அறம் செய்ய விரும்பும் இளைஞர் குழு!



சேவை

இன்றைaய வாழ்க்கைமுறை அவசரகதியானதால் குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை யோசிக்கவே நேரமில்லாமல் மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எங்கள் வேலைகளோடு அடித்தட்டு மக்களின் தேவைகளையும் நிறைவேற்ற காத்திருக்கிறோம் என்று அமைதியாக அறப்பணியை மேற்கொண்டு நடத்திவருகிறது ஒரு இளைஞர் குழு.

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இருபது இளைஞர்கள் சென்னையைத் தலைமையிடமாக கொண்டு ‘அறம் செய்ய விரும்பு’ என்ற  பெயரில் பழங்குடி மக்கள் மத்தியில் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் கல்வி பெற வழிவகை செய்தல், மரங்களை வளர்த்து காடுகளை உருவாக்கி பாதுகாத்தல், அரசுப் பள்ளிகளுக்கு நூலகம் அமைத்துத் தருதல், நிதிச்சிக்கலால் தவிக்கும் அரசுப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கித் தருதல் என பல்வேறு கல்வி மற்றும் விவசாயம் சார்ந்த உதவிகளைச் செய்துவருகின்றனர்.



தங்கள் இளைஞர்குழு செய்துவரும் சமூக முன்னேற்றத்திற்கான பணிகளைப் பற்றி ‘அறம் செய்ய விரும்பு’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்  ராஜாசைமன் கூறும்போது, ‘‘தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாங்கள் வேலைக்காகத்தான் சென்னை வந்தோம். நான் ஒரு  மெக்கானிக்கல் எஞ்சினியர்.

நான் மட்டுமல்ல… சுமார் இருபது பேர் கொண்ட எங்கள் குழுவில் பெரும்பாலும் எஞ்சினியரிங் பட்டதாரிகள்தான். ஒருமித்த கருத்துடைய நாங்கள்  சமூக வலைத்தளங்களின் மூலம் நட்பானோம்.நாங்களும் தினமும் வேலை, வாரக் கடைசி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதுபோக்கு, ஆட்டம், பாட்டு என சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்க்கைச் சூழல் போலத்தான் ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கையை கடத்தினோம்.



அந்தக் காலகட்டத்தில்தான் 2015ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ஏற்பட்ட புயலின் கொடூரத்தால் நகரமே துண்டாகிப்போனது. எண்ணற்றவர்கள் பல்வேறு  இன்னல்களைச் சந்திக்க நேர்ந்ததைக் காண நேர்ந்தது. அச்சம்பவம்தான் எங்களுக்குள் உறைந்திருக்கும் மனிதத்தை வெளிப்படுத்தியது. வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம் என்று களத்தில் இறங்கியது எங்கள் இளைஞர்கள் குழு. உணவு, உடை,  மருந்துப்பொருட்கள் எனப் பலவிதமான தேவைகள் அப்போது இருந்தது.

நாங்கள் எங்களால் இயன்றவற்றைச் செய்தோம். இல்லாதவர்களுக்கு இதுபோன்ற உதவிகளைத் தொடர்ந்து செய்தால் என்ன? என்று யோசித்து ‘அறம்  செய்ய விரும்பு’ என்ற பெயரில் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு சமூக நலச் செயல்பாடுகளைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக  செய்துவருகிறோம்’’ என்றார்.

எதுபோன்ற அறச்செயல்களை கையிலெடுத்து செயலாற்றி வருகிறார்கள் என்பதையும் ராஜா விவரிக்கலானார். ‘‘முதலில் கல்வியில் தான் கவனம்  செலுத்தினோம். பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அவர்கள் கல்வி பெற வழிவகை  செய்வது எங்கள் நோக்கமாகக் கொண்டு செயல்படத் தொடங்கினோம்.

ஒரு சாதாரண மனிதனை, சக உயிர்களை மதிக்கும் மேன்மையான மனிதத்தன்மையோடு இருக்கச் செய்வதில் நூலகம்தான் பெரும்பங்கு வகிக்கிறது.  ஆகையால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அதிகம் படிக்கும் பள்ளிகள், ஆதரவற்ற மற்றும் பழங்குடி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளைத்  தேர்வு செய்து அங்கு நூலகம் அமைக்க ஏற்பாடு செய்தோம்.

இந்த மூன்று ஆண்டுகளில் சென்னை, திருவள்ளூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆதரவற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும்  மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்புப் பள்ளிகள் என மொத்தம் பன்னிரண்டு பள்ளிகளில் நூலகம் அமைத்துத் தந்துள்ளோம். அடுத்ததாகப் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களும் நவீன தொழில்நுட்பத்தில் கல்வி கற்க ஏதுவாக ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்க  திட்டமிட்டோம்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பழங்குடி மாணவர்களுக்கான அரசு ஆரம்பப் பள்ளி மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான அரசு  மேல்நிலைப்பள்ளி என இரண்டு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை உருவாக்கியுள்ளோம்.திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்து போர்டு  ஆரம்பப் பள்ளிக்கான ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கும் வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

அரசுப் பள்ளிகளின் இடியும் நிலையில் உள்ள கட்டடங்களைச் சீர்செய்தல், அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளுக்கு கழிவறை அமைத்து  கொடுத்தல், நூலகம் அமைத்தல், பள்ளி சுவர்களில் ஓவியம் வரைதல் போன்றவற்றையும் செய்து வருகிறோம்’’ என்றார். மேலும் ராஜா கூறும்போது,  ‘‘காடுகளின் தேவையையும், இயற்கையின் மகத்துவத்தையும் மாணவர்களுக்குப் போதிக்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்து  போர்டு ஆரம்பப் பள்ளியில் குறுங்காட்டை உருவாக்கியுள்ளோம்.

மாணவர்கள் அங்கு இயற்கையோடு இயைந்து கல்வி கற்கின்றனர். கஜா புயலால் கடும் சேதமடைந்த தஞ்சாவூர் விவசாயிகளுக்கு 2,500  மரக்கன்றுகளை வழங்கியுள்ளோம். இப்பணிகளுக்காக நண்பர்கள் அனைவரும் மாதச்சம்பளத்தில் ஒரு பகுதியைத் தனியாக ஒதுக்குகிறோம்.’’  என்கிறார்.

அடித்தட்டு மக்களின் கல்விக்காகவும், அவசரகாலத் தேவைகளுக்காகவும், நலிவடைந்த மக்களின் நலனுக்காகவும் தன்னார்வத்தோடு தங்கள்  வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி சேவைகளைச் செம்மையாகச் செய்துவரும் ‘அறம் செய்ய விரும்பு’ குழுவின் செயல்களை நாமும்  பாராட்டுவோம்!

- வெங்கட் குருசாமி