இளைஞர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!வாசகர் கடிதம்

நுழைவுத்தேர்வு என்ற பெயரில் தமிழ்நாட்டு மாணவியைக் காவு வாங்கிய நீட் தேர்வு குறித்த கட்டுரையில் கல்வியாளர்களின் ஆவேசமான நியாயமான கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நீட் தேர்வால் எந்த அளவுக்கு மாணவர்களும், மாணவர்களின் பெற்றோர்களும் கண்ட கனவு சிதைக்கப்படுகிறது என்பதை பட்டவர்த்தனமாகப் படம்பிடித்துக் காட்டியது அருமை.
  ஆர்.சரவணன், ஸ்ரீரங்கம்.
 
உலகின் வெவ்வேறு பகுதிகளில் இளைஞர்களைத் தற்கொலைக்கு தூண்டிய ‘ப்ளுவேல் ஆன்லைன் கேம்’இந்தியாவிலும், தமிழகத்திலும் காலூன்றி உயிர்பலி வாங்கியது கொடுமை. டிஜிட்டல் உலகில் கேமை தடை செய்வது சாத்தியமில்லை எனவும், அதே சமயம் பிள்ளைகளை தற்காத்துக்கொள்வதற்கான வழிகளைப் பெற்றோர்களுக்கு கூறிய விதம் அற்புதம்.
  ஏ.சிவபாரதி, புதுக்கோட்டை.
 
மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியக் கல்விச் சூழல் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் பளிச்செனக் கூறியிருக்கிறது உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்கள் குறித்த கட்டுரை. நம் கல்வித்திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் தேவை என்பதை நம் ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தியது.
    எம்.செல்வகுமார், ஸ்ரீவில்லிபுத்தூர்.
 
வேலையில்லை என்று வீணாக சுற்றித்திரியாமல் சுயதொழில் செய்யலாமே என்று ஆசைப்படும் இளைஞர்களுக்கு என்ன தொழில் செய்யலாம்? கடன் பெறுவது எப்படி? அரசு சலுகைகள் மற்றும் மானியம் பெறுவது எப்படி? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்தது அழகுக் கலை குறித்த திட்ட அறிக்கையுடனான விவரமான கட்டுரை.தொழிலுக்குத் தேவையான முதலீடு, இயந்திரங்கள், மூலப்பொருட்கள், பணியாளர் சம்பளம், லாபம் என எளிமையான நடையில் தெளிவாகப் பட்டியலிட்டிருந்தது இளைஞர்களுக்கு சூப்பர் டிப்ஸ்!
கே.மகாதேவன், திருச்சி.

பேரிடர் மற்றும் மறுசீரமைப்புக்கான முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறித்த கட்டுரையில் தேவையான கல்வித்தகுதி, சேர்க்கை முறை, விண்ணப்பிக்கும் முறை, பயிற்சிக் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் தெளிவாக வழங்கப்பட்டிருந்தன. உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலாக இருந்தது.
  சி.கார்த்திகேயன், செங்கல்பட்டு.