நல்ல விஷயம் 4



வளாகம்

வாசிக்க வேண்டிய வலைத்தளம்: www.thiruvalluvan.online

திருவள்ளுவன் என்ற பெயரில் செயல்பட்டுவரும் இந்த வலைத்தளம் அன்றாடச் செய்திகள், மருத்துவம், ஆன்மிகம், நாட்டுநடப்பு, காணொளிக் காட்சிப் பதிவுகள், வரலாற்றுப் பதிவுகள் எனப் பயனுள்ள தகவல்களின் பெட்டகமாக விளங்குகிறது. அன்றாட சூழலுக்கு ஏற்றபடி மக்களுக்கு அறிவுரைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் கட்டுரைக்களுக்காகக் கண்ணாடி என்ற தலைப்புடன் ஒரு பகுதியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகநூல் பக்கங்களில் பதிவிடப்படும் சில பயனுள்ள பதிவுகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. திருக்குறள் என்ற தலைப்பில் வான்சிறப்பு, இல்வாழ்க்கை, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல், வாழ்க்கைத் துணைநலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல் போன்ற திருக்குறள் அதிகாரங்களும் அவற்றுக்கான விளக்கங்களும் பதிவிடப்பட்டு அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் சிறப்பான வலைத்தளமாக உள்ளது.
 
படிக்க வேண்டிய புத்தகம்: சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்

ஒரு நிர்வாகி எப்படி இருக்கவேண்டும்? அவரது செயல்பாடுகள் எத்தகையவையாக இருக்கவேண்டும்? தனது குழுவினரோடு சேர்ந்து வெற்றி இலக்கை அடைய எத்தகைய முயற்சிகளைச் செய்ய வேண்டும்? என்பன போன்ற அற்புதமான வழிகளை எடுத்துரைக்கிறது இந்த நூல். நிர்வாகிகளாக எவரும் பிறப்பதில்லை… உருவாக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

சிறந்த நிர்வாகியாக வேண்டும் என்கிற உணர்வு மனதில் அழுத்தமாக இருந்தால் போதும். படிப்பறிவு, அனுபவ அறிவோடு, பல முன்னணி நிர்வாகிகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றி யார் வேண்டுமானாலும் நிர்வாகி ஆகலாம் என்பதை விவரித்து உத்வேகத்தைத் தரும் வகையில் ஆசிரியர் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன் இந்நூலை உருவாக்கியிருக்கிறார். (வெளியீடு: மேகதூதன் பதிப்பகம், பழைய எண்: 24, புதிய எண்: 28, சின்னப்பா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600 005. விலை ரூ.45. தொடர்புக்கு: 044 - 42155831)

பார்க்கவேண்டிய இடம் - திருவெள்ளறை சுவஸ்திக் கிணறு

சென்னையில் கிணறுகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டாலும் நாம் வெவ்வேறு இடங்களில் இதுவரை வட்டம், சதுரம், செவ்வகம் போன்ற வடிவங்களில் கிணறுகளைப் பார்த்திருப்போம். ஆனால், சுவஸ்திக் வடிவில் பிரம்மாண்ட கிணறைப் பார்த்திருக்க முடியாது. திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் வழியில் திருவெள்ளறை என்ற ஊரில் அமைந்துள்ளது சுவஸ்திக் வடிவில் ஒரு கிணறு. கி.பி. எட்டாம் நூற்றாண்டில் கம்பன் அரையன் என்ற மன்னனால் கட்டப்பட்டது.

சுவஸ்திக் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிணற்றில் இறப்பிலா வாழ்க்கையைப் பற்றிய பாடல் வரிகள் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது. இந்தக் கிணற்றை ‘மற்பிடுகு பெருங்கிணறு’ என்றும் கூறுகின்றனர்.முப்பதுக்கு முப்பது சதுர வடிவிலான இக்கிணற்றில். நான்கு பக்கமும் படிக்கட்டுகள் இறங்குகின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் 52 படிகள் உள்ளன.

உண்மையில் இதுவொரு சதுரவடிவக் குளம், படிகள் மட்டுமே நான்கு பக்கமும் நீண்டு சுவஸ்திக் வடிவில் அமைந்துள்ளது. மேலும் இது சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய கிணறு. சுவஸ்திக் வடிவில் அமைந்துள்ளதால் இதில் ஒரு துறையில் நீராடுபவர்கள் அடுத்த துறையில் இருப்போரைக் காண முடியாத சிறப்பான அமைப்பாக உள்ளது. மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/சுவஸ்திக்_கிணறு

அறிய வேண்டிய மனிதர் - தியான் சந்த்

தியான் சந்த் (Dhyan Chand) ஆகஸ்டு 29, 1905 ஆம் ஆண்டு அலகாபாத்தில் பிறந்தார். எக்காலத்தும் சிறந்த ஹாக்கி விளையாட்டுக்காரராக கருதப்படும் ஓர் இந்திய வீரர். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். பெர்லின் ஒலிம்பிக்சில் அணித்தலைவராகவும் இருந்தார். இவர் டிசம்பர் 3, 1979 ஆம் ஆண்டு காலமானார்.

இவரின் நினைவாக தியான் சந்த் விருது வழங்கப்பட்டுவருகிறது. இது இந்திய அரசால் இந்திய விளையாட்டுக்களில் வாழ்நாள் சாதனை புரிந்தோர், தனிநபர் மற்றும் குழுவிளையாட்டுகளில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிகுந்த விருதாகும். இது மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

இவ்விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோர் மத்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுவர்.இவ்விருது ஒரு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், சிலைவடிவம், அலங்கார உடை மற்றும் பணமுடிப்பைக் கொண்டுள்ளது. பணமுடிப்பில் ஐந்து லட்சம் வழங்கப்படும். இவரைப்பற்றி மேலும் அறிய https://ta.wikipedia.org/wiki/தியான்_சந்த்