இது ஆத்மாவுக்கான சிகிச்சை!



பாலியேட்டிவ் கேர்

பாலியேட்டிவ் கேர் என்கிற வலி மற்றும் ஆதரவு சிகிச்சை எந்தெந்த நோய்களுக்கு எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதைக் கடந்த இதழ்களில் பார்த்தோம். மரணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் இருக்கும் ஒருவர், இன்னும் சில நாட்களாவது அவர் நம்முடன் வாழ்ந்துவிட மாட்டாரா என்கிற ஏக்கத்தைக் கொடுக்கும். அந்தக் கடைசி நாட்களின் எண்ணிக்கையை சற்றே நீட்டிக்கச் செய்கிற பாலியேட்டிவ் கேர் சிகிச்சை மனிதவாழ்க்கையின் மாபெரும் வரம்.

பாலியேட்டிவ் கேர் சிகிச்சையை வெறும் வலி/ஆதரவு சிகிச்சை என்று சொல்வதைவிடவும் ஆன்ம சிகிச்சை என்பது இன்னும் சரியானதாக இருக்கும். உங்கள் வீட்டிலுள்ள யாருக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்கோ இந்த சிகிச்சை தேவையானதாக இருக்கலாம். அவர்களுக்கு இதைப் பற்றி எடுத்துச் சொல்வதுடன், சிகிச்சைக்குத் தயார்படுத்த வேண்டியதும் உங்கள் பொறுப்பு.பாலியேட்டிவ் கேர் சிகிச்சைக்குத் தயாராகும் நபர் மருத்துவரை சந்திப்பதற்கு முன் செய்ய வேண்டியவை.

*சம்பந்தப்பட்ட நோயாளிக்கு என்ன நோய் என்கிற தகவல். அதனால் அவர் அனுபவிக்கிற பிரச்னைகள்... அந்த அறிகுறிகள் அவரது தினசரி நடவடிக்கைகளையே பாதிக்கிற அளவுக்குக் கொடுமையாக இருக்கிறதா?*தனது நோய்க்காக அவர் எடுத்துக் கொள்கிற மருந்துகள் மற்றும் சப்ளிமென்ட்டுகளின் விவரங்கள்.

*பாலியேட்டிவ் கேர் சிகிச்சை தரப்போகிற மருத்துவரை சந்திக்கிறபோது தன்னுடன் குடும்பத்தினர் அல்லது நண்பர் யாரையேனும் துணைக்கு அழைத்துச் செல்லுதல்.

பாலியேட்டிவ் கேர் என்பது நோயின் பிடியில் சிக்கித் தவிக்கும் நபருக்கு எந்த நிலையிலும் ஆறுதல் அளிக்கிற ஒன்று. எனவே, எந்தக் காரணத்துக்காக ஒருவருக்கு இந்த சிகிச்சை தேவைப்படுகிறது என்பதில் தெளிவு வேண்டும். சிலருக்கு நோயின் ஆரம்ப நிலையிலேயே பாலியேட்டிவ் கேர் சிகிச்சை பயன் தரலாம். வேறு சிலருக்கு மரணத்தை வலியின்றிக் கடக்க உதவலாம். எனவே அது தேவையா, ஏன் தேவை என்கிற தெளிவு முதலில் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு இருக்க வேண்டும்.

பாலியேட்டிவ் கேர் சிகிச்சையில் மிகச் சிறிய அளவில் பக்கவிளைவுகளும் இருக்கலாம். அவற்றைப் பற்றி உங்களுக்கு சிகிச்சை அளிக்கப் போகிற மருத்துவரிடம் முன்கூட்டியே பேசித் தெரிந்துகொள்வதும் அவசியம். ஆரம்பத்திலேயே கொடுக்கப்படுகிற பாலியேட்டிவ் கேர் சிகிச்சை நோயாளியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

வீட்டிலேயே வைத்துக் கொடுக்கப்படுகிற சிகிச்சை, மருத்துவமனையில் அட்மிட் செய்து கொடுக்கப்படுகிற சிகிச்சை என இதில் இரண்டு நிலைகள் உள்ளன. நோயின் தீவிரம், நோயாளியின் மனநிலை, குடும்பத்தாரின் மனநிலை மற்றும் வீட்டுச்சூழல் போன்றவற்றைப் பொறுத்தே இது முடிவு செய்யப்படும்.

உங்களுக்கு பாலியேட்டிவ் கேர் சிகிச்சை தரப்போகிற மருத்துவர் குழு, தேவைப்பட்டால் சப்போர்ட்டிங் சிகிச்சைகள் சிலவற்றையும் உங்களுக்குப் பரிந்துரைக்கலாம். உதாரணத்துக்கு சுவாசப் பயிற்சிகள், தொடு சிகிச்சை, மியூசிக் தெரபி போன்றவை...அதே போன்று உங்களின் உடல் மற்றும் மனநிலையைப் பொறுத்து தேவைப்பட்டால் மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சையையும்
பரிந்துரைக்கலாம்.

பாலியேட்டிவ் கேர் அளிக்கிற மருத்துவக் குழு உங்களிடமும், உங்களது குடும்பத்தாரிடமும் உங்கள் நோயின் தீவிரத்தைப் பற்றியும், அதை சகித்துக்கொண்டு வலியின்றி வாழச் செய்கிற வழிமுறைகள் பற்றியும் பேசுவார்கள். கொடுமையான ஒரு நோயின் பிடியில் சிக்கி வாழ்க்கையின் கடைசி நாட்களைக் கடத்துவது என்பது யாருக்குமே பயங்கரமான அனுபவமாகத்தான் இருக்கும்.

அந்த நிலையில் ஒருவருக்கு ஆயிரம் கேள்விகளும், குழப்பங்களும் இருக்கும். நான் என்ன பாவம் செய்தேன்? நான் இறந்துவிட்டால் அடுத்து என் குடும்பம் என்னவாகும்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் ஆன்மிக ரீதியாகவும் ஆலோசனை தந்து தேற்றுவார்கள் பாலியேட்டிவ் கேர் சிகிச்சை அளிக்கிறவர்கள்.

இவற்றை எல்லாம் படித்து முடித்ததும் பாலியேட்டிவ் கேர் என்பது மரணம் நிச்சயிக்கப்பட்டவர்களுக்கான கடைசிக்கட்ட சிகிச்சை என நினைத்துவிடாதீர்கள். நோயுடன் வாழ்வது என்பது கொடியது. அந்த நோய் தரும் வலிகளையும், வேதனைகளையும் சேர்த்து அனுபவிப்பதென்பது அதைவிடவும் கொடியது. மருந்துகளின் பக்கவிளைவுகளை சகித்துக்கொள்கிற வேதனை தாங்க முடியாதது. இப்படிப்பட்ட அவதிகளில் இருந்து ஒருவரை மீட்டு ஆறுதல் அளிக்கிற சிகிச்சையாக பாலியேட்டிவ் கேரைப் பாருங்கள்.

குணப்படுத்தவே முடியாது என்கிற நிலையில் சில நோய்களுக்கு வெறும் மருந்துகளும், மாத்திரைகளும் மட்டுமே உதவாது. வாழப் போகிற நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிற ஒருவருக்கு மருந்து, மாத்திரைகளைவிடவும் அன்பும், ஆறுதலும், அக்கறையான கவனிப்புமே பெரிய தேவையாக இருக்கும்.

இறக்கப் போகிறோம் என்கிற  கவலையைவிடவும் வாழ்கிற நாட்களை வலியில்லாமல் கடந்தால் போதும்... ஒரே ஒருநாள் வாழ்ந்தாலும் வலியில்லாமல் வாழ்ந்து இறந்தால் நிம்மதி என்கிற மனநிலையே இருக்கும். அவர்களுக்கானதுதான் பாலியேட்டிவ் கேர் என்கிற வலி மற்றும் ஆதரவு சிகிச்சை.

இப்படியொரு சிகிச்சை இருப்பதே இன்னும் நம் மக்களில் பலருக்கும் தெரியவில்லை. நன்றாக வாழ்ந்த நாட்களில் நமக்கு நெருக்கமான ஒருவரை எப்படிப் பார்த்துக்கொண்டோம் என்பது முக்கியமில்லை. வாழ முடியாத நரக நாட்களில் அவரது கடைசி நிமிடங்களை எப்படி வலியில்லாததாக மாற்றிக்கொடுத்தோம் என்பதே முக்கியம். பாலியேட்டிவ் கேர் அதைத்தான் செய்கிறது. உங்களுக்குத் தேவையில்லாவிட்டாலும் வலியால் துடித்துக்கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிற யாருக்காவது உதவ முடிந்தால் இந்த சிகிச்சையைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். புண்ணியம் சேரட்டும்.

- எஸ்.மாரிமுத்து

(முற்றும்!)