பதற்றமில்லாமல் பொதுத்தேர்வு எழுத சில ஆலோசனைகள்!



பொதுத்தேர்வு டிப்ஸ்

‘‘பொதுத் தேர்வு எழுத காத்திருக்கும் மாணவச் செல்வங்களுக்கு இந்த நேரம் மிகவும் மதிப்புமிக்கது. ஆண்டு இறுதிக்கான பொதுத் தேர்வு அருகில்  வந்துவிட்டது. இதுவரையில் பல தேர்வு களை எளிதாகக் கடந்து வந்திருப்பீர்கள். அதுபோலத்தான் இந்தத் தேர்வும். இதையும் அழகாக எழுதி அதிக  மதிப்பெண்களை அள்ளப்போகிறீர்கள். அதனால், பொதுத் தேர்வை பதற்றம், சோர்வு, பயம் இல்லாமல் எழுதுங்கள்’’ என்று சொல்லும் சிறப்புக் கல்வி  பயிற்றுநர் ஷோபா அசோக் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்...



நீங்கள் ஏற்கனவே நிறைய பாடங்களைப் படித்து அதிலிருந்து குறிப்பெடுத்து வைத்திருப்பீர்கள். தேர்வு மிக அருகில் இருப்பதால் இனிமேல் உங்கள்  முக்கியமான, மூலப் புத்தகத்தை மட்டும் படித்தால் போதுமானது. ஒவ்வொரு பாடத்திலும் முக்கிய தலைப்புகளில் இருக்கும் முக்கியமான பகுதிகளை  பென்சில் மற்றும் பேனாவால் குறித்துக்கொண்டால், கவனம் சிதறாமல் முக்கிய குறிப்புகளை நினைவுவைத்துக்கொள்ள உதவும். மற்றும் திரும்பவும்  நினைவுப்படுத்திப் பார்க்கும்போது நேரம் விரயம் ஆவதைத் தடுக்கலாம்.

திரும்பவும் படிக்கும் கால அட்டவணை

எந்த விஷயமாக இருந்தாலும் அது வெற்றியடைய திட்டமிடல் அவசியம். பள்ளி மற்றும் பயிற்சி வகுப்பு (Tuition Class) நேரத்தைக்  கருத்தில்கொண்டு திரும்பவும் படிக்கும் கால அட்டவணையை (Revision Time Table) அமைக்க வேண்டியது அவசியம். இந்த ஒரு  மாதத்தில் தினமும் எவ்வளவு மணி நேரம் ஒவ்வொரு பாடங்களைத் (Chapters) திரும்பவும் Revise பண்ண தேவைப்படும் என்கிற  அட்டவணையைப் போடுவதால் தேர்வின்போது மனம் தெளிவாக இருக்கும்.

எல்லா பாடப் பகுதிகளையும் (Portions) பயிற்சியின் மூலம் முழுமையாக படித்துவிட்டோம் என்கிற தன்னம்பிக்கை இருக்கும். நிலுவையில்  உள்ள (Revision) பாடத்தை அடுத்த நாள் கட்டாயம் முடிக்க வேண்டும் என்ற இலக்குடன் படிக்க வேண்டும்.


ஒட்டுமொத்தத்தையும் குறிப்புகளாக்கும் ஒரு வரைபடம், மனதில் நிறுத்தவேண்டிய வரைபடம், குறிப்பேடுகள் (Flow chart & mind maps &  Venn diagram) கொண்ட இந்த வகையான பயிற்சிக்கான வரைபடத்தை நாமே நம் கையால் வரைந்து, தகவல்களை ஒரு தலைப்பை  முக்கியமான கட்டத்தில் எழுதி வைத்து, பின் அதை வைத்து துணைத் தலைப்பை ஒன்றன்பின் ஒன்றாக வெவ்வேறு கட்டங்களில் எழுதினால்  மறக்கவே மறக்காது.

விதவிதமாக வடிவங்களை (Shapes) பயன்படுத்தலாம், மற்றும், வண்ண வண்ண ஸ்கெட்ச் பேனாக்களை உபயோகப்படுத்தலாம். இவ்வாறு  செய்வதன் மூலம் ஒரு பத்தியை (Paragraphs) முழுவதும் படிக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஒருமுறை மேலோட்டமாகப் பார்த்தாலே  போதுமானது.

தேர்வின்போது பதற்றத்தைக் கையாளும்முறை

மிதமான பதற்றம் நமது செயல்திறனை மெருகேற்ற உதவும். தேர்வு நேரத்தில் மாணவர்கள் பதற்றமாக இருப்பது இயல்பே. ஆனால்,
இந்தப் பதற்றமானது தேர்வு நேரத்தில் எல்லையைத் தாண்டும்போது உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கிறது. இதனால், எதிர்மறையான  எண்ணங்கள் தேர்வின்போது கவனச்சிதறல் மற்றும் அதிகப்படியான இதயத்துடிப்பை ஏற்படுத்தும்.

அதிகப்படியான பதற்றத்தின் காரணமாக எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்திருந்தும் தேர்வுத்தாள்களில் பதில் எழுதாமலேயே வந்துவிடுவார்கள்.  ஆகவே, பதற்றத்தைத் தவிர்ப்பது அவசியம். வினாத்தாளில் மிகச்சரியாக விடை தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளியுங்கள். அதன்பின் மற்ற  வினாக்களை எதிர்கொள்ளுங்கள் பதற்றம் காணாமல் போகும்.
 
சக மாணாக்கருடன் குழு கலந்துரையாடல்

மாணவர்கள் குழுக்களாக படிப்பது (Group study), சக மாணவர்களுடன் வினாடி-வினா மூலம் கலந்துரையாடுவதால் நீங்களும் உங்கள்  நண்பர்களும் படித்ததை நினைவில் வைத்துக்கொள்ள உதவும். ஒரு பாடத்தில் உள்ள தலைப்பை பற்றி மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம்  தானும் பயின்றதுபோல் இருக்கும். பல முறை மாதிரி வினாத்தாள்களுக்கு விடை எழுதிப் பார்ப்பதன் மூலம் உங்களை நீங்களே சுயமதிப்பீடு  செய்துகொள்ளலாம். ஏதேனும் பாடத்தில் எந்தத் தலைப்பில் சந்தேகம் இருக்கிறதோ அதை மீண்டும் மீண்டும் பயிற்சி செய்வதன்மூலம் தெளிவடைந்து  கவனத்தில் நிறுத்த முடியும்.

நினைவாற்றலை மேம்படுத்தும் வழிகள்


‘‘என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக  இருக்கிறது”என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.

‘‘நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபகசக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது.  அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது”என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

‘‘நினைவாற்றல்”என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை  வளர்த்துக்கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால்  அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

ஸ்டிக் நோட்ஸ்

ஸ்டிக் நோட்ஸில் கடினமான சொற்கள் மற்றும் கணித சூத்திரங்கள், அறிவியல் அறிஞர்களின் பெயர்கள், அறிவியலின் வேதி உப்புக்களின் பெயர்  மற்றும் கனிமக் குறியீடுகள், போன்றவை நம் கண்ணில் அடிக்கடி படும் இடங்களில் ஒட்டி வைத்துக்கொண்டால் அதனை நாம் பார்க்கும்போது  நினைவில் ஆழமாக பதிந்து நிற்கும். இவ்வாறு அடிக்கடி பார்ப்பதன் மூலம், இது ஒரு பயிற்சிபோல அமைந்து நினைவாற்றல் அதிகரிக்கும்.

கடைகளில் பல வண்ணங்களில் ஸ்டிக் notes கிடைக்கிறது. அதில் பல வண்ணங்களில் எழுதி ஒட்டினால் அதன் மூலம் நமக்கு கான்செப்ட் எளிதா நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இதுபோன்ற பயிற்சி முறைகள் கணிதம் மற்றும் வேதியியல் பாடங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.

உணவில் கவனம் தேவை


தேர்வு எழுத செல்வதற்கு முன்பும் தேர்வு எழுதிவிட்டு வந்த பின்னரும் தண்ணீர் குடிக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளையும், மைதா  மாவினால் செய்த பலகாரங்களையும் உட்கொண்டால் உடலளவில் அசதி ஏற்படும். எனவே, இவற்றைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், கேக்,  பிஸ்கட், டப்பாவில் அடைக்கப்பட்டு உடனடியாக உட்கொள்ளும் நிலையில் உள்ள தின்பண்டங்களைச் சாப்பிடக்கூடாது.

பொதுத்தேர்வு முடியும் வரை உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத சரிவிகித உணவுகளை மாணவர்களுக்கு பெற்றோர்கள் கொடுக்க வேண்டும். முக்கியமாக  Fast food மற்றும் hotel களில் வாங்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்களுக்கு இந்த நேரத்தில் தேவையான அளவுக்கு ஓய்வும்  தூக்கமும் மிகமிக அவசியம்.

நீங்கள், எந்தப் பாடத்தை எப்படிப் படிக்கவேண்டும்; தேர்வுக்கு உங்களை எப்படித் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்; எது தேவை, தேவை இல்லை;  நீங்கள் தேர்வுக்காகப் படிக்கும் நேரத்தில் உங்களுக்கு எந்த வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்பதுவரை சொல்லிவிட்டோம். இந்த  வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற நிச்சயம் உதவும். பரிட்சையில் அதிக மதிப்பெண்களோடு வெற்றி பெற  வாழ்த்துகள்!

தொகுப்பு : தோ.திருத்துவராஜ்