ஆன்லைனில் படித்து ஐ.ஏ.எஸ். ஆகலாம்!



புது முயற்சி

வீடு தேடிவரும் வீடியோ பயிற்சி!


ஐ.ஏ.எஸ். என்று சொல்லக்கூடிய இந்திய ஆட்சிப் பணியில் சேர வேண்டும் என்பது பெரும்பாலான இளைஞர்களின் கனவு. அந்தக் கனவுப் பொருளாதார வசதி, பயிற்சி நிலையங்கள் அருகாமையில் இல்லாதது போன்ற காரணங்களால் நனவாகாமல் போய்விடுகிறது.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எதுவும் சாத்தியமாகும் நிலை வந்துகொண்டிருக்கிறது. அந்தவகையில், ஆன்லைனில் பார்த்து படித்து ஐ.ஏ.எஸ். ஆகலாம் என்றும் அந்தப் பயிற்சி கள் ஒவ்வொருவரின் வீடு தேடிவரும் என்றும் ஆன்லைன் ஐ.ஏ.எஸ். பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியுள்ள ‘ஆபீசர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடெமி’ நிறுவனர் இஸ்ரேல் ஜெபசிங் நம்மிடம் விளக்கிக் கூறினார்.

“எப்போதுமே இளைஞர்களிடையே சமூகப் பணியில் ஈடுபட்டு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதிலும் இந்தியக் குடிமைப் பணியில் (ஐ.ஏ.எஸ்) சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இந்தியக் குடிமைப் பணியில் சேர்வதற்குத் தேசிய பொதுத் தேர்வாணையம் ஆண்டிற்கு ஒரு முறை நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி தேர்ச்சி அடைய வேண்டும்.

இந்திய  அளவில் நடத்தப் படும் கடினமான தேர்வுகளில் இந்தத் தேர்வும் ஒன்று. எனினும் முறையாகப் பயிற்சி பெற்றால் இளைஞர்களின் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு இந்தத் தேர்வு ஒரு தடையாக அமைவதில்லை” என்றவர், இந்தத் தேர்வில் தன் அனுபவத்தையும் கூறினார்.

“2004ஆம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிக்கான தேர்வில் தேசிய அளவில் 59ஆம் இடம் பிடித்து மேற்கு வங்காளத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தேன். அதன் பின்னர் நம்மைப் போன்று பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைத் தமிழகத்திலிருந்து உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னையில் ஆபீசர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடெமி ஒன்றை நிறுவி நடத்திவருகிறேன்.

இந்தத் தேர்வை பொறுத்தவரை மூன்று பாகங்கள் உண்டு. முதலில் தகுதித் தேர்வு என்று சொல்லப்படும் preliminary exam. அதன் பின்னர் முதன்மைத் தேர்வு (Main Exam). இறுதியில் நேர்முகத் தேர்வு என மாணவர்கள் ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி யடைய வேண்டும்.

இறுதியாக நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி அடைபவர்களுக்கு இந்தியக் குடிமையியல் பணியில் பணிபுரிய வாய்ப்பு கிட்டும். ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான  மாணவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று படித்துவருகிறார்கள். பல மாணவர்கள், குறிப்பாகக் கிராமப்புற மாணவர்கள் இத்தேர்வுக்கு எப்படித் தயாராவது என்று தெரியாமல் எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லாமல் தங்கள் லட்சியத்தை  அடைய முடியாமல் தவிக்கின்றனர்.

இத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணிபுரிந்த அனுபவத்தோடு இனிவரும் சந்ததிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் பயிற்சி அளித்து அவர்களைச் சிறந்த அதிகாரிகளாக ஆக்க வேண்டும் என்ற லட்சியத்தோடுதான் இந்த ஆபீசர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடெமியை ஆரம்பித்தேன்.

2005 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று 46 ஆம் இடம்பிடித்த ரங்கராஜன்IAS, இந்திய ரயில்வே துறையில் முக்கிய பதவிகள் வகித்த சுப்பிரமணியன் IRAS ஆகியோர் ஆபீசர்ஸ் ஐ.ஏ.எஸ்.

அகாடெமியில் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள். இந்த அகாடெமியில் படித்த மாணவர்கள் இப்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக சேவை செய்துவருகிறார்கள்” என்று பெருமிதமிதத்துடன் சொன்
னவர், அதற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு குறித்தும் கூறினார்.

“ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று நிர்வாகத் திறமையோடு பல இளைஞர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். அதிலும் பெண்களின் பங்கேற்பு இப்போது அதிகரித்து வருகிறது. இதனை ஊக்கமாகக் கொண்டு பல கிராமப்புற மாணவ - மாணவிகள் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

பெரும்பாலான ஐ.ஏ. எஸ். அகாடெமிகள் சென்னை போன்ற  பெரு நகரங்களில்தான் உள்ளன. அதனால் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு, தங்குமிடம், பொருளாதார வசதி ஆகியவற்றை மனதில் வைத்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்ப மறுத்துவிடுகின்றனர்.

இதுபோன்ற மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராக ஒரு வாய்ப்பு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும், அதில் உண்டான முயற்சியாலும்தான் ஆன்லைன் பயிற்சி உதயமானது.

இதனையடுத்து யார் வேண்டுமானாலும் இணையதளம் மூலமாகப் பயிற்சி எடுத்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்துள்ளோம். அதுமட்டுமின்றி பணிக்குச் சென்றுகொண்டே  ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கும் இந்த ஆன்லைன்  பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எங்கள் அகாடெமியில் வழக்கமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் அப்படியே காணொளியாகப் பதிவேற்றம் செய்யப்பட்டு மாணவர்
களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால், அவர்கள் வகுப்பறைக்கு வராமலே வீட்டில் இருந்து வகுப்பறைக் காட்சிகளை நேரடியாகப் பார்த்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

இந்த இணையவழி வகுப்புகளுக்கு வழக்கமான பயிற்சி வகுப்புகளைக் காட்டிலும் கட்டணம் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த இணையவழி பயிற்சியில் சேருபவர்கள் பெரும்பாலும் பெண்களும், கிராமப்புற மாணவர்களுமாகவே இருப்பதால்
இந்தச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. www.officersiasacademy.com என்ற இணையதளத்தின் வழியாகத் தொடர்புகொண்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்’’ என்ற விவரங்களைக் கூறினார்.

மேலும் அவர், “ஐ.ஏ.எஸ்  தேர்வுக்குத் தகுதிச் சுற்று, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலையில் தயாராக வேண்டும். இந்தத்  தேர்வில் அன்றாட  நிகழ்வுகள் (Daily Current Affairs) குறித்து கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படுகின்றன. தேர்வுக்காக எதைப் படிக்க வேண்டும்; எதைப் படிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

ஏனெனில், முக்கிய செய்திகள், நிகழ்வுகளுடன் கூடுதலான அல்லது முக்கியமற்ற நிகழ்வுகளையும் சேர்த்துப் படிக்கும்போது அதனை நினைவில் வைத்துக்கொள்வது கடினமான ஒன்றாகும். இதனைக் கருத்தில் கொண்டு தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு www.steelframeofindia.org என்ற பிரத்தியேக மற்றும் இலவச இணையதளம் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் நீதிமன்றங்களில் வெளியாகும் முக்கிய தீர்ப்புகள், மத்திய மாநில அரசுகளின் சலுகைகள் மற்றும் திட்டங்கள் உட்பட அனைத்துத் துறை சார்ந்த நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

நன்கு தேர்வு செய்த தகவல்கள் மட்டுமே இதில் பதிவேற்றப்படுவதால் எதைப் படிக்க வேண்டும் என மாணவர்கள் குழப்பம் அடையத் தேவையில்லை. தகவல்கள் தொடர்பாகச் சந்தேகங்கள் இருந்தால் வினாப்பட்டியலில் பதிவிடலாம். எந்தத் துறை குறித்த சந்தேகமாக இருந்தாலும் அவ்வாறு பதிவிடப்படும் கேள்விகள் எந்தத் துறை என கண்டறியப்பட்டு அந்தந்தத் துறை சார்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பதில் அளிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

இனிவரும் காலங்கள் போட்டித் தேர்வுகள் நிறைந்தது. எனவே, நாம் அரசின் உயர்பதவி மற்றும் அரசுப் பணிகளுக்குச் செல்ல வேண்டுமானால் பயிற்சி என்பது அவசியமாகிறது. அந்தப் பயிற்சியை கோச்சிங் சென்டர்களுக்குச் சென்று பெற முடியாதவர்களுக்காகவே இந்தப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஆண்ட்ராய்டு, லேப்டாப் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவில் இருப்பதாலும் இந்தப் பயிற்சி அவர்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்” என்று முழு விவரங்களையும் விவரித்தார்.ஜெபசிங்.

- தோ.திருத்துவராஜ்