அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!



மொழி

Once in a Blue Moon


அலுவலகத்தில் அனைவரும் பணியில் ஆழ்ந்திருந்தனர். ரகு மட்டும்போனில் “Once in a blue moon, you are speaking to me. How can I remember or recognize your voice man?” என்று பேசிக்கொண்டிருந்தார். அகிலா, அவர் பேசி முடித்தவுடன், “சார்... ‘வொன்ஸ் இன் ப்ளு மூன்’னு சொன்னீங்களே. அப்படின்னா என்னங்க சார் அர்த்தம்?” என்று கேட்டாள்.

குரல் வந்த திசையைத் திரும்பிப் பார்த்த ரகு “அதாவது, அகிலா ‘அத்திப் பூத்தது போல்’ என்றோ அல்லது ‘ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கு ஒரு  தரம்’ என்றோ ஒரு சொலவடையைக் கேட்டிருக்கிறாயா..? அதுதான் அதனுடைய அர்த்தம். ஆங்கிலத்தில் சொல்வதென்றால் very rarely (மிக மிக அரிதாக) எனலாம். வழக்கமாக இல்லாமல் எப்போதாவது ஒரு முறை நிகழ்வதை Once in a blue moon occurrence எனலாம்”
என்றார் ரகு.

“கல்லூரி நாட்களில் அகிலா புத்தகத்தை எடுத்து படித்ததெல்லாம் கூட Once in a blue moon occurrence ஆக கூட இருந்திருக்கலாம் சார்” என்றபடியே தன் காபி கோப்பையுடன் வந்தமர்ந்த ரவி, “சார்… ப்ளு மூன் பற்றி வேறெதும் தகவலுண்டுங்களா சார்?” எனக் கேட்டான். “மாசத்தில ஒரு முறை தான் பௌர்ணமி.

அதாவது, முழுநிலவு மாதத்தில் ஒரு முறைதான் வரும். மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு வருவதைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறாயா? அப்படி ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு நிலவு உதயமானால், அந்த இரண்டாவது முழு நிலவைத்தான் blue moon என்கிறார்கள்.

அது மட்டுமல்ல, ஏறக்குறைய 32 மாதங்களுக்கு ஒருமுறை அப்படிப்பட்ட blue moon உதயமாகிறதாம். அதனால்தான் once in a blue moon எனச் சொல்லுகிறார்கள்” என்றார் ரகு.

 “My parents live in Chennai but I am working in Kolkatta. So I happen to meet my parents once in a blue moon”…… “My father is not at all interested in watching movies but once in a blue moon, he use to accompany us” இந்த மாதிரி சொல்லிகிட்டே போகலாம்” என்றவரை இடைமறித்த அகிலா, “…. once bitten twice shy” அப்படிங்கறாங்களே!

அப்படின்னா என்னங்க சார்?” என்று கேட்டாள். தனது கடிகாரத்தைப் பார்த்த ரகு, “டைம் அப். லெட்மீ எக்ஸ்ப்ளைன் இன் த நெக்ஸ்ட் மீட்டிங்” என்றவாறே தனது லேப்டாப்பில் கண் பதித்தார்.ஆங்கில வார்த்தைச் சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்