சைக்கிள் அல்ல… சோலார் பவர் மோட்டார் சைக்கிள்!கண்டுபிடிப்பு

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எவ்வளவு திறமைகள் உள்ளன என்பதை அவர்களின் ஒவ்வொரு படைப்பிலும் பார்க்கமுடிகிறது. நாடு  முழுவதும் நடத்தப்படும் அறிவியல் கண்காட்சிகளின் மூலம் அவர்களுக்கான மாவட்ட, மாநில, தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்துவருகிறது. மாணவர்களிடம் ஏராளமான திறமைகள் உள்ளன.

அவர்களுக்குப் பல்வேறு கற்பனைத் திறனுடன்கூடிய புதுவிதமான சிந்தனைகள் தோன்றுகின்றன. அந்தத் திறனை அவர்கள் புத்தாக்கம் செய்து  புதுவிதக் கண்டுபிடிப்பாக உருவாக்கி அறிவியல் கண்காட்சிகளில் வெளிப்படுத்துகின்றனர். அந்த வகையில் சூரிய ஒளியில் இயங்கும் மிதிவண்டியை  (Solar Cycle) நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்  விக்னேஷ்வரன் கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறார்.மத்திய அரசின் இன்ஸ்பயர் விருதுக்கும் அந்த மாணவர் தேர்வாகியுள்ளார். இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களைப்  பார்ப்போம்….

‘‘எங்கள் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் S.விக்னேஷ்வரன் RMSA நடத்தும் INSPIRE (இன்ஸ்பையர்) போட்டியில் அவன்  உருவாக்கிய சூரியசக்தி மிதிவண்டி (Solar Cycle) தேர்ந்தெடுக்கப்பட்டு அவனுக்கு 10,000 ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த  சைக்கிள் வடிவமைப்பு பற்றி அவன் 8-ம் வகுப்பு படிக்கும்போதே தெரிவித்தான்.

அவனது ஐடியா தேர்வு செய்யப்பட்டு அதனை உருவாக்க 10,000 ரூபாய் ஊக்கத் தொகையினை RMSA அளித்தது.’’ என்கிறார் ஆசிரியர் சிவக்குமார். அறிவியல் பாட ஆசிரியர் குமார் கூறுகையில், ‘‘அறிவியல் பாடத்தில் மிகவும் ஆர்வமுடன் கூர்ந்து கவனித்து, சந்தேகங்கள் எழும்போது தயங்காமல்  கேட்டு ஐயங்களைத் தீர்த்துக்கொள்வான்.

செய்முறை (Activity) கொடுக்கும்போது ஏதாவது ஒன்றை வித்தியாசமாக மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு புதுமையைப் படைப்பான்.  அப்படி அவன் அறிவியலின் மீது கொண்ட ஆர்வம்தான் `Solar cycle’ உருவாக்கம். மேலும் விக்னேஷ் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த  மாணவன்.

அவனது தந்தை வாடகை கார் ஓட்டும் தொழில் செய்து வருகிறார். தாயார் தனது சிறிய வீட்டிலேயே தையல் மெஷின் வைத்து தொழில் செய்து  வருகிறார். மாணவன் விக்னேஷ்வரனுக்கு ஆசிரியர்கள் குமார், D.சிவக்குமார் மற்றும் மாணவருடைய தந்தை செந்தில்குமார் ஆகியோர் ஊக்கம்  கொடுத்தனர். அந்த ஊக்குவிப்பு முயற்சியால்தான் இந்த `Solar Cycle’ உருவாக்கப்பட்டது’’ என்றார்.மாணவர் விக்னேஷ்வரன் கூறுகையில், ‘‘மூன்று  மாதக் கடுமையான உழைப்புக்குப் பின்னர், சோலார் சைக்கிளை உருவாக்கினேன். உண்மையில் சொல்வதென்றால் இது சோலார் பவர்  மோட்டார்சைக்கிள்.

இந்த சோலார் சைக்கிளில் உள்ள பெடலை கழற்றிவிட்டு அந்த இடத்தில் கால்வைப்பதற்கு தேவையான ஃபுட் ரெஸ்ட் வைத்துள்ளேன். சைக்கிளின்  கேரியரில் சோலார் பேனல் பொருத்தியுள்ளேன். அந்த சோலார் பேனலுடன் ஒரு ரெசிவரை இணைத்து அதனோடு ஸ்டார்ட் செய்வதற்கான கீ  சிஸ்டத்தை இணைத்துள்ளேன். டூ வீலரில் உள்ளதைப் போலவே வண்டியை ஸ்டார்ட் செய்யலாம்.

ஃபிரிவீலுடன் பல்சக்கரம் பொருத்தி மோட்டாருடன் இணைத்துள்ளேன். இந்த வாகனத்திற்கு 2 மணி நேரம் மின்சாரத்தைச் சேமித்துப் பயன்படுத்தினால்  20 கிலோ மீட்டர் தூரம் செல்லலாம். 8 மணி நேரம் சேமித்துப் பயன்படுத்தினால் 50 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம். சோலார் சைக்கிளைப்  பயன்படுத்தினால் சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்கும் நேராது.

எனது கண்டுபிடிப்புக்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அதிக ஊக்கமளித்தனர். மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் சோலார் சைக்கிளை முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் எளிதாக இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. இதுபோன்று இன்னும் நிறைய கண்டு பிடிப்புகளை நான்  என் தந்தையின் உதவியோடு உருவாக்கினேன். உதாரணமாக, ‘தானியங்கி ரயில்வே கேட்’ உருவாக்கினேன்.

இதற்குப் பள்ளி அளவில் எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.. இந்த வாகனத்தால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது. இதுபோன்று மேலும் பல  சாதனைகளைப் படைக்க ஆர்வமாக காத்திருக்கின்றேன்’’ என்றான். மாணவரின் தந்தை செந்தில்குமாரிடம் பேசியபோது, ‘‘சிறுவயது முதல் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு புதிதாக எதை யாவது உருவாக்கிக் கொண்டே இருப்பான்.

படிப்பில்கூட அறிவியல் பாடத்தில் தனி ஆர்வம் காட்டுவான். ஆதலால் அவனைச் சிறுவயதில் பள்ளிக்கு கூட்டிக்கொண்டுபோய் விடும்போது  அறிவியல் ஆசிரியரிடம் அவன் மீது தனிக்கவனம் செலுத்தச் சொன்னேன். தற்போதுகூட என் மகன் கூறுகையில் ‘அப்பா நான் Inspire Award  பெறத் தேர்வாகியுள்ளேன்.

அதற்கு ஊக்கத்தொகையாக எனக்கு 10,000 ரூபாய் எனது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளதாக எனது அறிவியல் ஆசிரியர் சொல்கிறார்’  எனக் கூறினான். அதைக்கொண்டு ஏதாவது உருவாக்கி இந்த ஆண்டு சமர்ப்பிக்க வேண்டும் என்றான். என்ன செய்யலாம் எனக் கேட்டபோது  இதுபோன்ற `Solar Cycle’ உருவாக்கலாமா? என்றான்.

என் மகனின் ஆர்வத்தைக் கண்டு அவன் அதை உருவாக்க ஊக்குவித்தேன். இப்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது. இதில் அவன்  வெற்றி பெற்று 10,000 ரூபாய் மீண்டும் பரிசுத்தொகை பெற்றுள்ளான். எனது மகனின் பெயர்,புகைப்படம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில்  வருவதைப் பார்க்கும்ேபாது என் உள்ளம் குளிர்கிறது.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் - என்ற குறளின் ஞாபகம் வருகின்றது’’ என்றார் ஆனந்தக்  கண்ணீருடன். அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், சாதனை படைக்கும் மாணவரின்  கண்டுபிடிப்பை அடுத்தகட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

- தோ.திருத்துவராஜ்