வெற்றி தோல்விகளே வாழ்க்கைக்கான பாடம்!உளவியல் தொடர் 28

உடல்... மனம்... ஈகோ!

தைரியம் என்பது ஒரு பழக்கம். அதை நீங்கள் தைரியமாக
இருக்கும்போதுதான் கற்றுக் கொள்வீர்கள்
- மரி டேலி
  -  ஈகோ மொழி

வாழ்க்கை தொடர்ந்து கற்றுக்கொடுத்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் கற்றுத்தருதல் என்ற கருத்தை வலியுறுத்தும்போது கூட ‘மீன் சாப்பிடக் கற்றுத்தருவதைவிட, மீன் பிடிக்கக் கற்றுத்தரவேண்டும்’ என்று சொன்னார்கள்.  ஈகோவை நிர்வாக ரீதியாக அணுகும்போது கருத்துத் திணிப்பைத் தவறு என்று மொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. காரணம், சில நேரங்களில் கருத்துத் திணிப்புதான் பெரிய அளவில் பயனளிக்கும்.

உரிமை கொண்ட சிலரின் நடவடிக்கைகள் தவறாகப் போகும்போது அதைப் பார்த்து ‘நாம் ஏதாவது சொன்னா கருத்துத் திணிப்பு ஆகிவிடும்’ என்று பேசாமல் இருந்துவிட முடியாது. உதாரணமாக, ஒரு குழந்தை மின் சாதனத்தோடு விளையாடும்போது, கூர்மையான ஆயுதங்களைக் கையாளும்போது.... அது அதன் உரிமை என்று பார்த்துக்கொண்டு இருக்க முடியாது.

அங்கு உரிமையாக நுழைந்து ‘ஷாக் அடிச்சிடும், காயமாயிடும் இப்படித்தான் அன்னிக்கு என்னாச்சுன்னா…?’ என்று கருத்தை தயங்காமல் வலியுறுத்த வேண்டும். அது கருத்து வலியுறுத்துதல் மட்டுமல்ல கடமையும் கூட.குழந்தை பிறந்து நடக்கத் தொடங்கும் பருவத்தில் தடுமாறி கீழே விழுவதைப் பார்த்திருப்போம். அப்போது அதை தூக்காதே என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

தூக்கிவிடப்படாத குழந்தைதான் முயற்சிசெய்து தானாக எழும் - தூக்கிவிடப்பட்ட குழந்தை அழும். விழும் ஒவ்வொருமுறையும் தானாக எழ முன்வராமல் தூக்கிவிட யாராவது வருகிறார்களா என்று எதிர்பார்த்திருக்கும். இதே போலத்தான் கருத்துத் திணிப்பும். எந்த கீறலும் ஏற்படக்கூடாது என்ற கருத்தோடு பிள்ளைகளை வளர்க்க நினைப்பதும் தவறுதான். காரணம், அது குழந்தைகளை அனுபவசாலிகளாக மாற்றுவதைத்
தடுத்துவிடும்.

குழந்தைகள் மீது கருத்துத் திணிப்பை வலியுறுத்தும்போதுதான் சிக்கல்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. குழந்தைகள் கருத்துத் திணிப்பை ஒரு கட்டாயத்தின் பேரில் (வேறு வழியின்றி) ஏற்றுக்கொள்வார்கள். அதன் மூலமாக வெற்றியும் கிடைக்கும். ஆனால், அனுபவத்தை எதிர்கொள்வதால் கிடைக்கும் சந்தோஷம்/மகழ்ச்சி தடைப்பட்டுப்போய்விடும். இனிப்பு/ஐஸ்கிரீம்கள் சாப்பிட்டால் இருமல் வரும், பல் சொத்தை ஆகி
விடும் என்று சொல்லித் தடுப்பது நல்லதுதான்.

ஆனால், அதைச் சாப்பிட அனுமதி மறுப்பதால் உண்டாகும் ஏக்கமும், ஏமாற்றமும் ஒரு வடுவாக மனதில் தங்கிவிடும்.  அதுவே எப்போதாவது ஒருமுறை ஒன்றுக்கு மூன்றாக ரசித்துச் சுவைக்க அனுமதித்துப் பாருங்கள், ‘அன்னிக்கு நான் தொடர்ந்து 3 ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்’ என்று சந்தோஷமாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். சின்னச் சின்ன சந்தோஷங்கள்தான் அவர்கள் மனதில் வெளிச்சங்களாக இருந்து கொண்டே இருக்கும்.

குழந்தைகளிடம் கருத்துகளை வலியுறுத்தும்போது அவர்களின் ‘தனித்தன்மை’ பாதிக்கப்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கருத்துகளை குழந்தைகள் மீது திணித்துக்கொண்டே இருந்தால், அவர்கள் நம்பிக்கையும், உறுதியும் இல்லாதவர்களாக மாறிப்போவார்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவரளவில் போராட்டமானதுதான்.

அந்த வகையில் சின்னச் சின்ன வளர்ச்சிப் பாடங்கள்தான் குழந்தைகளுக்குள் அனுபவங்களாக மாறுகிறது. சைக்கிள் ஓட்டப் பழகுகையில், கீறல் ஏற்பட்டால் கோபப்படாமல் (நான் அப்பவே சொன்னேன்… கேட்டாத்தானே?) ‘சரியா பேலன்ஸ் பண்ணாம, பிரேக் போடாததால வண்டி சரிஞ்சிடுச்சி’ என்று பக்குவமாக ஆறுதல் வார்த்தைகளோடு காயத்திற்கு மருந்து போட்டுப்பாருங்கள்… காயம் ஆறுவதற்குள் உங்கள் கருத்து குழந்தைகள்
மனதில் ஏறிவிடும்.

வேறு சில பெற்றோர்கள் குழுந்தைகளுக்கு எந்தவிதமான கருத்தையும் வலியுறுத்தமாட்டார்கள். ஆனால், குழந்தைகள் கேட்டதும் கேட்டபடி பணத்தைத் தந்துவிடுவார்கள். கருத்துத் திணிப்பு மாத்திரமல்ல அபரிமிதமான பணத் திணிப்பும் தவறுதான்.குழந்தைகளுக்கு யோசிக்க, சிந்திக்க, சாதிக்க சந்தர்ப்பங்களையும், வழிவகைகளையும் ஏற்படுத்தித்தரவேண்டும். அந்த வழிவகைதான் சரியான கருத்துத் திணிப்பாக இருக்க முடியும். வெற்றிகளும், தோல்விகளும் கலந்த அனுபவங்கள்தான் வாழ்க்கைக்கான பாடத்தை கற்றுத் தருகின்றன.

எனவே, ஒரு பாதுகாப்பு எல்லைக்குள், அவர்கள் சோதனைகளை எதிர்கொண்டு அதிலிருந்து மீளும் சந்தர்பத்தை ஏந்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஒருவனது செயல்பாடு அவன் வாழ்க்கைக்கு உகந்ததில்லை என்று உணரும்போதோ, ஒரு தடுமாற்றமான மனநிலையில் இருக்கும்போதோ கருத்துத் திணிப்பைத் தாராளமாக வலியுறுத்தலாம். பொதுவாகக் கருத்துத் திணிப்பை இக்கட்டான நேரங்களில் வலியுறுத்தலாமே தவிர, ஒவ்வொரு கட்டத்திலும் வலியுறுத்திக்கொண்டே இருக்கக்கூடாது.

கருத்து மோதல்களைக் கையாளும்போது மேற்கொள்ள வேண்டிய நான்காவது சூட்சுமம்… ‘ஒரு மனிதனுடன் கருத்து மோதல் ஏற்படும்போது, அவனைத் தாக்கும் மனதுடனோ, தற்காத்துக்கொள்ளும் மனதுடனோ அணுகாமல் திறந்த மனதுடன் அணுக வேண்டும்’ஈகோ மிஸ் மேனேஜ்மென்ட் குறித்தான உதாரணக் கதையில் (கடந்த அத்தியாயத்தில்) அப்பா ‘திறந்த மனதுடன்’ மகனின் நிலையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்க வேண்டும்.  அவர் மகன் தரப்பு நியாயத்தை கேட்கும்போது, அதைத் தாக்கும் மனதுடனேயே கேட்டார்.

இதனால் அவர் மனம் மூடிக்கொண்டது. மகன் சொன்னது அவர் மனதிற்குள் போகவே இல்லை. திறந்த மனதுடன் கேட்டிருந்தாரானால், டென்ஷனின்றி கோபப்படாமல் இருந்திருப்பார். நிதானம் கொண்டவராக இருந்திருப்பார். மகன் தரப்பு நியாயம் அவரைக் கூர்மையாக்கியிருக்கும். கருத்து வேறுபாடு மோதலாக மாறும் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்திருக்கும்.

இது உன் வாழ்க்கை அதை நீ தீர்மானி என்று இறுதி முடிவை மகனிடமே விட்டிருப்பார். மகன் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முடிவு தன் வாழ்க்கையைவிட பெரியது என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். அப்போது மகன் யோசித்து, IPS ஆகும் முடிவைத் தேர்ந்தெடுத்திருந்தால் தன் முடிவை மகன் ஏற்றுக்கொண்டான் என்ற மகிழ்ச்சி கிடைத்திருக்கும்.

அதுவே MBA தான் படிப்பேன் என்று மகன் முடிவெடுத்திருந்தால் ‘இது அவனது முடிவு’ என்று யதார்த்தமாக எடுத்துக்கொண்டிருப்பார். எந்த இடத்திலும் வலி ஏற்பட்டிருக்காது. குற்ற உணர்வு தோன்றியிருக்காது. இந்த சூட்சுமம்தான் சூழ்நிலையை வெற்றி/தோல்வி மனநிலையிலிருந்து மாற்றி, மகனின் வாழ்க்கைக்கு உதவுகிறோம் என்ற யதார்த்த நிலைக்கு நிதானமாக மாற்றுகிறது.பக்குவம் என்பது ஒரு குணம். அதை ஒவ்வொருவருக்கும் பரிசளிப்பது அவரவர் ஈகோதான்.

குரு சிஷ்யன் கதை

உணவின் ருசியை மறக்கச்செய்யும் கற்றலின் ருசி!

ஒருநாள் ஆசிரமத்திற்கு இளைஞன் ஒருவன் வந்தான். குருவிடம்,“குருவே நான் படிக்காதவன். என் மனைவி நன்றாகப் படித்தவள், அவளுக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் படிப்பறிவு இல்லாதவனென்பதை குத்திக்காட்டி கேவலமாகப் பேசுகிறாள். இதனால் வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது. நான் நன்றாக படித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவேனென்று சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். அதனால் எனக்கு படிப்பு சொல்லிக் கொடுங்கள்” என்றான். குருவும் அவனது உறுதியைக் கண்டு சம்மதித்தார்.

சில மாதங்கள் கடந்தன. அவனும் பாடத்தை ஆர்வத்தோடு கற்றான்.ஒருநாள் சிஷ்யனை அழைத்து, “நாளை முதல் அந்த இளைஞனுக்குப் பரிமாறும் உணவில் சிறிது வேப்பெண்ணெயைக் கலந்து பரிமாறு. அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால் உடனே வந்து என்னிடம் சொல்” என்றார் குரு.சிஷ்யனுக்கு ஒன்றும்  புரியவில்லை. இருந்தாலும் குரு சொன்னபடியே செய்தான். இளைஞனும் முகம் மாறாமல்  வேப்பெண்ணெயைக் கலந்து பரிமாறிய சாப்பாட்டையே சாப்பிட்டு வந்தான்.

ஒருநாள் சிஷ்யனிடம், “உங்களுடைய சாப்பாடு எப்போதும் ருசியாக  இருக்கும். ஆனால், இன்று ஏனோ வேப்பெண்ணெய் கலந்த வாசனை அடிக்கிறது. சாப்பாடும் கசக்கிறது” என்றான். சிஷ்யன் குருவிடம், அவன் சொன்னதைச் சொன்னான்.

உடனே குரு அந்த இளைஞனைக் கூப்பிட்டு “தம்பி, நீ பாடங்கள் அனைத்தையும்  கற்றுக்கொண்டாய். இனி, நீ உன் வீட்டுக்குப் போகலாம். உனக்கு என் நல்வாழ்த்துகள்” என்றார்.இளைஞன் மகிழ்ச்சியாகப் புறப்பட்டான்.சிஷ்யன் குருவிடம், “குருவே, சாப்பாட்டில் வேப்பெண்ணெய் கலந்ததற்கும் அவன் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் விளங்கவில்லை” என்றான்.

குரு சொன்னார், “நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் என்பது ஆன்றோர் வாக்கு. ஒருவனுக்கு கல்வியில் நாட்டம் உள்ளவரை வேறு எதிலும் கவனம் இருக்காது. சொல்லப்போனால் சுவைகூட தெரியாது.

இந்த இளைஞனுக்கும் வாழ்க்கையின் மீதும், கல்வியின் மீதும் முழுக்கவனம் இருந்தவரை அவனுக்கு உணவின் ருசி தெரியவில்லை. வாழ்க்கையும், கல்வியும் புரிந்ததும் ருசி தெரிந்துவிட்டது. அதனால்தான் அவனை ஊருக்கு அனுப்பிவைத்தேன். அவன் இனி பிழைத்துக்கொள்வான். நீயும் உன் கவனத்தை எப்போதும் கற்கும் மனநிலையில் வைத்திரு, கற்றதும் ருசி அறிவாய்” என்றார்.

  - தொடரும்

ஸ்ரீநிவாஸ் பிரபு