வாங்க அழலாம்...



விநோதம்

Crying Club அக்கப்போர்


யோகா கிளப், சுற்றுச்சூழல் கிளப், நகைச்சுவை கிளப், டிரக்கிங் கிளப் என்றுதான் இதுவரை கேள்விப்பட்டிருப்போம். Crying club பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆமாம்... அழுவதற்காகத்தான் ஒரு கிளப் வைத்திருக்கிறார்கள். அதுவும் குஜராத் மாநிலம் சூரத்தில் இந்த க்ரையிங் கிளப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.

சமீபத்தில் தொடங்கிய இந்த கிளப்பில் மருத்துவர்கள், என்ஜினியர்கள், குடும்பத்தலைவிகள், மாணவர்கள், ஐ.டி. ஊழியர்கள் என பல தரப்பினரும் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை உறுப்பினர்கள் கிளப் கூடும் என்றும், அனைவரும் கலந்துகொண்டு தங்களுடைய மனக்கவலைகள், குடும்ப பாரம் மற்றும் வேலைச்சுமையால் ஏற்படு கிற மன அழுத்தம் போன்றவற்றை அழுது தீர்த்துக் கொள்ளலாம் என்று அஜெண்டா வைத்திருக்கிறார்கள்.

‘‘மனித ஆரோக்கியத்துக்கு சிரிப்பு எப்படி முக்கியமோ, அதேபோல் அழுகையை வெளிப்படுத்துவதும் முக்கியம். தனக்கு தேவையானதை கேட்டுப்
பெறவும், தன் உடல்பிரச்னைகளை குழந்தை அழுகையாக வெளிப்படுத்திவிடுகிறது. அதனால் அதற்கு எந்த மன அழுத்தமும் இல்லை. நாமோ வளர்ந்த பிறகு உணர்வுகளைக் கட்டுப்படுத்துகிறோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தயங்குகிறோம். அதனாலேயே மன அழுத்தத்துக்கு ஆளாகிறோம்.

இந்த எண்ணத்தை மாற்றுவதற்கு சரியான நேரம் இதுதான். இப்படி ஒரு கிளப்பை மக்கள் விரும்புவார்களா என்ற சந்தேகத்துடன்தான் ஆரம்பித்தோம். ஆனால், இதற்கு கிடைத்த வரவேற்பு எங்களை பிரமிப்படையச் செய்துவிட்டது’’ என்கிறார் கிளப்பை ஆரம்பித்த லாஃப்ட்டர் தெரபிஸ்ட்டான கமலேஷ்.இதுபோன்ற க்ரையிங் கிளப்புகள் ஏற்கெனவே இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் உண்டு. இந்தியாவில் இதுதான் முதல் முறை.

- விஜயகுமார்