மெடிக்கலில் என்ன லேட்டஸ்ட்?!



அறிவோம்

புற்றுநோய் சிகிச்சைக்கு கில்லட்டின் தொழில்நுட்பம்ஒரு செல்லை இரண்டாகப் பிளக்கும் தொழில்நுட்பம் 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதுதான். ஆனால், அது ஆராய்ச்சியாளர்களின் வேகத்துக்கு ஒத்துழைப்பதில்லை. எனவே, அமெரிக்காவிலுள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஓர் உயிரினத்தின் செல்லை வேகமாக பிளக்கும் கில்லட்டின்(Guillotine) தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இது இரண்டே நிமிடங்களில் 150 உயிருள்ள செல்களை சரிபாதியாக வெட்டித் தருகிறது. இரண்டாக வெட்டிய செல்களை ஆராய்வது, புற்றுநோய், நரம்பு செல் நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் ஆராய்ச்சியிலும் உதவும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இரைச்சல் கருத்தரித்தலையும் பாதிக்கும் சாலைப் போக்குவரத்துகளால் ஏற்படும் இரைச்சல் அதிகமாக உள்ள பகுதியில் வசிக்கும் பெண்களின் கருத்தரிக்கும் திறன் பாதிக்கப்படுவதாக டென்மார்க்கிலுள்ள மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

டென்மார்க்கில் வசிக்கும் 65 ஆயிரம் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதிக வாகன இரைச்சல் உள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களுக்கு
கருத்தரிக்கும் முயற்சிகள் வெற்றி பெறுவது 6 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை தாமதமாவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, வீட்டுக்குள் வரும் இரைச்சலை முடிந்தவரை தடுப்பது நல்லது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டு செவிப்பறை!

காதுகளின் உட்புறத்தில் ஏற்படும் தொற்றுகளை நீக்கி கேட்கும் திறனை சரிசெய்ய, நோயாளிகள் பலமுறை அறுவை சிகிச்சை செய்துகொள்ள நேர்கிறது. இந்த அவஸ்தைகளைப் போக்க, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் Clear drum என்ற செயற்கை செவிச் சவ்வை உருவாக்கி இருக்கின்றனர்.

8 ஆண்டு ஆராய்ச்சிகளுக்குப் பின், பட்டு இழைகளால் உருவாக்கப்பட்டுள்ள இந்த க்ளியர் ட்ரம், கண்ணாடிக் காகிதம் போலத் தோற்றமளிக்கிறது. இதைப் பொருத்தியதும் தெளிவாக ஒலிகளைக் கேட்கும் திறன் கிடைக்கிறது. இதனால்தான் இதற்கு க்ளியர் ட்ரம் என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

க்ளியர் ட்ரம்மை நுட்பமான அறுவை சிகிச்சை மூலம் நோயாளியின் காதில் பொருத்திய சில நாட்களிலேயே, காதிலுள்ள இயற்கையான செவிப்பறை சவ்வுகள் அதைப் பற்றிக் கொண்டு வளர ஆரம்பித்துவிடுமாம். இதனால் சிகிச்சை முடிந்த பிறகு அடிக்கடி மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர்ஆராய்ச்சியாளர்கள்.

- க.கதிரவன்