எஞ்சினியரிங் அரியர் எழுத கடைசி வாய்ப்பு!



* இறுதி வாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில், 500க்கும் மேற்பட்ட எஞ்சினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேருகின்றனர். அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு என இரண்டு பிரிவாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும், அண்ணா பல்கலை பாடத்திட்டத்தின் கீழ்நடத்தப்படும் பாடங்களை படித்து, தேர்வு எழுதுகின்றனர். தேர்வுகளை, அண்ணா பல்கலையின் தேர்வுத் துறை நடத்துகிறது. பல்கலைக்கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி, மாணவர்கள் தங்கள் படிப்பு காலமான, நான்கு ஆண்டுகளுக்குள், தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

முடியாவிட்டால், கூடுதலாக மூன்று ஆண்டுகள் மட்டுமே தேர்வு எழுத அவகாசம் தரப்படும். ஆனால், அண்ணா பல்கலையில் படித்த மாணவர்கள் பலர், ஆண்டுக்கணக்கில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். இந்தச் சூழலில் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, துணைவேந்தர் சுரப்பா, பதிவாளர் குமார் உட்படமுக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கல்விக் கட்டண உயர்வு, அரியர் தேர்வு முறை, புதிய பதிவாளர் நியமனம், நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி பொறியியல் படிப்புகளில் ஓரிரு பாடங்கள் அரியர் இருப்பதால் பட்டத்தை முடிக்க முடியாமல் 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சிரமத்தில் உள்ளனர். எனவே, அரியர் வைத்துள்ள மாணவர்கள் நலன் கருதி மீண்டும் தேர்வெழுத அவர்களுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி வரும் நவம்பர், டிசம்பர் பருவத்தேர்வில் சிறப்புக் கட்டணம் செலுத்தி இதுவரை பட்டம் முடிக்காத பழைய மாணவர்கள் தேர்வு எழுதலாம் என ஆட்சி மன்றக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.

கட்டணம் உயர்வு

வளரும் தொழில்நுட்ப தேவைக்கேற்ப இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களில் வரும் கல்வியாண்டு முதல் சிறிய அளவிலான மாற்றம் அமல்படுத்தப்பட உள்ளது. மேலும், உறுப்புக் கல்லூரிகளில் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தமிழக அரசின் ஒப்புதல் எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஒப்புதல் வழங்கியதும் இந்த ஆண்டு முதலே கட்டண உயர்வு அமலுக்கு வரும். மாணவர்கள் 8-வது பருவத்தில் ஓரிரு பாடங்களில் அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கு உடனடி சிறப்புத் தேர்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.