பகுதிநேர ஆசிரியர்களின் 8 வருட கோரிக்கை!



எதிர்பார்ப்பு

அரசு செவி சாய்க்குமா?


பணி நிரந்தரம் கோரி கடந்த எட்டு ஆண்டுகளாகப் போராட்டம் நடத்திவரும் பகுதிநேர ஆசிரியர்கள், ஊதிய உயர்வுடன் பணிநிரந்தர அறிவிப்பை அரசு  வெளியிட வேண்டுமென்று கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். இன்று வரை அரசு கருணை காட்டிடாதா என்ற எதிர்பார்ப்போடு போராடிவருகின்றனர்.  காவல்துறை, சாலைப்பணியாளர்கள், 2003 எஸ்மா சட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்குப் பதிலாக நியமனம் செய்யப்பட்டவர்கள் எனத்  தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பலரும் நிரந்தரப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.



ஆனால், அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட வேலையில், பள்ளிக் கல்வித்துறையில் ஒப்பந்த முறையாக பணியமர்த்தப்பட்ட 16,549 பகுதிநேர  ஆசிரியர்களை நிரந்தரப்படுத்தாமல், அதே நிலையில் வைத்திருப்பதாகப் பகுதிநேர ஆசிரியர்கள் சங்கத்தினர் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், ‘‘முன்னாள்  முதல்வர் மறைந்த ஜெயலலிதா தமிழகச் சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் 26.08.2011ல் 16,549 பகுதிநேர ஆசிரியர்களை ரூ.5,000 தொகுப்பூதியத்தில்  நியமிப்பதாக அறிவித்தார்.

இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீடு 12  மாதங்களின் சம்பளத்தொகையின் கூடுதலாகும். பின்னர் இந்நியமனங்களுக்கான அரசாணை 11.11.2011ல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில்  2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பணிநியமன ஆணைகள் வெளியிடப்பட்டு பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்துவருகின்றனர்.

காலிப்பணியிடங்களில் ஒரு பகுதிநேர ஆசிரியரே அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணிபுரிந்து அதற்குரிய சம்பளத்தினை. அந்தந்தப் பள்ளிகளில்  பெற்றுக்கொள்ளலாம் என எங்கள் நியமன ஆணையில் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி 4 பள்ளிகளில் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால் ஒரு  பகுதிநேர ஆசிரியர் ரூ.30 ஆயிரம் பெறுவதோடு அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரமும் பணிபுரியும் வாய்ப்பினை பெற்றிருப்பார்.

ஆனால், இன்றுவரை எந்தவொரு பகுதிநேர ஆசிரியருக்கும் ஒன்றுக்கு மேலான பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்புகளை வழங்காமல் வாரத்திற்கு 3 அரைநாட்கள் மட்டும் பணி, மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணி என மீதிநேரமும் பள்ளிப் பணிக்கு மறைமுகமாக பயன்படுத்திவருகின்றனர். இதனால்  எங்கள் வருமானம் ரூ.7,700 என்ற குறைந்த தொகுப்பூதியத்தில் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

அரசு இதற்கான நடைமுறைகளை சரியாகச் செயல்படுத்தவில்லை’’ என்று குற்றம் சாட்டுகிறார். மேலும் தொடர்ந்தவர், ‘‘நூறு மாணவர்களுக்கு  மேல் உள்ள பள்ளிகளில் பணியமர்த்த வேண்டும் என்ற அரசாணையால் இன்னும் பெரும்பாலோர் உள்ளூர் பள்ளிகளில் பணிமாறுதல் பெற்று பணிபுரிய  முடியால் பேருந்துக் கட்டணத்திற்கும், பெட்ரோல் செலவிற்கும் செலவிட்டு சொற்ப ஊதியத்தையும் இழந்து வறுமையில் வாடுகின்றனர்.

எதிர்பாராத விபத்து, நோய்வாய்ப்பட்டவர்கள் மருத்துவச் சிகிச்சை பெற விடுப்புகள் எதுவும் கிடைக்கப்பெறாமல் ஊதியப் பிடித்தத்திற்கு  ஆளாகிவருகின்றனர். மகளிருக்கு மகப்பேறு கால விடுப்பு வழங்காமையால் பகுதிநேர ஆசிரியைகள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
இதோடு 8 கல்வி ஆண்டுகள் ஆகிவிட்டன.

அனைவருக்கும் தரப்படும் பண்டிகை போனஸ் அல்லது ஊக்கத்தொகை போல் எங்களுக்கு ஆயிரம் ரூபாய்கூட அரசு தரவில்லை. துறை ரீதியாக  போனஸ் பெற்றுத்தர எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வேறெந்தத் துறைகளிலும் இதுபோல இத்தனை ஆண்டுகள் வேலை  செய்தவர்களைக் கைவிட்டதில்லை.


ஆந்திர மாநிலத்தில் இதே பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக ரூ.14,203  தரப்படும்போது தமிழகத்தில் ஏன் தரக்கூடாது. மேலும்  மகளிருக்கு 6 மாத காலம் மகப்பேறு விடுப்பும் தருகிறார்கள். இதை ஏன் தமிழகத்தில் தரவில்லை. மேற்கு வங்காளத்தில் ஒப்பந்த வேலையில்  உள்ளவர்கள் பணியில் சேர்ந்து பின்னர் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் அரசு நிதியாகத் தரப்படுகிறது.

இதையெல்லாம் தமிழக அரசைக் கேட்டு கோரிக்கை விடுத்துவருகிறோம். அரசிடமிருந்து இதுவரை எந்தவித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை’’  என்று வேதனையோடு கூறும் செந்தில்குமார், ‘‘சம வேலை, சம ஊதியம் வழங்க உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் தொடர்ந்து தீர்ப்பினை  வழங்கி வருகிறது. எனவே எங்கள் பாடப்பிரிவுகளில் நிரந்தர வேலையில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை எங்களுக்கும் வழங்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார்.

‘‘எங்களுக்குப் பின்னர் காவல்துறையில் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள் சில ஆண்டுகளில் நிரந்தரம்  செய்யப்பட்டுவிட்டனர். பல்வேறு துறைகளில் தினக்கூலி, தொகுப்பூதியப் பணி செய்தவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பின்னர் நிரந்தரப்  பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சாலைப் பணியாளர்களும் நிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர்.

போராடிய தொகுப்பூதியச் செவிலியர்களுக்கு ஊதிய உயர்வும், படிப்படியாகக் காலிப்பணியிடங்களில் பணிநிரந்தரமும் செய்ய நீதிமன்றமே  உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 2003ல் எஸ்மா சட்டத்தில் பணிநீக்கம் செய்தவர்களுக்குப் பதிலாக ரூ.4,000 தொகுப்பூதியத்தில் நியமனம்  செய்தவர்களும் பின்னர் சிறப்புத் தேர்வு நடத்தி காலமுறை ஊதியத்தில் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், எங்களை மட்டும் அரசு பாராமுகமாக  இருந்துவருகிறது.

ஆனாலும், நாங்கள் எங்கள் கோரிக்கையை அரசிடம் வைத்து, எங்களைக் கைவிட்டுவிடாதீர்கள், எங்களுக்குப் பணிநிலைப்பு வழங்கி அரசின் சில  சலுகைகளை கிடைக்கச்செய்யுங்கள் என்று போராடிவருகிறோம்’’ என்று கவலை தோய்ந்த முகத்தோடு பேசி முடித்தார்.நாளுக்குநாள் விஷம்போல்  ஏறும் விலைவாசியால் ஓரளவு நல்ல சம்பளம் வாங்குபவர்களுக்கே வாழ்க்கை நடத்துவது போராட்டமாக உள்ள சூழலில் 7,700 ரூபாயில் வாழ்க்கையை  நடத்துவது நிச்சயம் முடியாத ஒன்று. மனிதாபிமான அடிப்படையிலாவது இவர்களுக்கு அரசு கருணைகாட்டினால் நல்லது.

 - தோ.திருத்துவராஜ்