இந்தியாவின் தேசிய கல்வி தினம்!



சிறப்பு தினம்

கல்வி என்பது அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாகவும் மாற்றம் அடையச்செய்கிறது.

ஒருவரின் கற்றல் அனுபவம் அது மாணவரின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி, உணர்வுகளின் வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற உதவுகிறது.

இத்தகைய பெருமைகளை உள்ளடக்கிய கல்வியையும் கல்வித் திட்டத்தை உருவாக்கியவரையும் சிறப்பிக்கும் விதமாக தேசிய கல்வி தினம் என்ற ஒரு நாள் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படுகிறது. இது எத்தனை பேருக்குத் தெரியும் என்பதைவிட இனியாவது தெரிந்துகொள்ளுங்கள்.

மௌலானா அபுல்கலாம் ஆசாத்  என்று அனைவராலும் அழைக்கப்பட்ட   மௌலானா அபுல்கலாம் முகையுதீன் அகமத் ஆசாத் விடுதலை இந்தியாவில் முதல் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டவர். இவர்தம் பிறந்தநாளைத்தான்  ஒவ்வோர் ஆண்டிலும் ‘இந்தியக் கல்விநாள்’ (தேசிய கல்வி தினம்) என இந்திய அரசு 2008-ல் அறிவித்தது. இவர் பிறந்தது 11.11.1888-ல் மெக்காவில் என்றாலும், இவர்தம் குடும்பம் கொல்கத்தாவை வாழிடமாகக் கொண்டிருந்தது.

இந்தியக் குடியரசில் நீண்டகால அளவில் கல்வி அமைச்சராக இருந்த பெருமை இவருக்குண்டு (10 ஆண்டுகள் 5 மாதங்கள்). 1958-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 22-ஆம் நாளில் இவர் மறைந்த பின்னர் 50 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் இவரின் நினைவு மத்திய அரசு ஆட்சியாளர்களுக்கு வந்தது போலும். 2008-ஆம் ஆண்டுதான் அவரின் பிறந்த நாளை ‘இந்தியக் கல்வி நாள்’ என இந்திய அரசு அறிவித்தது.

இந்தியக் கல்வியை உலக அளவில் உயர்த்த  ஐ.ஐ.டி (IIT),  அறிவியல் மற்றும் தொழிலியல் ஆராய்ச்சி மையம் (Centre for Scientific and Indusrial Research) ஆகிய அமைப்புகளைத் தம் அமைச்சுப் பணிக்காலத்தில் ஏற்படுத்தியவர்.

பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC) இவருடைய அமைச்சுக் காலத்தில்தான் நிறுவப்பட்டது. இவை இன்று உலக அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன. புதுடெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள் இவரது பெயரைத் தாங்கி உள்ளன.

நினைவாற்றலில் நிகரற்றவராகத் திகழ்ந்தவர் அபுல்கலாம். எதனையும் பகுத்தறிவோடு சிந்திக்கும் ஆற்றலைப் பெற்றிருந்த இவர் தம்முடைய 35ஆவது வயதில் அனைத்து இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

காங்கிரஸ் கட்சியில் இளம் வயதிலேயே இப்பதவியைப் பெற்ற  தலைவர் இவர். இவருடைய அறிவாற்றலையும் செயல்திறத்தையும் உணர்ந்த காந்தியடிகள் இவரைப் ‘பிளாட்டோ, அரிஸ்டாட்டில், பிதாகரஸ் ஆகிய மூவரும் சேர்ந்த ஆளுமை உடையவர்’ எனப்  புகழாரம்  சூட்டிப் பாராட்டினார்.

அபுல்கலாம் ஆசாத் நாட்டின் விடுதலைக்காகவும் கல்வி வளர்ச்சிக்காவும் ஆற்றிய பணிகள் பிறர் எவருடையனவற்றையும்விடக் குறைந்ததல்ல. 1923-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் இந்து - முஸ்லிம் எனும் இருபெரும் சமூக மக்களுக்கு விடுதலை உணர்வூட்டி போராட்டத்திற்கு மக்களை அணி திரட்டிய நாட்டுப்பற்றாளர் அபுல்கலாம் ஆசாத்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின்போது சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து-முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்திய முஸ்லிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்து - முஸ்லிம் ஒற்றுமையுடன் இந்தியாவை மேம்படுத்தவேண்டும் என்று நாளும் உழைத்த நல்ல உள்ளம் கொண்ட பேரறிவாளர்.

அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் அமைப்புகளான சாகித்திய அகாடமி, (1954), லலித் கலா அகாடமி (1954), கலாசார உறவு களுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பலவற்றை உருவாக்கியவர் அபுல்கலாம் ஆசாத். ஆங்கிலேய ஆட்சியில் இந்தியக் கல்வியில் கலாசாரம் தொடர்பான கூறுகள் குறைவாக இருந்ததை உணர்ந்த இவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.

கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவர் பொறுப்பிலிருந்த அபுல்கலாம்  ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய - மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப் பரிந்துரைத்தார். பல்கலைக்கழகங்களுக்குக் கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று வலியுறுத்தியவர். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாகவும் திகழ்ந்தார்.

இவருடைய கல்வி வளர்ச்சிச் சிந்தனைகள்தாம் 1986-ஆம் ஆண்டின் தேசிய கல்விக் கொள்கைக்கு அடித்தளமாயிருந்ததாகக் கல்வியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அபுல்கலாம் ஆசாத்தின்  பிறந்தநாளை  இந்தியக் கல்வி நாளாகக் கொண்டாடும்போது அப்பெருமகனாரின் தொண்டுச் சிறப்பினையும் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதே இலக்காகக் கொண்ட அவருடைய கொள்கைகளையும் பணித்திறனையும் கல்வி வளர்ச்சிச் சிந்தனைகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படும் இவரின் பிறந்தநாளன்று பேரறிவாளர் எனக் காந்தியடிகளால் போற்றப்பட்ட அபுல்கலாம் ஆசாத் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வோம்.

* எல்லா மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வி வழங்க வேண்டும்.

* அனைத்துக் கல்வித் திட்டங்களும் மத சார்பற்ற அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

  14 வயது வரை இலவசக் கல்வி யாவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
* பள்ளிக்கூடக் கல்வி தாய்மொழியில்தான் அமைதல் வேண்டும்.

இவையெல்லாம் ஆசாத் அவர்களால் விடுதலை இந்தியாவின் மேன்மைக்காக முன்மொழியப்பட்ட கல்விக் கொள்கைகள். இந்தியாவைக் கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் என்று அபுல்கலாம் ஆசாத் கண்ட கனவு இன்று நிறைவேறிவிட்டதா?

என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அடிப்படை கல்வியை ஒவ்வொரு குடிமகனும் பெற வேண்டும் என்ற நிலைக்கே நாம் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியுள்ளது.

சமூக ஏற்றத்தாழ்வு, வியாபார நோக்கம், அதிகார வர்க்கங்களின் அலட்சியம், மக்களின் தெளிவின்மை, வறுமை, கிராமப்புறப் பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள், கல்வி வளர்ச்சியில் இந்தியாவை வளர்ச்சியடையாத ஒரு நாடாகவே வைத்துள்ளன.

ஆண்டாண்டுகளாக பின்பற்றிவந்த கல்வி முறையைத் ‘தரம்’ என்ற போலியான போர்வையால் மாற்றுவது, கல்வி தொடர்பான மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவது, 50 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையைப் பின்பற்றி எவ்வித இடருமின்றி தமிழகம் இயங்கிவந்தது.

ஆனால், இங்கு  நிலவிவரும் அரசியல் சூழ்நிலையில் குளிர்காய்ந்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் புகுத்த முனைவது என்பனவெல்லாம் இன்றைக்குத் தமிழ்நாடு கல்வி எதிர்கொண்டுள்ள மாபெரும் சிக்கல்களாக மாறியுள்ளன. இதில் பள்ளிக்கூடக் கல்வி தாய்மொழியில்தான் இருக்க வேண்டும் என்பதை எப்படி நிறைவேற்றுவது.

இந்தியா கல்வியில் முன்னேற ஒட்டுமொத்த மக்களிடமும் மிகப்பெரிய விழிப்புணர்வு வரவேண்டும். தேசிய கல்வி தினத்தன்று, அதற்கான வழிமுறைகள் பற்றி ஆராய வேண்டியது நம் அனைவரின் கடமை. சிந்திப்போம்… செயல்படுவோம்!

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

முனைவர் த.இரத்தின சபாபதி