செய்தித் தொகுப்புஉதவித்தொகையுடன் இங்கிலாந்தில் படிக்கலாம்!

இங்கிலாந்தில் கல்வி பயின்றுவிட்டு, தங்கள் சொந்த நாட்டில் பணியாற்றுவதற்கான எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் வகையில் ‘செவனிங்’என்ற கல்வித் திட்டத்தை இங்கிலாந்து அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி 2 வகையான உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. முதலாவது திட்டத்தின்படி, முழு உதவித்தொகையுடன் இங்கிலாந்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் பட்டப்படிப்புகளை (ஒரு ஆண்டு) படிக்கலாம். அவ்வாறு விண்ணபிக்க இந்திய குடிமகனாக இருக்கவேண்டும்.

இங்கிலாந்தில் படிப்பை நிறைவுசெய்துவிட்டு, 2 ஆண்டுகளில் சொந்த நாட்டுக்குத் திரும்புபவராக இருக்கவேண்டும். அதோடு, இளநிலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்திருப்பதோடு, 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவது திட்டத்தின் கீழ், ஏற்கெனவே ஏதாவது ஒரு பணியில் இருப்பவர்கள் அந்தத் துறையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள உதவும் 8 முதல் 12 வாரங்கள் வரையிலான குறுகிய காலப் படிப்பை பயிலலாம். இதில், அறிவியல், நிதி சேவைகள், இணைய பாதுகாப்பு, கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

செவனிங் திட்டத்தின்கீழ் வரும் கல்வியாண்டில் பயில 120 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எனவே, 2018-19-ம் கல்வி ஆண்டில் இங்கிலாந்தில் பயில விரும்புவோர் வரும் 7.11.2017ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.chevening.org/india என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.

குறுகியகால சான்றிதழ் படிப்புகள்!

கொல்கத்தாவில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., - இந்தியன் இஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் பயாலஜி கல்வி நிறுவனம், குறுகிய கால சான்றிதழ் படிப்பில், மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.வழங்கப்படும் படிப்புகள்: பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், கிளினிக்கல் பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பேதாலஜி டெக்னிக்ஸ், பயோ மெடிக்கல், பேதோ கெமிக்கல் அனாலிசிஸ், பயோ மெடிக்கல் எக்கியூப்மென்ட்ஸ் மற்றும் பிளான்ட் திசு கல்ச்சர்.

கல்வித்தகுதி: அறிவியல் துறை சார்ந்த பிரிவில், பி.எஸ்சி., பி.டெக்., பி.வி.எஸ்சி., எம்.பி.பி.எஸ்., பி.ஃபார்ம்., எம்.எஸ்சி., எம்.டெக்., எம்.வி.எஸ்சி.,
எம்.ஃபார்ம், எம்.டி., எம்.எஸ். போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.10.2017
மேலும் விவரங்களுக்கு: http://iicb.res.in/sdp/index.html என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

அறிவியல்துறை பிஎச்.டி., மாணவர் சேர்க்கை!

மொகாலியில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்.),
பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாடப் பிரிவுகள்: உயிரி அறிவியல், வேதி அறிவியல், கணித அறிவியல், உடற்கல்வி அறிவியல், பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், சமூக அறிவியல்.
கல்வித்தகுதி: அதிக மதிப்பெண்களுடன்,
எம்.பி.பி.எஸ்., அல்லது துறை சார்ந்த பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், கேட் / சி.எஸ்.ஐ.ஆர்., / யு.ஜி.சி.,-நெட் / ஜெஸ்ட் / என்.பி.எச்.எம்.,-ஜே.ஆர்.எஃப்.,  உள்ளிட்ட ஏதேனும் ஒரு
நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2017
மேலும் விவரங்களுக்கு: www.iisermohali.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு கட்டுரைப் போட்டி

மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பாக உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதில் ‘இதில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். 5 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ‘அண்ட வெளியில் அந்நிய உலகத்தைத் தேடி’எனும் தலைப்பிலும், 9, 10-ம் வகுப்பு மாணவர்கள் ‘பூமியில் வாழும் சூழலற்றுப் போனால்... அடுத்து என்ன?’ எனும் தலைப்பிலும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் ‘இன்னொரு கிரகத்துக்கு இன்பச் சுற்றுலா போவோமா?’ எனும் தலைப்பிலும் கட்டுரை எழுத வேண்டும்.

கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில், மாணவர்களின் சுய கையெழுத்தில் எழுதியிருப்பது அவசியம். இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல், ‘ஏ4’ தாளில் கட்டுரை இருப்பது அவசியம். ஒவ்வொரு தாளிலும் ஒரு பக்கம் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும். இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதனை அப்படியே சமர்ப்பித்தால் அவை நிராகரிக்கப்படும்.

கட்டுரைகள் அக்டோபர் 5-ம் தேதிக்குள், ‘The Administrative officer, IPRC/ISRO, Mahendragiri P.O, Tirunelveli - 627 133’என்ற முகவரி யில் சமர்பிக்கப்பட வேண்டும். தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளில் தனித்தனியாக முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04637-281210 / 283510, 9442140183, 9486692236 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.