சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்களுக்கு TABCEDCO கடன் திட்டம்!



வழிகாட்டல்

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்குடன் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு  திட்டங்களின்கீழ் (டாப்செட்கோ) கடன் வழங்கி வருகிறது. இனி கடன் உதவி பெறுவதற்கான வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.

நிதியுதவி அளிக்கப்படும் பல்வேறு தொழில்கள்: சில்லரை வியாபாரம் மற்றும் சிறுதொழில்கள், விவசாயம், போக்குவரத்து, கைவினைஞர் மற்றும் மரபு  வழிச்சார்ந்த தொழில்கள், இளம் தொழிற்பட்டதாரிகள் சுயதொழில், தொழிற்கல்வி பயிலுதல்.



தகுதிகள்: பயனாளிகள் பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபு வகுப்பினராக இருக்க வேண்டும்.குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு  கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ரூ.3,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.பயனடைவோரின் வயது வரம்பு 18 ஆண்டுகளுக்கு மேல் 60  வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை: கடன் விண்ணப்பப் படிவங்கள் சென்னையில் உள்ள  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைமை அலுவலகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்  நல அலுவலர் அலுவலகங்கள். கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள்; கூட்டுறவுக் கடன் சங்கங்கள்/வங்கிகள்  ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்படும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்திசெய்து கீழ்க்காணும் ஆவண நகல்களுடன்  சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம்/கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம்/கூட்டுறவு வங்கிகளில்  ஒப்படைக்க வேண்டும். சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ். முன்னணியில் உள்ள நிறுவனமொன்றிலிருந்து விலைப்புள்ளி.

* திட்ட அறிக்கை (பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்)
* குடும்ப அட்டை (Ration Card)
* ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்களுக்குக் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்)
* வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்.
* ஆதார் அட்டை.

கடன் வழங்கும் முறை: பயனாளிகளுக்குக் கடன் தொகைகளை வழங்குவதற்கும், வசூல் செய்வதற்கும் கீழ்க்காணும் நிறுவனங்கள் இக்கழகத்தின்  அங்கீகரிக்கப்பட்ட துணை முகவர்களாகச் செயல்படுகின்றன.

* தாய்கோ வங்கி
* தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம்
* மத்தியக் கூட்டுறவு வங்கிகள்/தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கம்/ நகரக் கூட்டுறவு வங்கிகள்.
* தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம்

மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் கடன் தொகை கோரி பெறப்படும் விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் பரிசீலனை செய்யப்படும்.  பயனாளியின் திட்டத்தின் செயல்பாடு, தன்மை மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் குறித்து ஆய்வுசெய்து பின்னர் அதனை மாவட்ட அளவில்  கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலான கூர்ந்தாய்வுக் குழுவின் முன் பரிந்துரைக்க சமர்ப்பிக்கும்.

கடன்தொகைக்கான பிணையம்

நாம் கேட்கும் கடன் தொகைக்கான பிணையம் வங்கி விதிகளின்படி கேட்கப்படும்.

கடன் திட்டங்களின் விவரங்கள்:
1) பொதுக் காலக்கடன் திட்டம்
* சிறுதொழில்/வியாபாரம் செய்ய தனி நபர்களுக்குக் கடனுதவி வழங்கப்படுகிறது.
* அதிகபட்ச கடன் தொகை: ரூ.10 லட்சம்

கடன் பங்குத்தொகை விவரம் பின்வருமாறு:

> பயனாளியின் பங்கு             : 5%
> தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் பங்கு : 10%
> தேசியக் கழகத்தின் பங்கு          : 85%

ஆண்டு வட்டி விகிதம்:

> ரூ.5 லட்சம் வரை               : 6%
> ரூ.5 லட்சத்திற்கு மேல்           : 7%
> திரும்பச் செலுத்தும் ஆண்டுகள்       : 3/8

2) பெண்களுக்கான கடன் வழங்கும் திட்டங்கள்

அ. சிறுகடன் வழங்கும் திட்டம் (மகிளா சம்ரிதி யோஜனா)

* இத்திட்டத்தின்கீழ் சுயஉதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்குக் கடனுதவி வழங்கப்படுகிறது. ஒரு குழுவில் அதிகபட்சம் 20  உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர்.
* சுயஉதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருத்தல் வேண்டும்.
* திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர் களால் Grading செய்யப்பட்டிருக்க வேண்டும்.
* அதிகபட்ச கடன்தொகை ரூ.60,000/-

கடன் பங்குத்தொகை விவரம் பின்வருமாறு:

> தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர்பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 5%
> தேசியக் கழகத்தின் பங்கு     : 95%
> ஆண்டு வட்டி விகிதம்        : 4%
> திரும்பச் செலுத்தும் ஆண்டு    : 4

ஆ. புதிய பொற்காலத் திட்டம்(மகளிருக்கான காலக்கடன் திட்டம்)

* அதிகபட்ச கடன் தொகை  : 10 லட்சம்
கடன் பங்குத் தொகை விவரம் பின்வருமாறு:

> தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் பங்கு : 5%
> தேசியக் கழகத்தின் பங்கு      : 95%
> ஆண்டு வட்டி விகிதம்    : 5%
> திரும்பச் செலுத்தும் ஆண்டு     : 3/8

(அடுத்த இதழில் தொடரும்)


- தொகுப்பு: தோ.திருத்துவராஜ்