சோதனையைக் கண்டு துவண்டுவிடாதீர்கள்!*இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர் 10

இந்த மண்ணில் பிறந்த உங்களுக்கு சாதனையாளராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், உங்கள் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இந்த சமூகத்தின் மீது அக்கறை வைப்பது ஒன்றுதான். மனிதருக்குள் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவர், படிக்காதவர் போன்ற எந்தவிதப் பாகுபாடும் கடுகளவும் உங்கள் உள்ளத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரப் பாசத்துடன் அனைவரையும் நேசியுங்கள், அவர்களுக்கு நல்லது ஏதாவது செய்துகொண்டேயிருக்க வேண்டும் என அல்லும் பகலும் நினையுங்கள்.

உங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் துயரங்களைக் கண்டு கடவுளே எனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து சோதனை வந்துவிட்டதே எனத் துவண்டுவிடாதீர்கள். சோதனை வந்துவிட்டதே என அதிர்ச்சியடைந்து நீங்கள் அப்படியே மலைத்து நின்றுவிட்டால் அப்புறம் அவ்வளவுதான். அந்த உணர்வே உங்களின் மனதை பலவீனம் ஆக்கிவிடும். இதிலிருந்து விடுபட முதலில் நல்லுறவுகளை வளர்த்துக்கொள்ளுங்கள்.

நல்லுறவு என்பது மற்றவர்களைப் புரிந்து கொண்டு அவர்களோடு உண்மையான நட்புறவு கொள்ளுதல் வேண்டும். அது உங்களின் தன்னம்பிக்கையை மேலும் வளர்க்கும். உங்கள் கவலைகளை புறம்தள்ளி உங்களை அரவணைக்க சிலர் இருக்கிறார்கள் என்னும் புதுத்தெம்பைக் கொடுக்கும். இதற்கு ஒரு ஜென் கதையை  நினைவு படுத்தலாம். ஒரு நாட்டு மன்னருக்கு தீராத மனக்கவலை அதை யாரிடமும் சொல்ல முடியாமல் குழப்பத்தோடு இருந்தார்.

அரசரின் முகத்தை கவனித்த அமைச்சருக்கு ஏதோ பிரச்னை என்பது புரிந்துவிட்டது. ஆனால், வற்புறுத்தி கேட்டால் மன்னர் தவறாக நினைத்துக்கொள்வாரோ என்ற அச்சம். இந்நிலையில் அமைச்சருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘‘அரசே, நீங்கள் வேட்டைக்கு போய் ரொம்ப நாளாகிவிட்டதல்லவா?’’ என்று கேட்டார். ‘‘ஆமாம்’. ஆனால், இப்போது நான் வேட்டையாடச் செல்லும் மனநிலையில் இல்லையே’’ என்றார் அரசர். ‘‘மனம் சரியில்லாதபோதுதான் இது மாதிரி உற்சாக விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் அரசே. அதுவும் வேட்டைக்கு போகிற வழியில் உங்களுடைய குருநாதரின் ஆசிரமத்துக்கு சென்று அவரையும் தரிசித்து விட்டுச் செல்லலாம் அல்லவா?’‘ என்றார் அமைச்சர். குருவை பார்ப்பதற்காகவாவது வேட்டைக்கு போகலாம் என்று முடிவெடுத்தார் மன்னர். அவரை சந்தித்தால் தன்னுடைய குழப்பத்துக்கு ஒரு தெளிவு பிறக்கும் என்றும் நினைத்தார். அரசர் தனது பரிவாரங்களுடன் வேட்டைக்குச் செல்ல தயாரானார்.

அவர்கள் காட்டுக்கு செல்லும் வழியில் குருநாதரின் ஆசிரமம் இருந்தது. உடனே மிகவும் ஆவலுடன் அங்கு சென்றார் மன்னர். அமைச்சரும் மற்றவர்களும் அவரைப் பின்பற்றி கூடவே சென்றனர். குருநாதர் ஒரு ஜென் துறவி. தனது சீடரான அரசரை அன்போடு வரவேற்று உபசரித்தார். இருவரும் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். அதன் பின்னர்அரசர் குருநாதரிடம் தனியே பேச விரும்புவதாக சொன்னார்.

இதனையடுத்து அமைச்சர் உட்பட அனைவரும் வேறுபுறம் சென்றனர். தனியாக இருந்த குருவிடம் தன் மனக்குறைகள் அனைத்தையும் கொட்டித் தீர்த்தார் மன்னர். அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ஜென்குரு சில நிமிடங்களுக்கு பிறகு “நீ புறப்படலாம்”என்றார். இப்போது அரசரின் முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ இல்லை. புதிய மலர்ச்சி தெரிந்தது. உற்சாகமாக அங்கிருந்து கிளம்பினார். அரசரின் இந்த திடீர் மாற்றம் அமைச்சருக்கு வியப்பை தந்தது. உடனே ஜென் குருவிடம் சென்ற அமைச்சர், ‘‘எங்கள் அரசருடைய பிரச்னையை எப்படி தீர்த்து வைத்தீர்கள் குருவே?’’ என்று ஆர்வத்தோடு கேட்டார்.

உடனே குரு, ‘‘உன் அரசன் ரொம்ப புத்திசாலி. அவனே தன் பிரச்னையைத் தீர்த்துக் கொண்டான். என் யோசனை அவனுக்கு தேவைப்படவில்லை’’ என்றார். “அப்படியானால் என்னதான் நடந்தது குருவே?”என்று ஆர்வத்துடன் கேட்டார் அமைச்சர். ‘‘நான் செய்ததெல்லாம் அவன் தன்னுடைய குழப்பங்களைச் சொல்ல சொல்ல பொறுமை
யாகக் காது கொடுத்து கேட்டேன். சாய்ந்து அழ என் தோளைக் கொடுத்தேன். அவ்வளவு தான்’’ என்றார் ஜென் குரு.

இதுபோன்ற நல்லுறவுதான் வேண்டும், இதுபோன்ற புரிதல்தான் வேண்டும். இதுபோன்ற பரிவும், பாசமும்தான் வேண்டும். உங்களைச் சுற்றி நல்லுறவுகள் இருந்தால் உங்களால் எதையும் சாதிக்க முடியும். அப்படி நல்லுறவுகளை உருவாக்கியும், பலருக்கு நல்லுறவாக இருந்தும் சாதித்த ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். சென்னையிலே சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் அப்துல்கனி.

அவரது பெற்றோர் மிகுந்த கஷ்டங்களுக்கிடையே எம்.பி.ஏ வரை படிக்க வைத்தார்கள். படிப்பை முடித்ததும் 24வது வயதில் சென்னையில் உள்ள பிரபலமான சர்வதேச வங்கி ஒன்றில் பணியில் சேர்ந்தார். அது ஐந்து மாடிகளைக் கொண்டது. 300க்கும் அதிகமானவர்கள் அங்கே இரவு பகலாக வேலை பார்த்து வந்தனர். அப்போது ஆன்லைன் செயல்பாடுகள் அதிகம் இல்லாமல் இருந்ததால் பெரும்பாலான பணிகளுக்கு பேப்பர்களைத் தான் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். அதனால் அலுவலகத்தில் பெருமளவு பேப்பர் குப்பைகளும், இதர குப்பைகளும் சேர்ந்தன. அதனை சரியான முறையில் தரம் பிரித்து அப்புறப்படுத்துவது சவாலாக இருந்தது.

அடித்தட்டு மக்களோடு நெருக்கமாக பழகும் குணம்கொண்ட அப்துல்கனியை அவரது உயர் அதிகாரி நமது வங்கியில் ஏற்பட்டிருக்கும் குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணுங்கள் என்றார். இந்த வேலைக்கு யாரை தேடிப்பிடிப்பது, என்ற சிந்தனையுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். இவரது சிந்தனைக்கு ஜீவன் கொடுக்கும் விதத்தில் அந்த இரவு நேரத்தில் சாலை ஓரத்தில் பெரிய குப்பைத்தொட்டி ஒன்றுக்குள் அழுக்கடைந்த ஆடையுடன் பெண் ஒருவர் உட்கார்ந்து குப்பைக்குள் எதையோ பொறுக்கிக் கொண்டிருந்தார். இவர் மூக்கை பொத்திக்கொண்டு குப்பைத் தொட்டி அருகில் சென்று அந்தப் பெண்ணிடம் தயங்கித் தயங்கி ‘’நான் உங்களுக்கு நிரந்தர வேலை ஏற்பாடு செய்து தருகிறேன். நல்ல சம்பளம் கிடைக்கும் வேலைக்கு வருகிறீர்களா?” என்றதும் அவரும் ஆர்வமாக சம்மதம் தெரிவித்தார். அடுத்த சில நாட்களிலே அந்தப் பெண் வேலைக்கும் சேர்ந்துவிட்டார்.

கடுமையாக உழைத்து, வங்கியில் உள்ள குப்பைகளை எல்லாம் தரம் பிரித்து அப்புறப்படுத்தினார் அந்தப் பெண். அதற்குள் ஒரு மாதம் கடந்துவிட்டது. ஒருநாள் வழக்கம் போல வேலை முடிந்து இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது அந்தப் பெண் அப்துல்கனியிடம் “நான் வேலைக்கு சேர்ந்து ஒரு மாதமாகிவிட்டது, எனக்கு பணம் தேவைப்படுகிறது, சம்பளப் பணத்தை உடனே கொடுங்கள்’’ என்றார்.

‘‘இந்த இரவு நேரத்தில் எப்படி கொடுப்பது நாளை காலையில் வாங்கிக் கொள்ளுங்கள்’’ என்றபோது, அந்தப் பெண் விடவே இல்லை. ‘‘எப்படியாவது உடனே வந்து பணத்தை தாருங்கள்’’ என்று கட்டாயப்படுத்தினார். அப்துல்கனி வேறு வழியின்றி திரும்பிச் சென்று எரிச்சலோடு தன்னுடைய பணத்தை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். அதை மகிழ்ச்சியாக பெற்றுக்கொண்ட அந்தப் பெண் தன் கையில் வைத்திருந்த ஒரு பையை அப்துல்கனியிடம் நீட்டினார்.

அழுக்கடைந்திருந்த அந்த துணிப்பையை வாங்கி அதை திறந்து பார்த்தார். அதில் 25,000 ரூபாய் பணம் இருந்தது. ‘‘இது ஏது பணம்?’’ என்று கேட்டதும், ‘‘உங்கள் வங்கியில் சேர்ந்த குப்பைகளில் பேப்பர், பின்கள், அட்டைகள், பிளாஸ்டிக் போன்ற பல பொருட்கள் கிடந்தன. அவற்றை எல்லாம் தனித்தனியாக பிரித்து விற்பனை செய்த பணம் இது. உங்கள் பணமான இதனை ராத்திரி முழுக்க என் கையில் வைத்திருந்தால் எனக்கு தூக்கம் வராது. அதனால்தான் இதை ஒப்படைக்க உங்களை கட்டாயப்படுத்தி வரவழைத்தேன்’’ என்றார்.

அந்தப் பெண்ணின் பெருந்தன்மை அப்துல்கனியை சிலிர்க்க வைத்துவிட்டது. அப்படியே உள்ளம் உருகிப் போனார் அப்துல்கனி. மறுநாள் அந்த பணத்தை தனது வங்கியின் உயரதிகாரியிடம் கொடுத்தார். அவரோ, ‘‘இந்த பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வழியில்லை. எனவே, இதை நீங்களே வைத்துக்கொண்டு தேவைப்படுகிறவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்’’ என்றார்.

முதலில் தயங்கிய அப்துல்கனி பிறகு அந்தப் பெண்ணுக்கு நல்ல உடைகள் வாங்கி தந்தார். பிறகு அந்தப் பெண் வேலை பார்க்கும் இடம் சுகாதார குறைபாடாக இருந்ததால் அந்த இடத்தை சுத்தப்படுத்தி அழகு செய்து செடிகள் வைத்து அதை வளர்த்து மற்றவர்கள் பார்த்து ரசிக்கும் பகுதியாக மாற்றினார். அது பலரையும் கவர பச்சைப்பசேலென்று அந்தப் பகுதியை உருவாக்கிய அப்துல்கனிக்கு பசுமை வங்கி விருது கிடைத்தது. அதை கேள்விப்பட்டு அவர் பணிபுரிந்த வங்கியின் சர்வதேச தலைமையகமும் அப்துல்கனியைப் பாராட்டி பரிசு வழங்கி உலகம் முழுவதும் உள்ள தங்கள் வங்கியில் அதுபோன்ற பசுமைப் பகுதியை உருவாக்கித் தருமாறு கூறியது.

தான் வேலை பார்த்த வங்கியின் பாராட்டும் பரிசும் கிடைத்த பின்பு கூடுதலாக முப்பது பெண்களைத் தேர்வு செய்து வங்கியின் பல்வேறு கிளைகளில் பணிக்கு அமர்த்தி அதுபோன்ற பசுமைப் பகுதிகளை உருவாக்கும்படி கூறினார்கள். உடனே அப்துல்கனி ஏற்கனவே வேலை பார்த்த அந்தப் பெண்ணை அணுகி குப்பை சேகரிக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் முப்பது பெண்கள் உங்களை போல மறுவாழ்வு பெற வாய்ப்பிருக்கிறது.

அவர்களை எங்கு போய் தேடுவது? என்று கேட்டார். உடனே அவர் சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் தளத்திற்கு மறுநாள் காலை வரும்படி சொன்னார். மறுநாள் அவருடன் அப்துல்கனியும் சென்றார். அங்கு அவரால் நிற்க முடியவில்லை. அவ்வளவு நாற்றம். குப்பை மலைபோல் குவிந்திருந்தது. அப்போது ஒரு குப்பை லாரி அங்கே வந்தது. அதில் இருந்து குப்பைகளைக் கொட்டியதும் ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளோடு அதில் இருக்கும் பொருட்களைப் பொறுக்கி எடுக்க வந்தார்கள்.

ஒரு பெண் தனது இரண்டு வயது குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்து, குழந்தையை குப்பை மேட்டிலே உட்கார வைத்துவிட்டு ஓடி சென்றார். கொட்டப்பட்ட அந்த குப்பைக்குள் இருந்து எச்சில் உணவை கைநிறைய அள்ளி வந்தார். அதை அப்படியே கொண்டு வந்து அந்த குழந்தையின் முன்னால் ஒரு பேப்பரை விரித்து வைத்துவிட்டு குப்பையில் இருக்கும் பொருட்களை சேகரிக்க ஓடிப் போனார்.

அந்த குழந்தை அதை அள்ளி சாப்பிடுவதை தூரத்தில் நின்று பார்த்த அப்துல்கனி பதறிப்போனார். அடுத்த சில நிமிடங்களில் எங்கிருந்தோ வந்த சில பன்றிகளும் நாய்களும் அந்த குழந்தையிடம் வந்தது. அவைகளும் சேர்ந்து அதை தின்ன, அந்த குழந்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தன. அந்தக் காட்சியைப் பார்த்த அப்துல்கனி கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு அப்துல்கனி தன் வாழ்வில் ஒரு புதிய இலக்கை தீர்மானித்து தன்னை ஒரு சமூக ஆர்வலராக மாற்றிக்கொண்டார்.

அந்த 30 பெண்களின் குடும்பத்தினரை தத்தெடுத்து அவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்து, அந்த குழந்தைகளை பள்ளிகளில் படிக்க சேர்த்தார். அதன் பிறகு தன்னுடைய வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூகப் பணிகளை செய்ய எக்ஸ்னோரா அமைப்பில் சேர்ந்தார். அப்போது நடிகர் விவேக் அறிமுகம் கிடைக்க ஒரு குழுவாக இணைத்து முன்னாள் ஜனாதிபதி  அப்துல்கலாம் அவர்களின் அறிவுரைப்படி மரங்கள் நடும் பணியை செய்தார். ஏராளமாக மரங்கள் நட்டதால் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் விருது பெற்றார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, அத்துடன் தன்னம்பிக்கை சார்ந்த விஷங்களைப் பற்றி பள்ளி மற்றும் கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு 12 வருடங்களாக கிட்டத்தட்ட 40 லட்சம் மாணவர்களை சந்தித்துள்ளார். அதனால் அவருக்கு சமூக நல அமைப்புகள் கீரின் மேன் ஆஃப் இந்தியா என்ற விருதை வழங்கியது. அதுவே அவரை சர்வதேச அளவில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் ஐ.நா சபை, இங்கிலாந்து பராளுமன்றம், போன்றவற்றில் உரையாற்றிய நம்மூர் தமிழர் என்ற பெருமையும் பெற்றார். இதுவரை 40 நாடுகளில் நடந்த சுற்றுச்சூழல் மாநாடுகளிலும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றி அனைவராலும் பாராட்டு பெற்றார்.

ஏராளமான வெளிநாட்டு தூதரகங்களோடும் தொடர்பில் இருக்கிறார்.  சாதாரண குடும்பத்தில் பிறந்து, கஷ்டப் பட்டு படித்து, கிடைத்த வேலையை சிறப்பாக பணியாற்றியபோது அங்கு ஏற்பட்ட சம்பவத்தினால் தனது வாழ்க்கையை சமூகத்திற்காக அர்பணித்து தன்னை சமூக ஆர்வலராக, சுற்றுச்சூழல் பாதுகாப்பாளராக, ஒரு தன்னம்பிக்கை பேச்சாளராக உருவாகி ஐ.நா சபை வரை சென்று பாராட்டு பெற்று சாதனை படைத்த அப்துல்கனியின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் சமூக அக்கறை உடையவர்களை இந்த சமூகம் சாதனையாளராக மாற்றிக்காட்டும் என்பதாகும்.

இந்த சமுதாயத்தை நீங்கள் மனப்பூர்வமாக விரும்பினால் அதே சமுதாயம் உங்களையும் பன்மடங்காக நேசிக்கும். உங்களால் சமுதாயம் பயனடைந்தால் உங்களை அந்த சமுதாயம் சாதனையாளராக உருவாக்கும். எனவே, சமுதாயத்தை  நேசியுங்கள். கண்டிப்பாக நாளை உலகம் நிச்சயம் உங்களை வாழ்த்தும்.

(புதுவாழ்வு மலரும்)
பேராசிரியர் முனைவர் அ.முகமது அப்துல்காதர்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் எம்.பில்., பிஹெச்.டி மாணவர் சேர்க்கை!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் முழுநேர, பகுதி நேர எம்.பில்., பிஹெச்.டி. படிப்புகள் ரெகுலர் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. எம்.பில். படிப்பில் தமிழ், வரலாறு, புவியியல், மேலாண்மையியல், இயற்பியல், உளவியல், சமூகவியல், மின்னணு ஊடகவியல், கல்வியியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் உள்ளன. அத்துடன் பிஹெச்.டி. படிப்பில் தமிழ், பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல், புவியியல், மேலாண்மையியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கல்வியியல், மின்னணு ஊடகவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளன.

யுஜிசி ஜெஆர்எப் (ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்) தகுதி பெற்றவர்கள் யுஜிசி நிதியுதவியுடன் பிஹெச்.டி-யில் ஆய்வு மேற்கொள்ளலாம். 2019-ம் ஆண்டு ஜூலை பருவ எம்.பில்., பிஹெச்.டி. மாணவர் சேர்க்கைக்கு தற்போது விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கவுரையை பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 29.5.2019.