TNPSC அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் எதிர்கொள்ள சூப்பர் டிப்ஸ்!



போட்டித் தேர்வு டிப்ஸ்

முனைவர் ஆதலையூர் சூரியகுமார்


தமிழக அரசில் பல்வேறு துறைகளிலும் ஏற்படும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் போட்டித்தேர்வுகளை நடத்தி வருகின்றது என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்தப் போட்டித் தேர்வுகள் மூலம் அட்டண்டர் பணி முதல் அதிகாரி பணி வரை பலதரப்பட்ட தேர்வுகள் நடத்தப்படும். இந்தப் போட்டித்தேர்வுகள் அனைத்தையுமே எதிர்கொள்ள இந்தப் பகுதியில் வழங்கப்படும் தகவல்களைப் படித்தால் மிகவும் பயன்படும். கடந்த இதழில் பார்த்த பொருளியல் பாடத்திட்டத்தின் தொடர்ச்சியாக வறுமையும், வறுமை ஒழிப்புத் திட்டங்களும் பற்றி இனி பார்ப்போம். 

வறுமை: வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். பல நாடுகளில் முக்கியமாக வளர்ந்துவரும் நாடுகளில் வறுமை ஒழிப்பு என்பது ஒரு முக்கியமான இலக்காக இருந்துவருகிறது.

வறுமைக்கான காரணம், அதன் விளைவுகள், அதனை அளப்பதற்கான வழிமுறைகள் போன்றவை தொடர்பான வாதங்கள், வறுமை ஒழிப்பைத் திட்டமிடுவதிலும், நடைமுறைப் படுத்துவதிலும் தாக்கத்தைக் கொண்டுள்ளன. இதனால் இவை, அனைத்துலக வளர்ச்சி, பொது நிர்வாகம் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளன.

1990 ஆம் ஆண்டில் உலக வங்கியானது “வறுமை என்பது குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடைய முடியாத, திறனற்ற நிலையைக் குறிக்கிறது”என்று வரையறை செய்தது.ரவுண்டரி என்பவர் வறுமையை முதல்நிலை வறுமை மற்றும் இரண்டாம் நிலை வறுமை என விளக்குகிறார். தண்டேகர் மற்றும் இராத் அவர்களின் கணக்கீட்டின்படி வறுமைக்கோடு என்பது அன்றாடம் 2250 கலோரிக்கு குறைவாக உணவு நுகர்தலைக் குறிக்கும்.

திட்டக்குழு நபர் ஒருவரது வருமானம் மாதம் ஒரு குறிப்பிட்ட ரூபாய்க்குக் குறைவாக இருந்தால் வறுமைக்கோட்டில் உள்ளதாகக் (1960-1961 விலைகளில்) கருதுகிறது. ஏழாவது நிதிக்குழு நீட்டிக்கப்பட்ட ஏழ்மைக்கோடு என்னும் புதிய கருத்தைப் பயன்படுத்தியது. (உடல் நலன், குடிநீர், கல்வி,  காவல்துறை, நீதித்துறை,  சாலைப் போக்குவரத்து, சமூகநலம்) இவற்றையும் வறுமைக்கோட்டுக் கணக்கீட்டில் சேர்த்துக்கொண்டது.

வறுமையை முற்றிலும் வறுமை(Absolute Poverty) என்றும், ஒப்பீட்டு வறுமை( Relative Poverty) என்றும் இருவகைப்படுத்தலாம். முற்றிலும் வறுமை என்பது ஒரு குடும்பத்தின் வருமானம் அக்குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அளவில் மிகக் குறைவாக இருப்பதாகும். மிகக் குறைந்த அளவு வாழ்க்கைத் தரத்திற்கும் கீழான நிலையில் உள்ளவர்களை இது குறிக்கும். ஒப்பீட்டு வறுமை என்பது இரண்டு பிரிவினரின் வாழ்க்கைத் தரத்திற்கு இடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளைக் குறிப்பதாகும். இந்தியா போன்ற நாடுகளில் இவ்விரண்டு வகை வறுமையும் காணப்படுகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி பெற்ற நாடுகளில் ஒப்பீட்டு வறுமை மட்டும் காணப்படுகிறது.

இந்தியாவில் 1999-2000-ல் உள்ள புள்ளிவிவரப்படி 26 கோடி பேர் (26.1 சதவீதம்) ஏழ்மையில் உள்ளார்கள். இந்திய அரசு மற்றும் அரசு-சாராத நிறுவனங்கள் வறுமையை ஒழிக்கப் பல திட்டங்களை வகுத்தன. இதன் மூலம் உணவு மற்றும் இதர அவசியத் தேவைகள், கடன்கள் பெற அணுகுவது, விவசாயத் தொழில்நுட்பங்கள் மற்றும் விலை ஆதரவுகள் மற்றும் கல்வி மேம்பாடு மற்றும் குடும்ப நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றைத் தொடங்கினர்.
வறுமை ஒழிப்புத் திட்டங்கள்

1. ஜவஹர் கிராம வேலை வாய்ப்புத் திட்டம்: 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான செலவினை மத்திய மாநில அரசுகள் 75:25 என்ற முறையில் பகிர்ந்துகொள்ளும்.

2. நாட்டு சமூக உதவித் திட்டம்: ஆகஸ்டு 15 ஆம் நாள் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்திற்கான செலவினத்தை முழுமையாக மைய அரசே ஏற்றுக்கொள்ளும். வருமானம் ஈட்டும் குடும்பத் தலைவனை இழந்த குடும்பத்தினர் போன்றோர் இத்திட்டத்தின் கீழ் நலன்கள் பெறுவோர் ஆவர்.

3. வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்: 1993, அக்டோபர் 2 முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. மலைப் பகுதிகளாகிய 1778 பிற்பட்ட தொகுப்புகளில் செயல்படுத்தப்பட்டது.2001-ல் புதிய சம்பூர்ண கிராம வேலைவாய்ப்புத் திட்டத்துடன் ஜவஹர் கிராம வேலைவாய்ப்புத் திட்டம், வேலை வாய்ப்பு உறுதித்திட்டம் இணைக்கப்பட்டது.

4. பிரதமரின் வேலைவாய்ப்புத் திட்டம்: 2000-2001 நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு ரூ.5000 கோடி செலவில் சுகாதாரம், கல்வி, குடிநீர், சாலை அமைத்தல் போன்ற பணிகளைக் கிராமங்களில் மேற்கொள்ள ஒதுக்கீடு செய்யப்பட்டது.

5. சுதந்திரப் பொன்விழா ஆண்டு ஊரகத் தன் வேலைவாய்ப்புத் திட்டம்: 1997 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நகர்ப்புறச் சுயவேலைவாய்ப்பைப் பெருக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இதில் மத்திய மாநில அரசுகள் 75:25 எனச் செலவினைப் பகிர்ந்துகொள்கிறது.

6. கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்: 1976-1977 ஆம்ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இத்திட்டம் முதன் முதலாக முன்மொழியப்பட்டது. கிராமப் பகுதிகள் பயனடைவதையே நோக்கமாகக் கொண்டது.பொருளியல் சார்ந்த தொழில் துறை பற்றிய தகவல்களை அடுத்த இதழில் பார்ப்போம்.