சேவைக்கு ஒரு சான்று!



வாசகர் கடிதம்

பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவர்களில் பலருக்கு நுழைவுத்தேர்வுகளும், கவுன்சிலிங்குகளும் புதிய அனுபவம் மட்டுமல்ல கண்ணைக் கட்டி காட்டில்விட்டது போல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு முனைவர் பேராசிரியர் ப.வே.நவநீதகிருஷ்ணன் எழுதியிருந்த எஞ்சினியரிங் Ato Z தகவல்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 
- ஏ.அன்பழகன், கரூர்.
 
சூழ்நிலை காரணமாகக் குற்றவாளிகளாகிச் சிறையில் இருக்கும் சிறைவாசிகளையும் பட்டதாரிகளாகவும், மத்திய அரசு பணியாளர்களாகவும் ஆக்கும் அளவுக்கு கல்வி அறிவைத் தரும் ஆசிரியர் ராஜேந்திரனின் பணி பாராட்டுதலுக்குரியது. சமீபத்தில் வெளிவந்த 10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வு களில் சிறைவாசிகளின் சாதனையைப் புள்ளிவிவரங்களோடு வெளிப்படுத்தியது சிறைவாசிகளின் சாதனை! என்ற கட்டுரைச் சேவைக்கு ஒரு சான்று.
- எம்.ரவி, வேளாங்கண்ணி.
 
ஒவ்வொரு நாளும் வெளிவந்துகொண்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்புகள் குறித்தும் அதன் பின்னணி குறித்தும் ‘கல்வித்துறையின் அதிரடி அறிவிப்புகள் நன்மையா..? தீமையா..?’ என்ற கட்டுரை விரிவாகவும், விளக்கமாகவும் சிந்திக்கவைக்கும் வகையில் அமைந்திருந்தது. மாணவர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ளும் விதமான கல்வி-வேலை வழிகாட்டி கட்டுரைகள் சூப்பர்.  
- ஜார்ஜ், ஊட்டி.
 
+2 முடித்து விட்டு அடுத்து உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்று மாணவர்கள் குழப்பத்தில் இருக்கும் வேளையில் வேளாண் துறை, திரைப்படத்துறை, மீன்வளத்துறை, கைத்தறி தொழில்நுட்பம் எனப் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களுடனான கட்டுரைகள் அத்தனையும் அற்புதம். மாணவர்களுக்குத் தெளிவான வழிகாட்டும் பயனுள்ள தகவல் களஞ்சியமாக கல்வி-வேலை வழிகாட்டி இருந்தது.
-ஆர்.ராஜேந்திரன்,மார்த்தாண்டம்.
 
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் தேர்வுக்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு செய்யும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்கள் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு நம்பிக்கையூட்டும் ரகம். முயற்சி செய்தால் மத்திய அரசில் அதிகாரியாகவே ஆகலாம் என்பது மனதைத் திடப்படுத்துகிறது. 
 - என்.அருள், வேளச்சேரி, சென்னை-42.