செய்தித் தொகுப்பு



ஐ.ஐ.டி-யில் முதுநிலைப் படிப்பு

கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில், பிஎச்.டி. எம்.டெக்., மற்றும் எம்.எஸ். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: பிஎச்.டி., - எஞ்சினியரிங் (ஏரோஸ்பேஸ், பயோலஜிக்கல் சயின்ஸ்  அண்ட் பயோ எஞ்சினியரிங், கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டீரியல் சயின்ஸ் மற்றும் போடானிக்ஸ் எஞ்சினியரிங்).பிஎச்.டி. - அறிவியல் (கெமிஸ்ட்ரி, எர்த் சயின்ஸ், மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ்). பிஎச்.டி., - ஹூயூமானிடிக்ஸ் அண்ட் சோசியல் சயின்ஸ் மற்றும் பிஎச்.டி.- மேனேஜ்மென்ட்.
எம்.டெக்., - எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்.
எம்.எஸ்.,- கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், போடானிக்ஸ் சயின்ஸ் எஞ்சினியரிங்.

கல்வித்தகுதி: விண்ணப்பிக்கும் பாடப்பிரிவுக்கு ஏற்ற துறையில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று கேட், ஜே.ஆர்.எஃப்.,நெட் போன்ற ஏதேனும் ஒரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.11.2017
மேலும் விவரங்களுக்கு: www.iitk.ac.in

தட்டச்சுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

மாநிலத் தொழி்ல்நுட்பக் கல்வி ஆணையரும், தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவருமான ஆர்.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்களும், தனித்தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விவரங்களை (கல்வித்தகுதி, தேர்வுக் கட்டணம்) www.tndte.gov.in என்றஇணையதளத்தில் டிசம்பர் 8-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-22351018 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். கடைசி நாளுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

மீனவப் பட்டதாரிகளுக்கு இலவச ஐ.ஏ.எஸ்.தேர்வுப் பயிற்சி!

கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதின் அடிப்படையில் தமிழக அரசு மீன்வளத்துறையும்  அண்ணா மேலாண்மைப் பயிற்சி நிலையமும் இணைந்து ஆண்டுதோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவர் குடும்பங்களைச் சேர்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு ஐ.ஏ.எஸ். போட்டித்தேர்வுக்கான பிரத்யேக பயிற்சியை அளிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடல் மற்றும் உள்நாட்டு மீனவக் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் இப்பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பப் படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத் துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து கட்டணமின்றி பதிவிறக்கம் செய்யலாம்... அல்லது விண்ணப்பப் படிவங்களை மண்டல மீன்வளத் துறைத் துணை இணை இயக்குநர்கள், மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் இலவசமாக பெறலாம்.

பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்குப் பதிவு அஞ்சல் அல்லது நேரடியாக அக்டோபர் 23-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. தற்போது மீனவ இளைஞர்கள் இப்பயிற்சியை முழுமையாகப் பயன்படுத்த ஏதுவாக, பயிற்சிக்கான விண்ணப்பம் பெறும் கடைசிநாள் நவம்பர் 5-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க வெளிமாநிலப் சுற்றுலா!

மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் சார்பில் (ஆர்.எம்.எஸ்.ஏ.), கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில், அரசுப் பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடங்
களில் சிறப்பாகப் படிக்கும், மீத்திறன் கொண்ட மாணவர்களை, ஊக்குவிக்கும் வகையில், கல்விச் சுற்றுலாத் திட்டம் அறிமுகப்
படுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்கு 100 பேர் வீதம், 3,200 பேர், வெளிமாநிலங்களுக்கு இரண்டு நாட்கள் கல்விச் சுற்றுலா செல்ல உள்ளனர். இவர்களின் பயணச்செலவை, ரயில்வே துறை பொறுப்பேற்கிறது. தங்கும் வசதி, உணவு உள்ளிட்ட செலவினங்களுக்கு, தலா 2,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே, கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டந்தோறும் பள்ளிக்குத் தலா ஒரு மாணவர் வீதம், 100 பள்ளிகளில் இருந்து 100 மாணவர்கள்  அழைத்துச் செல்லப்பட உள்ளனர். ‘20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், ஐந்து பேர் பாதுகாப்புக் காரணங்களுக்காக உடன் செல்ல உள்ளனர். வெளிமாநிலங்களுக்குச் சுற்றுலாச் செல்வதன் மூலம் மாணவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைப்பதோடு, அறிவுசார் தேடல் விரிவடையும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.