அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா?



மொழி

Spoken English  Part 7: எதை வாசிக்க வேண்டும்?

ரகுவின் இருக்கைக்கு அருகே வந்தஅகிலாவும் ரவியும் ‘‘எங்களுக்கு ‘வேதாளம்’ என்ற வார்த்தைக்கு ஆங்கிலத்தில் என்ன என்று தெரியாது’’ என சொன்ன வுடனே தனது ஆண்ட்ராய்டு மொபைலிலிருந்து ஒரு பக்கத்தைக் காட்டினார். அதில் ஒரு அரசன் தன் தோளில் ஓர் ஆவியை சுமந்துகொண்டு  போவது போல் ஒரு படம் இருந்தது.

அதைப் பார்த்த அகிலா, ‘‘இது அம்புலிமாமா இதழில் வரும் ‘விக்ரமாதித்தனும் வேதாளமும்’ கதையோட ரெகுலர் ஃபீச்சர் இமேஜ் சார்” என்றாள். ‘‘மிகச் சரியாகச் சொன்னாய் அகிலா’’ என்ற ரகு மீண்டும் சற்றே ஸ்க்ரோல் செய்தார். அப்போது அந்தக் கதையின் தலைப்பு VIKRAMADITYA  AND THE VAMPIRE என டிஸ்ப்ளே ஆனது.



அதைப் பார்த்த ரவி, உற்சாகத்தில், ‘‘ஓ! வேம்பயர் என்றால் வேதாளம் என்று பொருளா?” என உரத்த குரலில் சொன்னான். ‘‘இப்ப நல்லாவே  புரியும் என்று நினைக்கிறேன். முதலில் வேதாளத்திற்கு ஆங்கிலத்தில் என்ன என்று கேட்டபோது உங்களுக்குப் பதில் தெரியவில்லை. ஆனால்,  படத்தைப் பார்த்தவுடன் ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தையை வெளிப்படுத்த முடிந்தது அல்லவா.

அதற்குக் காரணம் நமக்குத் தெரிந்த கதை. அதனை வெளிப்படுத்தும் படம். அதனால தான் நான் எப்போதுமே start from the scratch எனச்  சொல்வது வழக்கம்.இதுபோன்ற தெரிந்த கதைகளைப் படிக்க ஆரம்பிக்கும்போது நம் தாய்மொழியில் படிப்பது போன்ற ஒரு சுகானுபவம் தோன்றும். அந்த சுவையை நீங்கள் அனுபவிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், உங்களை அதுவே முன்னேற்றத்தின் விளிம்புக்கு அழைத்துச் செல்லும்.

அதிலும் குறிப்பாகத் தொடக்க வகுப்பு (Primary school) கதைப் புத்தகங்களிலிருந்து ஆரம்பிப்பது மிகச் சிறப்பு’’ என்றார் ரகு. “என்னங்க சார்  இது? விட்டா LKGலிருந்து ஆரம்பிக்கச் சொல்வீங்க போல இருக்கு”என்ற ரவியிடம், ‘‘ஏன்? அதுல இருந்து ஆரம்பிச்சாத்தான் என்ன தப்பு. நாமதான் எந்தப் பாடத்தையும் ரசிச்சு கத்துக்கலயே! தேர்வில் மதிப்பெண் பெறுவதற்காகத்தானே படிச்சோம்.

சாரி! மனப்பாடம் செஞ்சோம். மொழியை ரசிச்சு அந்த பாவத்தோட படிக்க ஆரம்பிச்சிருந்தா இப்போ ஸ்போக்கன் இங்க்லிஷ்னு போராடிக் கொண்டிருக்க  வேண்டிய அவசியமே இல்ல. சரியா?” என்றவர், ‘‘இதுவரைக்கும் நான் சொன்னதைச் சற்று ஞாபகப்படுத்திப் பார்க்கலாமா? ஆங்கிலம் பேசுவதற்கு 1. கவனிக்கும் திறமையைப் பண்படுத்த வேண்டும். 2. இலக்கணம் தேவை என்ற தவறான கருத்தை மனதிலிருந்து தூக்கியெறிய வேண்டும்.

3. ஆங்கில வார்த்தைகள் எது எதுக்கு எது என்று தெரிவதில்லை என்ற வாதம் தேவையில்லை. 4. பேச வேண்டும் என்ற ஆழ்மனத்துடிப்பை  அனுபவிக்க வேண்டும். 5.படிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். 6. அடுத்து என்ன படிக்க வேண்டும் என்று தெரியவேண்டும். 7. அடுத்து  எப்படிப் படித்தால் பேசவும் எழுதவும் வரும் என்ற வழியைத் தெரிந்துகொள்ள வேண்டும். புரிகிறதா?” என்று சொல்லிக்கொண்டே தன் அலுவலக  பணியைத் தொடங்கினார் ரகு.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

(மீண்டும் பேசலாம்)

-சேலம் ப.சுந்தர்ராஜ்