வாய்ப்புகளைக் கைப்பற்றுங்கள் வாழ்க்கையில் சாதிக்கலாம்!இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைத் தொடர் - 5

ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் உங்களுடைய அறிவும் அனுபவமும் வெற்றியின் அளவும் உயர்கிறது. ஆக்கபூர்வ மனநிலையுடன் ஒவ்வொரு  பிரச்னையையும் நீங்கள் எதிர்கொண்டு, சமாளித்து வெற்றி கொள்கிறபோது மேலும் சிறந்தவராக வெற்றிகரமானவராக உருவாகிவிடுகிறீர்கள். தீர்க்கமுடியாத பிரச்னை என்று எதுவுமே இல்லை.நம்பிக்கை, அறிவுத்திறன், விடாமுயற்சி மற்றும் ஆக்கபூர்வ மனநிலை இவற்றுடன் அணுகினால் உங்கள் வாழ்வில் எந்தத் தடையையும் நீங்கள் கடக்க  முடியும். நீங்கள் ஒரு பிரச்னையைச் சரியான மனநிலையுடன் அணுகினால் உங்களுடைய சக்திகள் அனைத்தையும் நீங்கள் செய்துகொண்டிருக்கும் செயலின் மீது செலுத்த முடியும்.

அப்படி செலுத்தும்போது அந்த வேலையை எளிதாக முடிக்கலாம். அவ்வப்போது பின்னடைவுகள் ஏற்பட்டாலும், நடக்கும் என்று நினைத்தால் அது  நடக்கும். கிடைக்கும் என்று நம்பினால் அது கிடைக்கும்.நாம் பிறக்கும்போதே எதிர்மறைச் சிந்தனைகளோடு பிறந்துவிடவில்லை. அந்தச் சிந்தனை  திணிக்கப்படுகிறது.

நாம் எதிர்மறையாகச் சிந்திக்கத் தொடங்கும் எந்தவொரு சூழ்நிலையிலும் எதிர்மறை எண்ணங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஆக்கபூர்வமான  எண்ணங்களை வைக்க வேண்டும். அதை ஒரு பழக்கமாகவே தொடர்வது நல்லது.நீங்கள் கவலையின் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் அந்தக்  கவலையை மறக்கிற விதமாக உங்களிடம் பேசுவதும், அந்தக் கவலையிலிருந்து உங்களை வெளிக் கொண்டு வருவதும்தான் ஒரு சிறந்த நண்பரின்  பொறுப்பாக இருக்க வேண்டும்.ஆனால், எதிர்மறை எண்ணம்கொண்ட நண்பர்கள் உங்களிடம் எப்படிப் பேசுவார்கள் தெரியுமா? ‘‘இனிமேல் நீ எப்படித்தான் வாழப்போகிறாய்? உன்னை  நினைத்தால் எனக்கே நெஞ்சம் பதறுகிறது’’ என்பார்கள். இந்த மாதிரியான பேச்சு ஏற்கனவே கவலையில் இருப்பவர்களுக்கு இன்னும் அதிக  கவலையையும் பயத்தையும் ஏற்படுத்திவிடும்.

ஒருசிலர் ஆறுதல் சொல்கிற மாதிரி, ‘‘எல்லாம் தலையெழுத்து விதி. விட்டுட்டு அடுத்த வேலைய  பாருங்க’’ என்று உங்களை எந்த முயற்சியும்  செய்ய முடியாதவாறு பலவீனப்படுத்துவார்கள். இவ்வாறு எதிர்மறை எண்ணம்கொண்டவர்கள் மேலும் நீங்கள் முன்னேற முடியாதபடி முயற்சி  செய்வார்கள். இதை உண்மையென்று நம்பி அத்துடன் எல்லா முயற்சிகளையும் தள்ளி வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்ப்விடுவார்கள்.

நீங்கள் எப்போதுமே எதிர்மறை நண்பர்களைத் தவிர்த்து விடுங்கள். அவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை ஒரு கதையின் மூலம்  நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். மழை சோவென்று பெய்துகொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் நிறைந்து நடந்துசெல்லவே முடியாதபடி தரை வழுக்கியது. அப்போது தவளைகள் கூட்டமாக அடர்ந்த காட்டில் சென்றுகொண்டிருந்தன. அதில் இரண்டு தவளைகள் வழுக்கி ஆழக்குழியில்  விழுந்துவிட்டன.

உடனே மற்ற தவளைகள் பதைபதைப்போடு எட்டிப் பார்த்து, ‘‘குழி மிக ஆழமாக இருக்கிறது. நிச்சயமாக நீங்கள் மேலே வர வாய்ப்பே இல்லை. குழியில் கிடந்தே சாகவேண்டியதுதான். எதற்கும் கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்’’ என்று கூறின. இதைக் கேட்டு குழிக்குள் விழுந்த இரண்டு  தவளைகளும் கவலையடைந்தன.

எப்படியாவது உயிர் பிழைக்க வேண்டும் என்று நினைத்து தங்களால் முடிந்தவரை குதித்து குதித்து மேலே வரப் பார்த்தன. எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனாலும் அவை முயற்சியைக் கைவிடவே இல்லை. இதனிடையே மேலே இருந்த மற்ற தவளைகள் மீண்டும் அந்தக்  குழிக்குள் எட்டிப் பார்த்தன.

உள்ளே இரண்டு தவளைகளும் விடாமல் முயற்சி செய்துகொண்டிருந்தன. ‘‘எதற்காக நீங்கள் உங்கள் சக்தியை வீணடிக்கிறீர்கள்? எப்படியும் உங்களால் குழியிலிருந்து வெளியே வரவே முடியாது. சாகத்தான் போகிறீர்கள். கவலைப்படாமல் செத்துப்போங்கள்’’ என்று மோசமான  அறிவுரைகளைக் கூறின.

குழிக்குள்ளிருந்த ஒரு தவளைக்கு இந்த அறிவுரை சரியானது என்று தோன்றியது. ‘வீணாகக் குதித்துக் குதித்து என்ன நடக்கப்போகிறது? எப்படி இருந்தாலும் சாகப்போவது உறுதி, பேசாமல் கிடந்து சாகவேண்டியதுதான்’ என்று தன் மனதை தேற்றிக்கொண்டு மேலே செல்ல வேண்டும் என்ற  தனது முயற்சியைக் கைவிட்டுவிட்டது.

கொஞ்சநேரத்தில் அந்த தவளை இறந்தும்போனது. ஆனால், மற்றொரு தவளையோ மேலே உள்ள தவளைகளின் பேச்சைக் கேட்காமல் முயற்சி செய்துகொண்டேயிருந்தது. துள்ளித் துள்ளிக் குதித்துக்கொண்டே இருந்தது. கடைசியில் அதன் இடைவிடா முயற்சி வெற்றி பெற்றது. குதித்து வெளியே  வந்து விழுந்தது.

அது வெளியே வந்ததை பார்த்த மற்ற தவளைகள் எரிச்சல் அடைந்து, ‘‘நாங்கள் இங்கிருந்து கத்தியது உன் காதில் விழவில்லையா?’’ என்று கோபமாகக் கேட்டன. அதற்கு அந்த தவளை, ‘‘எனக்கு காது கேட்காது’’ என்று நிதானமாகப் பதிலளித்தது. அத்துடன் இன்னொரு விஷயத்தையும்  கூறியது, ‘‘நீங்கள் எல்லோரும் என்னை வெளியே வரும்படி உற்சாகப்படுத்துவதாகத் தான் நினைத்தேன்’’ என்றது.

தவளகளின் பேச்சைக் கேட்டதால் ஒரு தவளை இறந்துபோனது, இன்னொரு தவளையோ உயிர்பிழைத்தது. மற்றவர்கள் சொல்வதைக் கேட்பது தவறு  கிடையாது. ஆனால், எதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும் என தீர்மானித்து முடிவெடுப்பது நம்மிடம்தான் உள்ளது. அதைச் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று முடிவெடுக்கும் உரிமை நமக்கு மட்டுமே இருக்கிறது.

எனவே, எதிர்மறை நண்பர்கள் நமக்குக் கூறும் தவறான யோசனைகளைக் கேட்கும்போது அந்தக் காது கேட்காத தவளையைப் போன்று நீங்களும்  நடந்துகொள்ளுங்கள். இப்படி எதிர்மறை நண்பர்களை தவிர்த்து நேர்மறை நண்பர்களைத் தன் வாழ்வில் சேர்த்துக்கொண்டு தோல்விகளை வெற்றிப்படிகளாக மாற்றிய ஒருவரைப் பற்றி பார்ப்போம்.

சீனாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை. மிகவும் சிக்கலான சூழலில்தான் வளர்ந்தார். ரொம்ப சீக்கிரமாகவே தோல்விகள் அவரைத் துரத்த ஆரம்பித்தன. ஆரம்பப் பள்ளியில் இரண்டு முறை தோல்வியடைந்தார். அதன் பிறகு நடுநிலைப்பள்ளியில் மூன்று முறை  தோல்வியடைந்து ஒரே வகுப்பில் உட்கார்ந்து உட்கார்ந்து படித்து பள்ளிப் படிப்பை முடித்தார்.

கல்லூரியில் சேர நுழைவுத்தேர்வு எழுதி இரண்டு முறை தோல்வியடைந்தார். பிறகு கல்லூரி படிப்பிலும் குறைவான மதிப்பெண்கள்தான் பெற்றார். ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்ளத் தனது ஊரிலிருந்து தினமும் 45 நிமிடங்கள் சைக்கிளில் சென்று வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு  வழிகாட்டியாக இருந்து தனது ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொண்டார்.

இதன் மூலம் வெளிநாட்டு நண்பர்கள் தொடர்பும் கிடைத்தது. வேறு ஏதாவது வேலைக்குச் செல்லலாம் என்ற எண்ணத்தில் காவல்துறைப் பணிக்கு விண்ணப்பித்தபோது, ‘இந்த வேலைக்கு நீ சரிப்பட்டு வரமாட்டாய்’ என்று சொல்லி விண்ணப்பித்த 5 பேரில் இவருக்கு மட்டும் வேலை கிடைக்கவில்லை.

அடுத்த முயற்சியாக புகழ்பெற்ற கே.எஃப்.சி. நிறுவனத்தின் நேர்காணலுக்கு விண்ணப்பித்த 24 பேரில் இவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார். ஒரு  காலகட்டத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிக்கலாம் என்று விண்ணப்பித்தார். ஒரு முறை இல்லை 10 முறை விண்ணப்பித்தார். 10  முறையும் இவர் நிராகரிக்கப்பட்டார். தன்னுடைய வெளிநாட்டு நண்பர்கள் மூலமாக கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு பற்றி பல  தகவல்களைத் தெரிந்துகொண்டார்.

சீனாவைப் பற்றி இன்டர்நெட்டில் தேடியபோது, எந்தக் கேள்விக்கும் இன்டர்நெட்டில் பதில் இல்லை என்பதை அறிந்தார். எனவே, சீனாவில் இருக்கும்  வாய்ப்புகள் பற்றி தன்னுடைய நண்பருடன் சேர்ந்து ஒரு வலைத்தளத்தை உருவாக்கினார். ஆனால், அந்த முயற்சியிலும் தோல்விதான் மிஞ்சியது.  மீண்டும் முயற்சி செய்து மற்ற நிறுவனங்களுக்கு வலைத்தளங்களை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கினார்.

அது போதாது இன்னும் சாதிக்க வேண்டும் என்று எண்ணி, தன்னுடைய சொந்த ஊரில் 17 நண்பர்களுடன் சேர்ந்து பொருள் விற்பனையாளர்கள் மற்றும்  வாங்குவோர்களை இணைக்கும் அலிபாபா என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதிலும் பல தோல்விகளால் பாதிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் வரை  அலிபாபா எந்தவித லாபத்தையும் ஈட்டவில்லை.

லாபம் இல்லாத தொழில் என்று சொல்லி யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. எந்த வங்கியும் கடன் தர முன்வரவில்லை. இருந்தபோதும்  விடாமுயற்சியோடு அலிபாபா சீனாவின் பல ஏற்றுமதியாளர்கள், வெளிநாட்டு வணிகர்களோடு தொடர்புகொள்ளப் பெரிதும் உதவிவந்தது. அதன் மூலம்  அவர்கள் தொழில் வளர வளர அலிபாபாவும் வளர்ச்சியடைந்தது.
அதன் பிறகு மிகப் பெரிய நிறுவனங்களெல்லாம் அலிபாபாவில் முதலீடு செய்ததால், அது ஒரு மிகப் பெரிய வர்த்தக சாம்ராஜ்யமாக உருவானது.  

இதனால் சீனாவின் 80% ஆன்லைன் விற்பனை அலிபாபா  குழுமம் மூலமே நடைபெற்றது. அத்தகைய மிகப் பெரிய வர்த்தகத்தை உருவாக்கியவர்  தான் உலகின் மிக வெற்றிகரமான தொழில் முனைவோர்களில் ஒருவராகவும், 2014ஆம் ஆண்டு சீனாவின் முதல் பெரிய பணக்காரராகவும், உலகின்  22வது மிகவும் சக்திவாய்ந்த மனிதராகவும் உலகின் 33வது கோடீஸ்வரராகவும் திகழும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக்மா.

ஒவ்வொரு தோல்விக்கும் ஜாக்மா துவண்டிருந்தால் இன்று அலிபாபா என்று ஒரு மிகப் பெரிய நிறுவனம் உருவாகாமல் போயிருக்கும். ஜாக்மாவைப்  போன்று சரியான வாய்ப்புகளைக் கைப்பற்றிக் கொள்பவர்களே வாழ்க்கையில் சாதிக்கிறார்கள் என்பதுதான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். என்ன இளைஞர்களே? வாய்ப்புகளைத் தேடத் தொடங்கிவிட்டீர்களா! உலகில் உயர்வான இடத்தை அடையும் தகுதி எனக்குள்ளும் இருக்கிறது என்ற  உந்துசக்தியோடு உங்கள் லட்சியப் பயணத்தைத் தொடங்குங்கள். வாய்ப்புகள் உங்களுக்கு வசப்படும்.

(புதுவாழ்வு மலரும்)