ய வேண்டும், இந்த நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டுதலைச் சொல்லி உங்களை ஊக்கப்படுத்துவார். ஆனால், நீங்களே ‘பாஸ்’ என்றால் யார் உங்களை ஊக்கப்படுத்துவார்? நீங்கள்தான் உங்களுக்கு எல்லாமும். எனவே, நீங்களே எல்லைக்கோடு அமைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.

உங்களின் சுய ஊக்கத்தால்தான் அனைத்தும் இயங்கும். இதே கொள்கையை சுய வாழ்க்கையிலும் கடை பிடியுங்கள். நம்மை ஒருவர் ஊக்கப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், வாய்ப்புகளை தேடத் துவங்குங்கள். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள். 

நிறைவாக...

உங்கள் எண்ணங்களே உங்கள் செயல்களை வடிவமைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆமாம்... வாழ்க்கையில் முன்னேற, Boss-ஐப் போன்ற மனநிலையில் செயல்பட்டால்தான், நீங்கள் மற்றவர்களிடமிருந்து தனித்து அடையாளம் காணப்படுவீர்கள். அந்த மனோநிலைதான் உங்களை நிஜமாகவே பாஸ் ஆக மாற்றும்!

- இந்துமதி