நீராதாரங்களை மீட்கப் போராடும் ஓய்வுபெற்ற ஆசிரியர்!



* சேவை

பருவமழை பொய்த்துப் போய் கிணறு, ஏரி, குளம், ஓடை, ஆறு என எல்லாமும் வற்றி நிலம் வறண்டு, திட்டு திட்டாக வெடித்தும், புதர்கள் மண்டியும் கிடக்கின்றன. பாதி நீராதாரங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. தண்ணீரின்றி மக்கள் தினமும் சாலைக்கு வந்து போராடுகின்ற அவலம் ஒவ்வொரு நாளும் செய்தியாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. பயிர்கள் வாடி விவசாயிகள் தற்கொலை நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. கோடைகாலமும் கைகோத்துக்கொண்டு வாட்டி வதைக்கின்றது.

  மனித வாழ்வுக்கு தண்ணீரின் தேவை இன்றியமையாதது என்பதால்தான் நீர் இன்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். ஆனால், நீராதாரங்களைப் பாதுகாப்பதற்கான செயலில் அரசோ மக்களோ நடவடிக்கை எடுத்ததாக எந்த அறிகுறியும் தெரியவில்லை. இந்த மாதிரியான சூழலில் அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் தன் கிராமத்திலுள்ள ஆறு ஏரிகளை தனது சொந்த செலவில் தூர்வாரும் பணியில் செயல்பட்டுவருகிறார். இதுவரை நான்கு ஏரிகளை சுத்தம் செய்து, நீர் வரத்தை உருவாக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், விவசாயிகள் பாசன வசதிக்கும் ஏற்பாடு செய்துள்ளார். நீர்நிலைகளை சீர்படுத்தும் எண்ணம் உருவானதையும் அதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நான் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றிவந்தேன். ஆசிரியப் பணியில் பல ஊர்களில் மாற்றலாகி பணியாற்றியுள்ளேன். கடைசியாக அரியலூர் மாவட்டம் மனக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். பணி ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் சும்மா இருக்க பிடிக்கவில்லை. சமூகம் பயன்பெறும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும், என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருந்தேன். மக்கள் சேவை சங்கம் என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி கிராமங்களில் தேசிய வங்கிகளை அமைத்தல், சாலைகளை சீரமைத்தல் என்பன போன்ற பல சமூகம் சார்ந்த செயல்பாடுகளை செய்துகொண்டிருந்தேன்’’ என்றவர் நீராதாரங்கள் பாதுகாப்பில் ஆர்வம் வந்ததைப் பற்றியும் தெரிவித்தார்.

‘‘எனக்கு மூன்று மகள்கள். மூன்றாவது மகள் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவருகிறார். அவருக்கு சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு உண்டு. வருங்காலங்களில் நீராதாரங்களை பராமரிப்பதும், பேணிக்காப்பதும் எவ்வளவு இன்றியமையாதது என்பதை என் மகள் விளக்கினார். அப்போதுதான் என் விளாங்குடி கிராமத்திலுள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீராதாரங்களின் நிலை எனக்கு புரியவந்தது. பல்வேறு நீராதாரங்களில் பாதி பகுதி தனியார் ஆக்கிரமிப்பிலும், மீதி பகுதி நிலம் வெடித்து, கருவேலஞ் செடிகளாலும் காட்டாமணக்குகளாலும் சூழ்ந்திருகின்றன.

ஒரு காலத்தில் பொதுமக்களின் தேவைகளுக்கு பாசனத்திற்கு ஊற்றாக இருந்த நீராதாரங்களின் தற்போதைய நிலை என்னை மிகவும் பாதித்தது. அவற்றை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என சொல்லி என் மகள் இரண்டு லட்சம் பணம் கொடுத்தார்’’ எனும் தியாகராஜன் ஒரு தனிநபர், நீராதாரங்களை புனரமைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை விளக்க தொடங்கினார்.

‘‘அவ்வளவு எளிதில் ஒரு தனிநபருக்கு அரசின் நீராதாரங்களை புனரமைப்பதற்கான அனுமதி கிடைப்பதில்லை. ஆக்கிரமிப்பதைவிட சீரமைக்க அனுமதி பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் கஷ்டமானவை. ஆறு ஏழு மாதங்கள் தொடர்ந்து அலைந்து திரிந்துதான் புனரமைக்கும் அனுமதி  பெற்றேன். முதலில் தனிநபருக்கு புனரமைக்கும் அனுமதி இல்லை என சொல்லி அதிகாரிகள் மறுத்தனர்.

நீராதாரங்களின் தேவையையும், புனரமைப்பதன் அவசியத்தையும் விவசாய சங்கங்களிடம் விளக்கி அவர்களின் ஆதரவோடும், என்னுடைய மக்கள் சேவை சங்கம் தொண்டு நிறுவனத்தின் மூலமும் ஏரிகளை புனரமைக்கும் அனுமதி கோரி நின்றபோதும் அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது கலெக்டர் சரவணவேல்ராஜ் தலையிட்டு, ‘நல்லது பண்ணணும்னு நினைச்சா ஒருத்தனும் உனக்கு உதவ மாட்டான், நீ போய் தூர்வாரும் வேலையை பாரு. முதல் நாள் நான் வந்து தொடங்கி வைக்கிறேன்’ என்றார். அப்படி 2017ம் ஆண்டு கலெக்டர்,  தாசில்தார், கமிஷனர் முன்னிலையில் 64 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளாங்குடி பெரிய ஏரியை புனரமைக்க தொடங்கினோம்.

கருவேலம் செடிகள், காட்டாமணக்குகள், தனியார் ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றை அகற்றி ஐந்து லட்சம் செலவில் முதலில் பெரிய ஏரியை தூர்வாரினேன். ஏரியிலிருந்து எடுத்த மண்ணை சுற்றி கரை ஏற்படுத்தவும், மீண்டும் ஆக்கிரமிப்பு நிகழாத வண்ணம் தடுப்பணை அமைக்கவும் மற்றும் நெடுஞ்சாலைகளில் மண்தரை அமைக்கவும் பயன்படுத்தினேன். சுமார் நூறு மரக்கன்றுகள் வாங்கி கரையைச் சுற்றி நட்டு ஏரிக்கு இயற்கை அரணை ஏற்படுத்தினேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த ஏரி பொதுமக்கள் பயன்பாட்டிற்கும், 45 ஏக்கர் பாசனபரப்பு கொண்ட விவசாய நிலத்தில் நெல்சாகுபடிக்கும் முக்கிய நீராதாரமாக திகழ்கிறது.

அடுத்து 2018ம் ஆண்டு வீர பிள்ளை குட்டை மற்றும் பிள்ளையார்குளம் என இரண்டு ஏரிகளை நான்கு லட்சம் செலவில் தூர்வாரினேன். இப்போது  மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட தொண்டன் ஏரியை புனரமைக்கும் பணி நடந்துகொண்டுடிருக்கிறது. இதுவரை ஆன 11 லட்சம் ரூபாய் என் சொந்த செலவுதான். மொத்தம் ஆறு ஏரி புனரமைப்பதற்கான அனுமதி பெற்றுள்ளேன்.

சமூக சேவையில் விருப்பமுள்ள பொதுமக்கள் மண் அள்ளுவது, டிராக்டர் பயன்பாடு போன்ற செயல்பாடுகளில் என்னுடன் இணைந்தால் மீதமுள்ள நீராதாரங்களையும் என்னால் மீட்க இயலும்.’’ என்று தீர்க்கமாக கூறுகிறார் தியாகராஜன். சிறுவயதிலிருந்தே அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராக இருந்திருக்கிறார் தியாகராஜன். தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக ஆக்கியது, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கச்செய்தது, பள்ளிகளின் தரம் உயர்த்தியது போன்ற செயல்பாடுகளால் இவருக்கு நல்லாசிரியர் விருது கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளது இந்திய அரசு. எதையும் எதிர்பாராமல் பல்வேறு சமூகம் சார்ந்த பணிகளை செய்துவரும் நல்லாசிரியர் தியாகராஜனை நாமும் பாராட்டுவோம் தோள் கொடுப்போம்!

-வெங்கட்   
படங்கள் : பாலசந்தர்