மவுசு குறையாத மினி ஆப்செட் பிரின்டிங்!



சுயதொழில்

95,000 மாத வருமானம் ஈட்டலாம்!


இன்றைய காலகட்டத்தில் எந்த வியாபாரமாக இருந்தாலும், தொழில் நிறுவனமாக இருந்தாலும் மிகவும் அத்தியாவசியமானது விளம்பரம். இதில் நெடுங்காலமாக இருந்து வருவது நோட்டீஸ் அடித்து கொடுக்கும் எளிய விளம்பர முறை பிரசித்தி பெற்றது.

அதேபோல காதுகுத்து முதல் கல்யாணம் வரை அனைத்து வகையான விழாக்களுக்கும் அழைப்பிதழ் என்பது மக்கள் பயன்பாட்டில் இன்றியமையாததாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் மினி ஆப்செட் பிரின்டிங் ஒரு சிறந்த தொழிலாகும்.

தொழிலுக்கான சாத்தியக் கூறுகள்

* திருமணம், காதணி விழா, கோயில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், கடை விளம்பரங்கள் போன்ற அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும்  பத்திரிகைகள் அடிக்க பயன்படுத்தப்படுகிறது.
* பத்திரிகைகள், பில் புக்ஸ், விசிட்டிங் கார்ட்ஸ் போன்றவற்றிற்கு ஆர்டர் கொடுத்தவுடன் உடனடியாக தயாரித்து கொடுக்க முடியும்.
* இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு மிகவும் தேவையான நல்ல லாபம் தரும் தொழில்.
* அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கலாம்.

ஒரு திருமண விழா மற்றும் சுப நிகழ்ச்சிகள் என்றாலே முதன் முதலில் தேவை பத்திரிகை. அதேபோல தொழில், வியாபாரம் என்றதும் நோட்டீஸ், பில் புத்தகங்கள், நோட் பேடுகள் என இவை இன்றளவும் மிகவும் இன்றியமையாதவை. குறைந்த விலையில் எளிதில் மக்களிடம் சென்றடைவதால் நோட்டீசின் தேவை மிக அதிகம்.

எனவேதான் மினி ஆப்செட் பிரின்டிங் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. ஒரு காலத்தில் பத்திரிகைகள், துண்டுப்பிரசுரங்கள் தயாரிப்பதற்கான அச்சு எந்திரப் பயன்பாடு மிகவும் சிரமமான ஒன்று. ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்து அதை ஓர் எந்திரத்தில் இட்டு அச்சிட்டு பிறகு அதில் குறைகள் மற்றும் பிழைகள் திருத்தம் செய்து பிரின்ட் செய்து தருவார்கள். இன்றைய கணினி யுகத்தில் பிரின்டிங் மிகவும் எளிதாக மாறிவிட்டது.

நாம் பிரின்ட் செய்ய வேண்டிய பத்திரிகையை என்ன வண்ணத்தில் வேண்டுமோ அதை நாம் கணினி மூலம் வடிவமைத்து விரும்பியபடி தயார் செய்துகொள்ளலாம். அதை எப்படி வேண்டுமானாலும் திருத்தம் செய்துகொள்ளலாம். இதை கம்போசிங் என கூறுவர். இதில் ஒரே நிறம் என்றால் அப்படியே பிரின்ட் எடுத்துக்கொள்ளலாம். இரண்டு நிறம் வேண்டுமானால் இந்த பிரின்டிங்கை இருமுறை இரு வண்ணங்களில் பிரின்ட் செய்ய வேண்டும். இதற்கு டிடிபி முறையில் இரண்டு கம்போசிங் செய்ய வேண்டும்.

இதை சாதாரண கணினி பிரின்டிங் மெஷினில் பாலிஸ்டர் மாஸ்டர் போர்டு என்ற பேப்பரில் பிரின்டிங் செய்தால் போதும்… உங்களுக்கு அச்சிடும் போர்டு தயாராகிவிடும். இந்த பாலிஸ்டர் மாஸ்டர் போர்டு பேப்பரை மினி ஆப்செட் எந்திரத்தில் பொருத்தி பிறகு அச்சிடும் பேப்பரை அடுக்கி வைத்து என்ன நிறம் தேவையோ அதற்கான மையை நிரப்பி எந்திரத்தில் ஓடவிடவும். மிக எளிதாக வேகமாக உங்கள் பத்திரிகை அல்லது அச்சுப் பக்கங்கள் அச்சிட்டு வெளியே வந்துவிடும்.

இன்றைய காலகட்டங்களில் பத்திரிகை, துண்டுப்பிரசுரம் ஆகியவற்றை ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே தயாரித்து கொடுக்க முடியும். இரண்டு நிறங்கள் அச்சிட ஒரு நிறத்தில் அச்சிட்ட பின் அடுத்த எந்திரத்தில் வேறு நிற மையுடன் பிரின்ட் செய்யலாம். இந்த அச்சுக்கூடத்தில் கட்டிங் எந்திரம், பைண்டிங் எந்திரம், பின் அடிக்கும் எந்திரம் ஆகியவை இருக்கும்.

இதன் மூலம் பில் புத்தகம், படிக்கும் புத்தகம், வாழ்த்து அட்டை, திருமணம், காதணி விழா, கோயில் திருவிழா, விளம்பரங்கள் மற்றும் அலுவலக விழாக்கள் போன்ற பலவற்றை அச்சிடலாம். கணினி பயன்பாட்டில் நல்ல பயிற்சி இருந்தால் சிறப்பான நல்ல வருவாய் தரும் தொழிலாக இது அமையும். இதில் காகிதம் தரத்திற்கேற்ப உபயோகிப்பாளர் தேவைகேற்ப மாறுபடும்.இந்த காகித விலை நம்மைச் சேராது. மற்றபடி அச்சிடும் வேலைக்கான கூலியே நமது வருமானம். மிகச்சிறந்த தேவையான தொழில்.

மினி ஆப்செட்டுக்கு பிரின்டிங் எந்திரம் இரண்டு சைஸ்களில் வருகின்றன. இந்த எந்திரத்தில் காகிதம் அட்டை மற்றும் நான்-ஓவன் துணி மற்றும் தானியங்கி எந்திரத்தில் தயாரித்த நான்-ஓவன் துணிப் பைகளையும் அச்சிடலாம். அச்சை தயாரிக்க பாலிஸ்டர் மாஸ்டர் போர்டு என்ற அட்டை இருந்தால் போதும்…

நாம் அச்சிட நினைக்கும் பக்கங்களை அதில் சாதாரண கணினி காப்பிங் மெஷினில் பிரின்ட் செய்து, அதை எந்திரத்தில் பொருத்தி தேவையான அளவு பிரின்ட் செய்து கொள்ளலாம். பாலிஸ்டர் மாஸ்டர் போர்டு மிகக் குறைவான விலையில் கிடைப்பதால் அச்சிட மிகக் குறைந்த நேரத்தில் எளிதாகக் குறைந்த விலையில் மாஸ்டர் பிரின்ட் செய்துகொள்ளலாம்.

திட்ட அறிக்கை:
முதலீடு:
இடம்    : வாடகை
கட்டடம்    : வாடகை 
எந்திரங்கள் மற்றும்
உபகரணங்கள்                  : 11.50  லட்சம்
மின்சாரம் &
நிறுவும் செலவு    : 0.30 லட்சம்
இதர செலவுகள்    : 0.20 லட்சம்
நடைமுறை
மூலதனம்    : 1.00   லட்சம்
மொத்த முதலீடு    : 13.00 லட்சம்
இந்தத் தொழிலை அரசின் மானியத்துடன் கடன் பெற்று செய்யலாம்.
மொத்த திட்ட மதிப்பீடு    : 13.00 லட்சம்
நமது பங்கு 5%     : 0.65 லட்சம்
அரசு மானியம் 25%    : 3.25 லட்சம்
வங்கி கடன்    : 9.10 லட்சம்
தேவையான எந்திரங்கள்:
Auto Printing Machine
(2 nos)      - Rs. 9.75 லட்சம்
Cutting Machine (1 no)    - Rs. 0.50 லட்சம் 
Computer Systems (2 nos)    - Rs. 0.50 லட்சம்
Printer (2 nos)    - Rs. 0.25
      லட்சம்
Binding and other Machines    - Rs.0.50 லட்சம்
மொத்தம்    - Rs.11.50 லட்சம்

பிரின்டிங் பிரஸ்:

* எந்திரத் திறன்:
ஒரு எந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 3,000 முதல் 6,000 காப்பிகள் பிரின்டிங் செய்ய முடியும். நாம் 6,000 காப்பிகள் என வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு 40,000 காப்பிகள் பிரின்டிங் செய்யமுடியும்.ஒரு நாளைக்கு இரண்டு எந்திரத்தில் 80,000 காப்பிகள் வரை பிரின்டிங் செய்ய முடியும்.

*  பொதுவாக ரூ.150 முதல் ரூ.180 வரை 1,000 காப்பிகள் பிரின்டிங் செய்ய கட்டணமாக வாங்குகிறோம். இது பிரின்டிங்
தரத்தைப் பொறுத்து மாறுபடும்.

*பிரின்டிங் செய்யப்படும் பேப்பர் அளவு மட்டும் தரம் வாடிக்கையாளரின் தேவையை பொறுத்து மாறுபடும். 80,000 காப்பிகள் வரை பிரின்டிங் செய்ய தேவையான இங்கின் விலை ரூ.2000 என வைத்துக்கொள்வோம்.

வருமானம் விவரம்

ஒரு நாளைக்கு இரண்டு எந்திரத்தில் 80,000 காப்பிகள் வரை பிரின்டிங் செய்தால்.
1000 காப்பிகள் பிரின்டிங் செய்ய ரூ.150
80,000 காப்பிகள் பிரின்ட் செய்ய ரூ.12,000 என வைத்துகொள்வோம்.
ஒரு மாதத்திற்கு ரூ.3,00,000 வருமானம் கிடைக்கும்.
மூலப்பொருட்கள்:
ஒரு நாளைக்கு     -   விலை ரூ.2000
ஒரு மாதத்திற்கு    - ரூ.50,000
ஒரு மாதத்திற்கு
பாலிஸ்டர் போர்டின் விலை - ரூ.10,000
மொத்தம்    - ரூ.60,000
பேப்பர் விலை  வாடிக்கையாளரை சார்ந்தது*   
வேலையாட்கள் சம்பளம்:
மேலாளர்    : ரூ.10,000  
வடிவமைப்பாளர் 
2 x 9,000    : ரூ.18,000
மெஷின் ஆப்பரேட்டர்
3x8,000    : ரூ.24,000
மார்கெட்டிங்
பணியாளர்     : ரூ. 8,000
பேக்கிங் பணியாளர்
2 x 6,000    : ரூ.12,000
மொத்த சம்பளம்    : ரூ.72,000 
மின்சாரம்:
ஒரு மாதத்திற்குத் தேவையான மின்சாரக் கட்டணம் ரூ.5,000 என வைத்துக்கொள்வோம்.
மொத்த செலவு:
மூலப்பொருட்கள்    : ரூ.60,000 
மின்சாரம்        : ரூ.05,000  
சம்பளம்        : ரூ.72,000  
வாடகை        : ரூ.10,000  
விற்பனைச் செலவு    : ரூ.10,000  
நிர்வாகச் செலவு    : ரூ.05,000
மெஷின் சர்வீஸ்&
மெயின்டனென்ஸ்       : ரூ.05,000
தேய்மானம் 15%    : ரூ.15,000
கடன் வட்டி        : ரூ.10,000  
கடன் தவணை
(60 தவணை)        : ரூ.15,000  
மொத்தம்        : ரூ.2,07,000  
மொத்த செலவு தோராயமாக ரூ.2,05,000 என வைத்துக்கொள்வோம்
லாபம் விவரம்:
மொத்த வரவு        : ரூ.3,00,000  
மொத்த செலவு    : ரூ.2,05,000  
லாபம்        : ரூ. 95,000  

எந்தத் தொழிலாக இருந்தாலும் முன் அனுபவம் அல்லது முன் அனுபவம் உள்ளவர்களின் வழிகாட்டுதல் இருந்தால் நிச்சயம் நல்ல வருவாய் ஈட்ட முடியும். அதேபோல் உழைப்பையும் உயர்வுக்கான உறுதியையும் கொண்டவர்களும் சொந்தத் தொழிலில் சாதிக்கலாம்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்