தேசிய திறந்தநிலைப் பள்ளியின் சிறப்பம்சங்கள்!ஆலோசனை

நூறு விழுக்காடு அனைவருக்கும் அடிப்படைக் கல்வியறிவு, மாணவர்களின் விழைவுக்கேற்ற கல்வி, இயன்றவரை அனைவருக்கும் இலவசக் கல்வி, பட்டிதொட்டிகளெல்லாம் அரசுப் பள்ளிகள் என்ற இலக்கை நோக்கிக் கல்விக் கொள்கைகளை வடிவமைத்து, மாநில மற்றும் மத்திய அரசுகள் செயல்படுகின்றன.

சர்வ சிக்‌ஷ அபியான்(அனைவருக்கும் கல்வி) போன்ற அமைப்புகளை உருவாக்கினாலும்கூட உடல்நலக் குறைவு, குடும்பச் சூழல், பொருளாதாரப் பின்னடைவு போன்ற தவிர்க்க இயலாத காரணங்களால், மாணவர்கள் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடுவதைத் தடுப்பதிலும் பின்னடைவு தமிழகத்தில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

தமிழக மாணவர்களுக்கு மேல்நிலைப் படிப்பில் குறிப்பிட்ட குழுவில் குறிப்பிட்ட பள்ளிகளில் இடம் கிடைக்காத நிலையும், IIT, NEET, CLAT, CAT, ICAR போன்ற அகில இந்தியப் போட்டித் தேர்வுகளை நோக்கிப் படிக்கின்ற மாணவர்கள் தனியார் பள்ளிகளின் எந்திரகதியான காரண காரியமில்லா தேவையற்ற கட்டுப்பாடுகளில் சிக்கி நேரமின்மையால் பரிதவிக்கும் நிலையும் களையப்படவேண்டும்.

வணிக ரீதியான தனியார் பள்ளிகளுக்கிடையேயான போட்டியின் காரணமாகச் சிறிய அளவில் மதிப்பெண் குறைவு ஏற்பட்டாலும் பள்ளியிலிருந்து வெளியே தள்ளப்படுகின்ற மாணவர்கள் நிலை, ஆழமாகப் பாடங்களைக் கோட்பாடுகளை உண்டாக்கி கற்றுத் தரும் நிலை மாறி, வெறும் மதிப்பெண்ணிற்கான முரட்டுத்தனமான பயிற்சி என்ற பள்ளிகளின் நிலையினால் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் பள்ளி சென்று படிக்க முடியாத குடும்பச் சூழல், பள்ளி சென்று படிக்க ஏற்ற உடல்நிலை இல்லாத நிலை, வேலை பார்த்துக்கொண்டே படிக்க வேண்டிய நிலை என்ற பல காரணங்கள் மாணவர்கள் ‘பள்ளிப் படிப்பிற்கு இணையான வீட்டிலிருந்தே படிப்பதற்கேற்ற வழிகள் உள்ளனவா?’ என்ற தேடலில் இறங்கும் நிைலமையும் உள்ளது.

தமிழகத்தில் தனித் தேர்வுக் கல்வி!

பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தோல்வியடைந்தால், அவர்கள் உடனடித் தேர்வு எழுதி, அந்தக் கல்வி ஆண்டிலேயே கல்லூரிகளில் சேரலாம். இதிலும் தோல்வியடைந்தால் அடுத்துவரும் தேர்வில் எழுதி தேர்ச்சி பெறலாம். இவை தவிர, தனித் தேர்வர்களாகப் பள்ளிப் படிப்பை முடிக்க என்ன வாய்ப்புகள்?

*பள்ளியே செல்லாமல் எழுத படிக்க மட்டும் தெரிந்த அல்லது கல்வி கற்க முனைப்பு காட்டும் மாணவர்கள் 14 வயது முடிந்ததற்கான பிறப்புச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை போன்ற ஆவணங்களைச் சமர்ப்பித்து விரும்பிய ஊடகம் (Medias) வழியாக நேரடியாக ‘அரசின் எட்டாம் வகுப்புத் தேர்வை எழுதலாம்.

*தனித் தேர்வர்களாகவோ, பள்ளி சென்றோ எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஒன்பதாம் வகுப்பில் தோல்வியுற்றவர்கள், எட்டாம் வகுப்பிற்கு மேல் பள்ளி செல்ல இயலாதவர்கள் அல்லது பள்ளி செல்ல விரும்பாதவர்கள், 15 வயது முடிந்திருப்பின், விரும்பிய ஊடகம் வழியாக நேரடியாகப் பத்தாம் வகுப்பு தனித்தேர்வை எழுதலாம்.

*இதே நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 16 வயது நிறைவுற்றபின், விரும்பிய ஊடகம் (medias) வழியாகப் பத்தாம் வகுப்பு முடித்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நேரடியாகப் பன்னிரண்டாம் வகுப்பு தனித் தேர்வை எழுதலாம்.

மாணவர்களுக்கு மொழிகளில் தமிழ், சிறப்புத் தமிழ், ஆங்கிலம், சிறப்பு ஆங்கிலம் உள்ளடக்கிய பல மொழிகளும், பாடங்களில் அறிவியல் அல்லாத வணிகக் கணிதம், பொருளியல், வணிகவியல், உளவியல், வரலாறு, புவியியல், ஹோம் சயின்ஸ், கணக்கியல், புள்ளியியல் போன்ற பாடங்களை உள்ளடக்கிய குழுக்கள் தரப்பட்டுள்ளன.

VIII, X, XII தனித் தேர்வர்களுக்கு பள்ளி சென்று படிப்பதால் கிடைக்கும் சான்றிதழ்களுக்கு இணையான சான்றிதழ் அரசின் தேர்வு இயக்கத்தால் வழங்கப்படும். இச்சான்றிதழ்களைக்கொண்டு உயர்படிப்பைத் தொடரலாம்.இப்படித் தனித் தேர்வர்களாகப் படிக்கின்ற மாணவர்கள் இந்தத் தேர்வுகளுக்கும் தன்முனைப்பாகப் படிக்க வேண்டும் என்பதையும் ஒரு நல்ல தனிப்பயிற்சி நிறுவனம் அல்லது ஒரு வல்லுநர் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் வழியாகப் பள்ளிப்படிப்பைத் தனியாக எவ்வாறு தொடர்வது?

தமிழ்நாட்டில் தனித் தேர்வர்கள் செய்முறையுள்ள அறிவியல் பாடங்களைப் படிக்க இயலாதநிலை உள்ளது. உதாரணமாக, இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்களைச் சொல்லலாம். இந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு NIOS - National Institute of Open Schooling - தேசிய திறந்தநிலைப் பள்ளி - ஒரு சிறந்த வழியாக உள்ளது.

NIOS என்றால் என்ன?

NIOS என்பது பள்ளி செல்லாமல், அதற்கு இணையான படிப்பை விரும்பிய பாடங்களைத் தேர்வு செய்து படிக்க உதவும் முறையாகும். 1989 ஆம் ஆண்டு முதல் செயலாற்றிவரும் இந்த அமைப்பு 1986 ஆம் ஆண்டின் கல்விக் கொள்கையின்படி, மத்திய அரசின் மனிதவளத் துறையால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும்.

பள்ளிக்கூடம் சென்று படிக்க இயலாத அல்லது விரும்பாத நிலையில் திறந்த நிலை (open schooling  home schooling) மற்றும் தொலைதூரக் கல்வி முறையில் (Open Distance Learning - ODL) மாணவர்கள் பயில NIOS வழி செய்கிறது.

பொருளாதார பின்னடைவு, உடல்நலக் குறைவு, பள்ளி சென்று நேரம் வீணாவதைத் தடுக்க, நேர மேலாண்மையை விரும்புதல், பணியாற்றிக்கொண்டே படித்தல், விரும்பிய அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்கள் பள்ளிகளில் இடம் கிடைக்காத நிலையில் அந்தப் பாடங்களைப் படித்தல், முன்னர் வேறு பாடத்திட்டத்தில் படித்தவர்கள் பள்ளிப்படிப்பைத் தொடர்தல் போன்ற தேவைகள் உள்ளவர்களுக்கு NIOS பெரிதும் பயன்படுகிறது.

NIOS - சிறப்புக் கூறுகள்

*இம்முறையில் என்ன படிக்கலாம், எப்போது படிக்கலாம் என்பனவற்றை மாணவர்களே தேர்வு செய்யும் சுதந்திரம் உள்ளது. ஆண்டின் எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும், எந்த முறையில் வேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம்.

*NIOS -யில் படிக்க எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இவை தவிர, கல்வி மையங்கள் (study centres, facilitation centres, Regional centre) நாடெங்கும் உள்ளன.

*இறுதித் தேர்வு ஆண்டிற்கு இருமுறை நடைபெறும். ஐந்து ஆண்டுகள் வரை 9 தேர்வு வாய்ப்புகள் தரப்படுகின்றன.

*முன்னர் படித்து முடித்து ஏதேனும் பாடங்களில் தோல்வியுற்றவர்கள், NIOS வழியாகப் படிக்க விண்ணப்பித்தல், தேர்வு பெற்ற பாடங்களில் ஏதேனும் இரண்டை NIOS கணக்கில் எடுத்துக்கொண்டு மீதம் பாடங்களை எழுத அனுமதிக்கிறது. இதற்கு, WIOB நேஷனல் (National) இண்டர் நேஷனல் (Inter National), மாநில (State), மாநில திறந்தநிலைப் பள்ளிகள் (State Open Schools) இவற்றின் பாடத்திட்டங்களில் தேர்ச்சி பெற்ற ஏதேனும் இரண்டு பாடங்களை எடுத்துக்கொள்கிறது.

NIOS வழியாக படித்து பெறுகின்ற சான்றிதழ் இந்தியாவிலும் இயங்கிவரும் மற்ற அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்கள் வழியே பெறும் சான்றிதழ்களுக்கு இணையானது என்பதும், இச்சான்றிதழ்களைக் கொண்டு தொழிற்படிப்பு உள்ளிட்ட அனைத்து மேற்படிப்புகளையும் தொடர இயலும், நுழைவுத்தேர்வுகளை எழுத இயலும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய நிலையில் உள்ள திறந்தவெளிக் கல்வி அமைப்புகளில் மிகப்பெரியது NIOS. இதுவரை 2.98 மில்லியன் மாணவர்கள் படிப்பை முடித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளார்கள். ஒவ்வோர் ஆண்டும் 56,700 மாணவர்கள் இம்முறையில் சேர்ந்து கல்வி பயில்கிறார்கள் என்பது சிறப்பம்சங்கள்.திறந்தநிலைப்பள்ளியில் வழங்கப்படும் படிப்புகள், விண்ணப்பிக்கும் முறை, வயதுத்தகுதி, கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் அடுத்த இதழில் பார்ப்போம்.

- தொடரும்