பெண்களுக்கு இப்படியும் ஒரு பிரச்னை



தேவை அதிக கவனம்

பெண்களில் சிலருக்குத் தொடை, இடுப்புப் பகுதிகளில் ஆங்காங்கே சிறுசிறு கட்டிகள் உருவாவதுண்டு. இதனால், தோலின் மேற்பகுதி சுருக்கங்களுடனும் பார்ப்பதற்கும் அருவெறுப்பாகவும் தோற்றமளித்து பெண்களின் தன்னம்பிக்கையே சமயங்களில் குலைத்துவிடும். இந்த பிரச்னை எதனால் வருகிறது? இதை சரிசெய்ய முடியுமா? சருமநல மருத்துவர் ருக்மணியிடம் கேட்டோம்...

‘‘மேல் மற்றும் அடித் தோலுக்கு நடு பகுதியில் உள்ள இணைப்பு திசுக்களில் தோன்றும் சிறுசிறு கொழுப்பு கட்டிகள் இவை. இந்த சிறுகட்டிகள் பெரும்பாலும் தொடை, இடுப்பு மற்றும் பின்புறங்களில்தான் காணப்படுகின்றன.

இதற்கு செல்லுலைட்(Cellulite) என்று பெயர். இதனால் தோலின் மேற்பகுதி ஒரே சீராகவும் மென்மையாகவும் இல்லாமல் ஆங்காங்கே தடித்தும் சுருங்கியும் காணப்படும். ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே செல்லுலைட் கட்டிகள் அதிகம் வரும். 85 சதவீதப் பெண்கள், வாழ்வில் ஒரு முறையாவது இந்த செல்லுலைட்டால் பாதிப்படைகின்றனர்.

பருமனானவர்கள், ஒல்லியானவர்கள், டீன் ஏஜ் பெண்கள் என யாரையும் செல்லுலைட் விட்டு வைப்பதில்லை. இதனால் ஆரோக்கியத்துக்கு பாதிப்பில்லை என்றாலும் அழகு சார்ந்த பிரச்னை என்பதாலும், தோலில் ஆங்காங்கே சுருக்கம் ஏற்பட்டு பார்ப்பதற்கு அருவெறுப்பாக இருப்பதால் பல பெண்கள் மன அழுத்தம் அடைகின்றனர்’’ என்றவரிடம் செல்லுலைட் உருவாவதன் காரணம் என்ன என்று கேட்டோம்...

‘‘சாதாரணமாக தோலுக்கு அடியில் கொழுப்பு சேர்வதால் இந்த பிரச்னை உருவாகிறது. சிறிதாக சேரும் கொழுப்பு நாளடைவில் தோலின் திசுக்களில் அழுத்தம் ஏற்படுத்தி, தோலின் மேற்பகுதியில் பஞ்சுபோல சுருங்க ஆரம்பிக்கிறது. இதற்கு கொழுப்பை மட்டுமே காரணம் சொல்ல முடியாது. உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் ஹார்மோன் சமநிலையற்ற தன்மையையும் கூறலாம்.

மேலும் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உணவு சாப்பிடுவது, வளர்சிதை மாற்ற தாமதம், உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை, உடலில் ஏற்படும் நீர்வறட்சி, உடல்பருமன் மற்றும் தடிமனான தோல் போன்றவற்றாலும் செல்லுலைட் ஏற்படுகிறது. சில பருமனான பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரப்பதாலும் கொழுப்பு கட்டிகள் உருவாகலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட், ஜாம், ஊறுகாய் போன்றவற்றில் பதப்படுத்திகள் அதிகமாக சேர்ப்பதால் இவை உடலில் நச்சுப்பொருட்களாக தேங்கிவிடுகிறது. தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களில் சேமித்த தண்ணீரைத்தான் நாம் அதிகம் குடிக்கிறோம். பிளாஸ்டிக் உடலில் ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரக்க காரணமாகிறது. கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு மிகுதியாக இருக்கிறது.

அழகு சாதனப் பொருட்களை பெண்கள் அதிகமாக உபயோகப்படுத்துகின்றனர். இவற்றில் உள்ள ரசாயனங்கள் தோலில் உறிஞ்சப்பட்டு விஷத்தன்மையை அடைவதால் கட்டிகள் உருவாகின்றன. அதனால் கூடியவரை இயற்கைப் பொருட்களை உபயோகிப்பது நல்லது.

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிவது, கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து அதிக நேரம் வேலை செய்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி, வீடியோ கேம்ஸ், லேப்டாப், செல்போன் உபயோகிப்பது போன்ற காரணங்களால் தோலுக்கடியில் கொழுப்பு தங்கி செல்லுலைட் கட்டிகள் உருவாகின்றன.’’

இதற்கான தீர்வு...

‘‘போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அடிக்கடி எழுந்து நடந்து செல்லலாம். கொழுப்பு அதிகமான உணவை தவிர்க்க வேண்டும். தொடை, இடுப்பு, கால் தசைகளுக்கு வலுசேர்க்கும் உடற்பயிற்சி, யோகா செய்வதால் ‘செல்லுலைட்ஸ்’ கட்டிகள் விரைவில் கரையும். ஆலிவ் ஆயில் தடவி, மசாஜ் செய்வதாலும் கரைக்க முடியும். எளிதில் கரைக்க முடியாத கட்டிகளை ஷாக் வேவ் தெரபி, லைப்போசக்‌ஷன் போன்ற அழகு சிகிச்சைகள் மூலம் அகற்றிக் கொள்ள முடியும்.’’

- இந்துமதி