ஊரக மேம்பாட்டு மேலாண்மை முதுநிலைப் பட்டயப்படிப்பு!அட்மிஷன்

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


தேசிய ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் நிறுவனம் (National Institute of Rural Development & Panchayati Raj), இந்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் செயல்பட்டுவருகிறது. இதில் ஒரு வருட கால அளவு கொண்ட ஊரக மேம்பாட்டு மேலாண்மை முதுநிலைப் பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Rural Development Management - PGDRDM) வழங்கப்பட்டு வருகிறது.

2018ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கி டிசம்பர் வரையிலான இப்பட்டயப்படிப்பில் சேர்வதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.கல்வித்தகுதி: இந்தப் படிப்பிற்கான சேர்க்கைக்குப் பல்கலைக்கழக மானியக்குழுவினால் (UGC) அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1.1.2018 ஆம் நாளுக்குள் பட்டம் பெற்றுவிடக்கூடிய நிலையில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://nird.org.in/pgdrdm.aspx எனும் இந்நிறுவன இணையதளத்தின் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். இத்தளத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தினைத் தரவிறக்கம் செய்து, நிரப்பித் தபால் வழியாகவும் அனுப்பி வைக்கலாம்.

தரவிறக்கம் செய்து நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணமாக ‘NIRD  PGDRDM’ எனும் பெயரில் ‘Hyderabad’ எனுமிடத்தில் மாற்றத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ.400, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிப் பிரிவினர் ரூ. 200-க்கான வங்கி வரைவோலையினைப் (Demand Draft) பெற்று இணைத்து, ‘Coordinator (Admissions), Centre for PG Studies and Distance Education (CPGS&DE), National Institute of Rural Development & Panchayati Raj Rajendranagar, Hyderabad - 500030’ எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பப் படிவம் சென்றடையக் கடைசி நாள் 10.11.2017.   வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு & காஷ்மீர், அந்தமான் & நிக்கோபர் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் 15.11.2017 ஆம் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்பி வைக்கலாம்.

நுழைவுத்தேர்வு: விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் தமிழ்நாட்டில் சென்னை உட்பட பெங்களூரு, போபால், புவனேஸ்வர், கவுஹாத்தி, ஐதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கொல்கத்தா, லக்னோ, புதுடெல்லி, பாட்னா, புனே மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தேர்வு மையங்களில் 19.11.2017 அன்று நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

மாணவர் சேர்க்கை: நுழைவுத்தேர்வைத் தொடர்ந்து, குழுக் கலந்துரையாடல் (Group Discussion), நேர்காணல் (Interview) ஆகியவை நடத்தப்பட்டு, இந்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தப்படும். 2018 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இப்படிப்பிற்கான வகுப்புகள் தொடங்கும்.

கல்விக் கட்டணம்: இப்படிப்பிற்குப் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் கல்விக் கட்டணமாக ரூ.1.60 லட்சமும், எஸ்.சி., எஸ்.டி.
மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.1.25 லட்சமும் செலுத்த வேண்டும். தங்கும் விடுதி மற்றும் உணவுக் கட்டணமாக ரூ.1.00 லட்சம் தனியாகச் செலுத்த வேண்டியிருக்கும்.

இப்படிப்பு குறித்த மேலும் கூடுதல் தகவல்களைப் பெற மேற்காணும் இணையதளத்தினைப் பார்க்கலாம் அல்லது “Coordinator (Admissions), Centre for PG Studies and Distance Education (CPGS&DE), National Institute of Rural Development & Panchayati Raj, Rajendranagar, Hyderabad - 500030” எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது இந்நிறுவனத்தின் 040 - 24008442, 24008460 எனும் தொலைபேசி எண்களிலோ அல்லது 8499865285 எனும் அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பெறலாம்.

 - தேனி மு.சுப்பிரமணி