5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தேவையா?



அலசல்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 2018-2019ம் கல்வியாண்டுக்கான பாடங்களெல்லாம் நடத்தி முடிக்கப்பட்டு ஆண்டின் இறுதித் தேர்வும் நடத்தப்பட  உள்ளது. இந்த சூழ்நிலையில் அரசு மற்றும் தனியார் என அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள்  கட்டாயம் பொதுத்தேர்வு எழுதவேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.



மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு இருந்தாலும் தமிழக அரசு அவ்வறிக்கையை  நடைமுறைப்படுத்தும் நோக்கில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. முதல் கட்டமாக தமிழக அரசுப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஏற்கனவே பத்து, பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடர்ச்சியாக இருப்பதில் மாணவர்கள் மனஉளைச்சலில்  இருக்கிறார்கள். இதில் புதிதாக ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒரு மாணவன் பன்னிரண்டாம் வகுப்பு  முடிக்க ஐந்து பொதுத்தேர்வுகள் எழுதவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது வேதனைக்குரியது. இதுகுறித்து கல்வியாளர்களிடம் கேட்டபோது அவர்கள்  நம்மிடம் பகிர்ந்துகொண்ட கருத்துகளைப் பார்ப்போம்...

பாடம் நாராயணன், கல்வியாளர்

நாற்பது வருடங்களுக்கு முன்பு இவ்வறிவிப்பு வந்திருந்தால் இன்று கல்வியாளராக இருக்கும் நான் இந்த அளவிற்கு வந்திருக்கமாட்டேன்.  குழந்தைகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் நேரடியான வன்முறை இது. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இல்லை. போதுமான ஆசிரியர்  மாணவர்கள் சதவீதம் பேணப்படவில்லை. தனியாருக்கு ஒரு கல்வி, ஏழைக்கு ஒரு கல்வி, இன்டர்நேஷனல் கல்வி என பல்வேறு கல்விமுறைகள்  நடைமுறையில் இருக்கின்றன.

இப்படி சிக்கலான மற்றும் குளறுபடியான நிலை இருக்கையில் இவ்வறிவிப்பு மேலும் சிக்கலான நிலைக்கே மாணவர்களையும் பெற்றோர்களையும்  தள்ளும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். பாடச்சுமை , நல்ல மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்ற  பெற்றோர்களின் வற்புறுத்தல்கள் மற்றும் சமூக அவமதிப்பு என ஏற்கனவே பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலர் தற்கொலை முடிவை எடுப்பது போல்  இனி ஐந்தாம் வகுப்பு மாணவர்களும் தற்கொலை முடிவை எடுக்கும் சூழல் உருவாகும்.

படிப்பு விஷயத்தில் குழந்தைகளிடம் பெற்றோர்களின் வற்புறுத்தல் அதிகரிக்கும். கல்வி உரிமையில் அந்தந்த மாநிலங்களுக்கு முடிவெடுக்கும்  அதிகாரம் உள்ளது எனக் கல்வி உரிமை சட்ட வரைமுறை சொல்லும்போது மத்திய அரசு எந்த  கல்வியாளர்களிடமும், நிபுணர்களிடமும்  விவாதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டுவருகிறது. பிள்ளைகளை சந்தைக்கு வரும் தக்காளி மாதிரி தயார்படுத்தவே இந்த அறிவிப்பு பயன்படும்.  ஆகையால், முட்டாள்தனமான முடிவு இது.

ஏற்கனவே LKG-க்கு டியூஷன் ஆரம்பிக்கப்படுகிறபோது இந்தத் திட்டமும் வந்தால் டியூஷன் போன்ற தனியார் பயிற்சி நிறுவனங்கள் அதிகளவு உயர  வழிவகை செய்யும் வாய்ப்பாக மட்டுமே அமையும். பள்ளிக்கல்வி எளிமையாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மாணவர்கள் விருப்பத்தோடு பாடம்  கற்பார்கள். ஆனால், இவர்கள் இன்னும் கடினமாக ஆக்குவதற்காக முனைப்போடு செயல்படுகிறார்கள். ஆக்கப்பூர்வமான  செயல்பாடுகளை விட்டு  விட்டு அழிவிற்கான பாதையை வடிவமைத்துக் கொடுக்கின்றனர். ஆகையால் நடைமுறை சாத்தியமில்லாத அறிவிப்பு இது.

பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுப் பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்செயலாளர்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்தும் முன்மொழிவுகள் தமிழ் நாடு அரசிடம் இருக்குமெனில் அத்தகைய முன்மொழிவுகளைத்  தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். ஏனெனில் இது எட்டாம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லை  என்ற தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவிற்கு  எதிரான நடவடிக்கை ஆகும். மேலும் கற்றல் குறைபாட்டிற்கு மாணவரே பொறுப்பேற்க வேண்டும் என்பது நியாயமற்றது.

கற்றல் கற்பித்தல் பணியல்லாத பிற பணிகள் செய்வதற்கு ஆசிரியர்களைப் பணித்தல், அன்றாட பள்ளி நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்  அல்லாத வேறு பணியிடங்களே இல்லாத நிலையில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அரசு நடத்திவருதல், மாணவர் கற்றல்  குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைக் களைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல், மாணவர்களின் வாழ்விடச் சூழலைக் கருத்தில்கொண்டு  அதற்கு உகந்த கற்றல் சூழல் மற்றும் கற்றல் செயல்பாடு ஆகியவற்றை அமைத்துத்தர முன்வராமல் கற்றல் குறைபாட்டிற்கு மாணவரே பொறுப்பேற்க  வேண்டும் என்று கூறுவது சமத்துவக் கோட்பாடு, வாழ்வுரிமை உள்ளிட்ட மனித உரிமைகளை மறுக்கும் செயலாகும்.

சமமான கற்றல்சூழல் அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டமும், உயர்நீதி மன்றங்களும், உச்சநீதி  மன்றமும் வலியுறுத்தியுள்ளன. இந்திய அரசமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை ஒவ்வொரு குடிமகளும் / குடிமகனும் சமமாக  அனுபவித்திட வாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டிய அரசு, சமமற்ற கற்றல் சூழலில் வளரும் குழந்தைகளைச் சமமான தேர்வு மூலம் மதிப்பீடு  செய்வது அரசியல் சட்டத்தின் நோக்கத்திற்கே எதிரானது.

தேர்வு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள இயலாத குழந்தைப் பருவத்தில் பொதுத்தேர்வு, அதில் தேர்ச்சியில்லை என்றால் உடனடித் தேர்வு,  அதிலும் தேர்ச்சியில்லை என்றால் மீண்டும் அதே வகுப்பில் அக்குழந்தை பயில வேண்டும் என்பது குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறையாகவே  கருத வேண்டியுள்ளது.

கல்வியில் குறிப்பாகப் பள்ளிக் கல்வியில் உலகம் முழுவதும் நடந்துவரும் மாற்றங்களை, முன்னேற்றங்களைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாமல்,  இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பாகக் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த மதிப்பீட்டு முறைக்கே மாறுகிறோம் என்பது தமிழ்நாட்டைப்  பின்னுக்கிழுக்கும் செயலாகும். விளிம்பு நிலை மக்களின் குழந்தைகளை, குறிப்பாகப் பெண்குழந்தைகளை இத்தகைய முடிவுகள் பெரும்பாதிப்பிற்கு  உள்ளாக்கும். பள்ளியை விட்டு விடுபடுதல் அதிகரிக்கும். ஆகையால், பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி பெற உரிய  திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதே ஆக்கப்பூர்வமான செயல்பாடாக அமையும்.

- வெங்கட் குருசாமி