கம்பைண்டு டிபன்ஸ் சர்வீஸ் தேர்வு!



உத்வேகத் தொடர் 37

வேலை வேண்டுமா?


படித்துவிட்டு அரசுப் பணிகளில் சேர்வதைக் கனவாக கொண்டவர்களுக்கு வழிகாட்டும் விதமான ‘வேலை வேண்டுமா?’ என்னும் இந்த சிறப்புத் தொடரில் - இதுவரை, “யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” (Union Public Service Commission) நடத்தும் முக்கியத் தேர்வுகளான - சிவில் சர்வீசஸ் தேர்வு (Civil Services Examination), எஞ்சினியரிங் சர்வீசஸ் தேர்வு (Engineering Services Examination), இந்தியன் எக்கனாமிக் சர்வீஸ் / இந்தியன் ஸ்டேட்டிஸ்டிகல் சர்வீஸ் எக்ஸாமினேஷன் (Indian Economic Service / Indian Statistical Service Examination), இந்தியன் ஃபாரஸ்ட் சர்வீஸ் எக்ஸாமினேஷன் (Indian Forest Service Examination), கம்பைண்டு ஜியோ சயின்டிஸ்ட் அண்ட் ஜியாலஜிஸ்ட் எக்ஸாமினேஷன் (Combined Geo Scientific and Geologist Examination), நேஷனல் டிபன்ஸ் அகாடமி அண்ட் நேவல் அகாடமி எக்ஸாமினேஷன் (National Defence Academy and Naval Academy Examination) - ஆகிய தேர்வுகளைப் பற்றி சற்று விரிவாகப் பார்த்தோம்.

இனி - யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நடத்தும் ‘கம்பைண்டு டிபன்ஸ் சர்வீசஸ் தேர்வு’ (Combined Defence Services Examination) பற்றி விரிவாகப் பார்ப்போம்.‘கம்பைண்டு டிபன்ஸ் சர்வீசஸ் தேர்வு’ என்பது பாதுகாப்புப் படைகளான - ராணுவம், கப்பற்படை, விமானப்படை ஆகிய பாதுகாப்பு அமைப்புகளில் பணிபுரிய தகுதியானவர்களையும், திறமையானவர்களையும் கண்டறிந்து தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்வாகும். இந்தத் தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்புப் படை சார்ந்த புகழ்மிக்க பயிற்சி நிறுவனங்களில் சிறந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு அதன்பின்னர், பாதுகாப்புப் படைகளில் பணிபுரிய பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தத் தேர்வு ஆண்டுதோறும் இந்திய அளவில் நடத்தப்படுகிறது. கம்பைண்டு டிபன்ஸ் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு -

1. இந்தியன் மிலிட்டரி அகாடமி, டேராடூன் (Indian Military Academy, Dehradun)

2. இந்தியன் நேவல் அகாடமி, எழிமலா (Indian Naval Academy, Ezhimala)

3. ஏர்ஃபோர்ஸ் அகாடமி, ஐதராபாத் (Airforce Academy, Hyderabad)

4.ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமி, சென்னை (Officers Training Academy, Chennai) - ஆகிய பயிற்சி மையங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
 கல்வித்தகுதி மற்றும் வயது விவரம்

1. இந்தியன் மிலிட்டரி அகாடமி, டேராடூன் (Indian Military Academy, Dehradun) இந்தியன் மிலிட்டரி அகாடமில் (Indian Military Academy) சேர - பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். இந்த அகாடமியில் சேர வயது 18 முதல் 23 வயதுவரை இருக்க வேண்டியது அவசியமாகும்.

2. இந்தியன் நேவல் அகாடமி, எழிமலா (Indian Naval Academy, Ezhimala) இந்தியன் நேவல் அகாடமியில் சேர பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் பட்டம் (Degree in Engineering) பெற்றிருக்க வேண்டும். இந்த அகாடமியில் சேர வயது 18 முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும்.

3. ஏர்ஃபோர்ஸ் அகாடமி, ஐதராபாத் (Airforce Academy, Hyderabad)

ஏர்ஃபோர்ஸ் அகாடமியில் சேர - பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் (Degree) தேவை. +2 தேர்வில் இயற்பியல் (Physics) மற்றும் கணிதம் (Mathematics) பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படித்து வெற்றி பெற்றிருக்க வேண்டியது அவசிய மாகும். பொறியியல் பட்டம் (Degree in Engineering) பெற்றவர்களும் இந்தத் தேர்வை எழுதலாம். இந்த அகாடமியில் சேர விரும்புபவர்கள் 20 வயது முதல் 24 வயதுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

4. ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமி, சென்னை (ஆண்களுக்கு மட்டும்) (Officers Training Academy, Chennai) [For Men]
ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமியில் ஆண்களுக்கான பயிற்சியில் சேர - பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். இந்த அகாடமியில் சேர 20 வயதுமுதல் 24 வயதுக்குள் ஒருவர் விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இந்தத் தேர்வு எழுதத் தகுதியானவர்கள்.

5. ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமி, சென்னை (பெண்களுக்கு மட்டும்) (Officers Training Academy, Chennai) [For Women]
ஆபீசர்ஸ் டிரைனிங் அகாடமியில் பெண்களுக்கான பயிற்சியில் சேர - பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும். இந்த அகாடமியில் சேர 20 வயதுமுதல் 24 வயதுக்குள் ஒருவர் விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும். திருமணமாகாத பெண்கள் மட்டுமே இந்தத் தேர்வு எழுதத் தகுதியானவர்கள்.

தேர்வுக் கட்டணம்

இந்தத் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் ரூபாய் 200 ஆகும். இருப்பினும், தாழ்த்தப் பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் இந்தக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

தேர்வு மையங்கள்

இந்தத் தேர்வு எழுத இந்தியாவில் பல தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் உள்ளன. இருப்பினும், திருவனந்தபுரம், பெங்களூரு, கொச்சி, ஐதராபாத், திருப்பதி, விசாகப்பட்டினம் ஆகிய தமிழகத்திற்கு அருகிலுள்ள நகரங்களிலும் இந்தத் தேர்வு எழுத தேர்வு மையங்கள் உள்ளன.

தேர்வுத் திட்டம்

கம்பைண்டு டிபன்ஸ் சர்வீசஸ் தேர்வு 2 பகுதிகளைக் கொண்டது. அவை -

I. எழுத்துத் தேர்வு (Written Examination)
II. புத்திக்கூர்மை மற்றும் ஆளுமைத் தேர்வு (Intelligence and Personality Test) - ஆகும். .

I. எழுத்துத் தேர்வு (Written Examination)

இந்தியன் மிலிட்டரி அகாடமி (Indian Military Academy), இந்தியன் நேவல் அகாடமி (Indian Naval Academy), ஏர்ஃபோர்ஸ் அகாடமி (Airforce Academy) ஆகிய பயிற்சி மையங்களில் சேருவதற்கான எழுத்துத் தேர்வில் இடம்பெறும் பாடங்கள்.

பாடங்கள் குறித்த மேலும் கூடுதல் தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.

- தொடரும்

நெல்லை கவிநேசன்