நிலத்தடி நீரைச் சுத்திகரிக்க அரசுப் பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு!புதுமை

அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றில் மட்டுமல்ல சுற்றுச்சூழல் சார்ந்த கண்டுபிடிப்புகளிலும் இளம் விஞ்ஞானிகளாக நம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சிலர் பிரகாசிக்கிறார்கள்.

நம்நாட்டு மாணவர்களின் அரசுப் பள்ளி மாணவர்களின் தற்போதைய  கண்டுபிடிப்புகளையும், திறனையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. கலாம் சேட்டிலைட்டை தொடர்ந்து  நம் மாணவர்களின் அறிவியலின் திறமை உலக நாடுகளை வியப்படைய வைத்துள்ளது மறுப்பதற்கில்லை.

இதனை மெய்ப்பிக்கும் விதமாகக் கண்டுபிடிப்பு மற்றும் நவீன அறிவியலில் கவனம் செலுத்தி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் சாதித்துள்ளனர். எளிய முறையில் செங்கல் அறுக்கும் கருவி, மின்சாரம் தயாரித்தல், எரிபொருள் இல்லாமல் இயங்கும் நாற்று நடும் கருவி போன்ற கண்டுபிடிப்புகள் இவ்வரசுப் பள்ளி மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டதுதான்.

இதை தொடர்ந்து  நிலத்தடிநீரில் உள்ள உப்புத் தன்மையைக் குறைக்கும் புதிய மழைநீர் சேகரிப்பு திட்டத்தை 6,7,8ம் வகுப்பு படிக்கும் முஹம்மது, நாகூர் மீரான், மார்ட்டீன் சஞ்சய், கதிர்வேல், வீர கணபதி, ரகுராமன் ஆகிய மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்பள்ளி மாணவர்களின் அனைத்துக்கண்டுபிடிப்பிற்கும் செயல்வடிவம் கொடுத்து சாத்தியப்படுத்திய வழிகாட்டி ஆசிரியர் செல்வ சிதம்பரம்  இப்புதிய மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“நவீன மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகியவற்றின் விளைவால் மரங்கள் அழிக்கப்பட்டு பல நகரங்கள் கட்டடக் காடுகளாகிப் பருவமழை பொய்த்துள்ளது. இப்படி பருவம் மாறிப் பொழியும் மழையைச் சேகரிக்க நம்மிடம் மழைநீர் சேகரிப்பு எனும் திட்டம் உள்ளது. ஆனால், இப்படி சேகரிக்கப்படும் மழைநீரானது அதிக உப்புத்தன்மை கொண்டதாக இருப்பதால் நாளடைவில் அந்நீரைப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகவும் வாய்ப்புள்ளது.

நிலத்தடி நீரில் உள்ள உப்புத்தன்மையைக் குறைக்கவும், மழைநீரை துளியும் வீணாகாமல் சேகரிப்பதற்கும் புதுமையான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை நாங்கள் உருவாக்கலாம் என்று இருக்கிறோம் என்று முஹம்மது, நாகூர் மீரான், மார்ட்டீன் சஞ்சய், கதிர்வேல், வீர கணபதி, ரகுராமன் ஆகிய மாணவர்கள் சொன்னபோது என்னால் முதலில் அதை நம்ப முடியவில்லை. பின் இத்திட்டத்தின் மீதுள்ள அம்மாணவர்களின் நம்பிக்கை கண்டு செயல்படுத்த தயாரானோம்” என ஆரம்பித்த செல்வ சிதம்பரம் அத்திட்டத்தின் செயல்முறையையும் விளக்கினார்.

“எங்கள் பள்ளியில் இரண்டு போர்வெல் உள்ளது. அதற்கு அருகில் ஆறு அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்ட ஒரு குழியைத் தோண்டினோம். அதில் ஐந்தரை அடிக்குத் தேங்காய் மட்டைகளை அடுக்கி தேங்காய் மட்டைகள் தண்ணீரில் அடித்துச் செல்லாமல் இருப்பதற்கு அதன்மேல் கிணற்றுக்குப் பயன்படுத்தப்படும் சிமென்ட் ஸ்லாபை அமைத்தோம்.

சாதாரண மழைநீர் சேகரிப்புதொட்டியில் நீரை உறிஞ்சுவதற்குச் செங்கல் ஜல்லியைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், இதில் நீரானது முழுமையாக உறிஞ்சப்படாமல் வீணாகும். தேங்காய் நாருக்குச் செங்கல்லைக்காட்டிலும் உரிஞ்சும் சக்தி அதிகம். மழைநீர் தேங்காய் மட்டைகளில் விழும்போது அதன் நிறம் நீரில் கலக்காமல் இருக்க கார்பன் துண்டுகளாகச் சத்துணவு அடுப்பில் இருந்து எடுத்த அடுப்புக்கறியை தேங்காய்  மட்டைகளுக்குக் கீழே தூவினோம்.

இந்த சுத்திகரிப்பு அமைப்புடன் எங்கள் பள்ளியில் உள்ள ஆறு கட்டடங்களிலிருந்தும் தண்ணீர் வருவதற்கு பிளாஸ்டிக் பைப்புகளை இணைத்தோம். குழிக்குள் உள்ள தேங்காய் மட்டைகள் நீரை உறிஞ்சி மண்ணுக்குள் செலுத்தி நிலத்துக்கு அடியில் மழைநீரானது சேமிக்கப்படும்படி செய்தோம்” என்றார் செல்வ சிதம்பரம்.மேலும் அவர், “கடந்த சில  நாட்களாக எங்கள் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இம்மழைநீரானது பிளாஸ்டிக் பைப் மூலம் நேராக குழிக்குள் இறங்கியது.

தேங்காய் மட்டைகள் அந்நீரை துளியும் வீணாகாமல் உறிஞ்சி நிலத்தடியில் சேர்த்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் சற்று உயர்ந்துள்ளது. அதோடு நிலத்தடி நீரின் உப்புத்தன்மை 1650 டி.சி.எஸ் இருந்து 1440 டி.சி.எஸ் என்ற அளவிற்குக் குறைந்துள்ளது. முன்பெல்லாம் போர்வெல்லில் தண்ணீர் வர தாமதமாகும். இப்போது உடனே தண்ணீர் வருவதால் நிலத்தடி நீர் அதிகரித்துள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

முத்துப்பேட்டை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் சொக்கலிங்கம், சுப்ரமணியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கருணாமூர்த்தி, மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் நித்தையன் மற்றும் சக ஆசிரியர்கள் ஆகியோர்  எங்கள் மாணவர்களின் இத்திட்டத்தைக் கண்டு வெகுவாகப் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்” என மகிழ்ச்சி பொங்கும் வார்த்தைகளோடு நிறைவுசெய்தார் சிதம்பரம்.

- குரு