சட்டம் படிக்க விரும்புவோர் விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது!



* அட்மிஷன்

முந்தைய காலங்களைப் போலன்றி, இன்றைக்கு சட்டக் கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அதுவும், இந்த தாராளமய பொருளாதார உலகில், Mergers and acquisitions, banking and finance, infrastructure contracts, debt restructuring, FEMA regulations, IPRs, corporate governance, private equity deals and WTO law போன்ற துறைகளுக்கான திறமைவாய்ந்த வழக்கறிஞர்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது.

அதேசமயம், சட்டப்படிப்பு என்பது நிதி துறையில்தான் நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. நிதித்துறையை விரும்பாத சட்டப் பட்டதாரிகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை விஷயங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன. சட்டப் பட்டதாரிகளுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்காது என்றிருந்தது அந்த காலம். ஆனால், தேசிய சட்டப் பள்ளிகள் அந்த நிலையை இன்று மாற்றிவிட்டன. எனவே, அதிகம் சம்பாதிக்க நினைக்கும் இளைஞர்களும், சட்டப் படிப்பை பற்றி சிந்திக்கும் காலம் கனிந்துவிட்டது.

சென்னை தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 12 சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த இளநிலை படிப்புகள் மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான  மூன்றாண்டு சட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இப்போது 2019-20ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், ஐந்தாண்டு படிப்புகளைப் பொறுத்தவரை பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி., பி.பி.ஏ.-எல்.எல்.பி., பிசிஏ-எல்.எல்.பி. ஆகிய நான்கு படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் மே 16-ஆம் தேதி முதல் நேரிலும், தபால் மூலமும் விநியோகிக்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000. தபால் மூலம் பெற கூடுதலாக ரூ. 100 கட்டணம் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மே 31 கடைசி நாளாகும். அதுபோல மூன்றாண்டு எல்.எல்.பி. படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 28 முதல் விநியோகிக்கப்பட உள்ளது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஜூலை 26 கடைசி நாளாகும்.

சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் ஹானர்ஸ் படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.1000 ஆகும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 இணைப்புக் கல்லூரி படிப்புகளில் சேர்க்கை பெறுதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும். எஸ்.சி.,எஸ்.டி. மாணவர்களுக்கு ரூ.250 ஆகும். தபால் மூலம் விண்ணப்பம் பெற விரும்புபவர்கள் கூடுதலாக ரூ. 100 கட்டணம் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக இணையதளத்தைப் (www.tndalu.ac.in) பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

-தோ.திருத்துவராஜ்