புற்றுநோயாளிகளுக்கு இலவச விக்!



நிகழ்ச்சி... மகிழ்ச்சி...

புற்றுநோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்களில் கூந்தல் இழப்பு முக்கியமானது. ஆண்கள் பெரிதாக அதை எடுத்துக் கொள்ளாவிட்டாலும், பெண்களுக்கு கூந்தல் இழப்பு என்பது உளவியல்ரீதியாக மிகப்பெரிய வருத்தத்தைக் கொடுத்துவிடுகிறது. அந்த பிரச்னையை எதிர்கொள்ள இலவச விக்குகள் வழங்கும் நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடந்து மகிழ்ச்சிஅளித்திருக்கிறது.

அடையார் கேன்ஸர் இன்ஸ்டியூட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டின் தலைவரான டாக்டர் சாந்தா இந்த விழாவில் கலந்து கொண்டு விக்குகளை வழங்கினார்.‘‘புற்றுநோய் பாதிப்புக்குள்ளான பெண் யாராக இருந்தாலும், தலைமுடியை இழப்பது என்பது சவாலான விஷயம்.

அந்த சவாலோடு, அதற்கான சிகிச்சைகளையும் இவர்கள் மிகுந்த துணிச்சலுடன் பல காலம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, நோயாளிகளுக்கு விக் என்பது அவசியம் என்பதை உணர்ந்து தன்னார்வலர்கள் ஆதரவோடு இலவசமாக கொடுத்திருக்கிறோம்.

சென்னை கிறிஸ்துவ கல்லூரி(WCC) மாணவியர் தாமாகவே முன்வந்து கொடையாக தந்த கூந்தலில் இருந்து இந்த விக்குகள் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயாளிகளிடம் காணப்படுகிற பயத்தை முதலில் போக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முயற்சி. கீமோதெரபி, ஸ்டெம் செல் தெரபி போன்ற நவீன சிகிச்சை முறைகள் புற்றுநோய் சிகிச்சையில் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது’’ என்று கூறியது புற்றுநோயாளி
களுக்கு இன்னும் நம்பிக்கையளித்த ஒரு வார்த்தை!மகிழ்ச்சி!

- விஜயகுமார்