10 ம் வகுப்பு முடித்தவர்களுக்குச் சான்றிதழ் படிப்புகளும்… பட்டயப்படிப்புகளும்!



ஆலோசனை

பள்ளிப் படிப்பில் இறுதி ஆண்டாக +2 வகுப்பைத்தான் சொல்லமுடியும். ஆனால், இதுவரை 10ம் வகுப்புக்கும் +2க்கும் மட்டுமே பொதுத்தேர்வுகள் நடந்துவந்தன. 10ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றவர்கள் பதினொன்றாம் வகுப்பில் தங்கள் விருப்பத்தின்படி பாடப்பிரிவைத் தேர்வு செய்து படித்து உயர்கல்விக்குச் செல்கிறார்கள். ஆனால், 10ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிவிட்டு மதிப்பெண்கள் குறைந்தாலும், குடும்பச் சூழல் காரணமாகவும் தொழிற்கல்விகளான சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளை மேற்கொள்வதுதான் கடந்த காலங்களில் நடந்தது.

இன்றைய தலைமுறையின் கல்வி மீதான பார்வை மாறிப்போயிருக்கிறது. வேலைவாய்ப்புக்காகவே படிப்பு என்ற நிலையில், அது பட்டப்படிப்பா, சான்றிதழ் படிப்பா எனப் பார்க்கத் தேவையில்லை என்னும் அளவுக்குப் பட்டம் வாங்குவதை விட வேலைவாய்ப்பு பெறுவதுதான் முக்கியம் என்று என்ணுகிறார்கள்.  தொலைநிலைக் கல்வி மூலமாகக்கூட பட்டப்படிப்பு படிக்க முடியும். ஆனால், அதே வழியில் வேலைவாய்ப்பைப் பெற முடியாது என்கின்றனர் இன்றைய தலைமுறையினர்.

பட்டப்படிப்புடன் தொடர்புடைய ஏதேனும் சான்றிதழ் படிப்புகளைப் படித்துவிட்டு, தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்கின்றனர். வேலைவாய்ப்பைப் பெறப் பட்டம் தேவையில்லை, தொடர்புடைய துறையில் திறன்தான் வேண்டும் என்ற அளவுக்கு மாறிப்போயிருக்கிறது இன்றைய நிலை.
மேலும் ஒருசில பெற்றோரின் மனநிலையும் இந்த வருடம் 10வது தேர்வில் என் மகன் தேர்ச்சி பெற்றுள்ளான்.  அவன் ஒரு நல்ல கலைஞன், மிக நன்றாகப் பாடுவான், கீபோர்ட் வாசிப்பான். கணினியில் மிக நன்றாக வரைவான், போட்டோஷாப் போன்ற தொழில்நுணுக்கங்களில் ஆர்வம் அதிகம். அதனால் அந்தத் துறை சார்ந்த ஒரு படிப்பு அவனது ஆர்வத்தைப் பூர்த்தி செய்யும் என்பது எங்கள் எண்ணம்.

மேலும் அவனால் ஒரு தீவிர இயற்பியலிலோ அல்லது வேதியலிலோ முழுக் கவனம் செலுத்திப் படிக்கமுடியாது அதனால் ஒரு செய்முறைப் பயிற்சி சார்ந்த கிரியேட்டிவ் பாடங்களே அவனுக்கு ஏற்றதாக இருக்கும் என்பது எங்கள் எண்ணம். எனவே மீடியா, கம்யூனிகேஷன், அட்வெர்டைசிங் சார்ந்த துறைகளில், 10வது முடித்து ஒரிரு வருடங்கள் ஒரு டிப்ளமோ, பின் மேல் படிப்பு என்பதே எங்கள் திட்டம்” என்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளில் எதைத் தேர்வு செய்வது என்பதை முடிவு செய்து விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் தேர்வு செய்வதற்குத் தக்க சில சான்றிதழ் படிப்புகளையும் பட்டயப்படிப்புகளையும் இனி பார்ப்போம்…
சான்றிதழ் படிப்பு (ITI): இது ஓராண்டு படிப்பு. இதில் Fitter, Welder, Machinist, AC Mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது.

வணிகம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளாக டேக்சேஷன்/டேக்ஸ் பிளானிங் அண்டு மேனேஜ்மென்ட், சேல்ஸ் அண்டு மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட், மைக்ரோ பைனான்ஸ் அண்டு மேக்ரோ என்டர் பிரைசஸ், மேனேஜரியல் அக்கவுண்டிங், இன்டர்நேஷனல் பிசினஸ், இன்ஸ்யூரன்ஸ் அண்டு பைனான்ஸ் சர்வீஸ், இன்டஸ்ட்ரியல் மணி மார்க்கெட், இ-காமர்ஸ் அண்டு இன்டர்நெட் அப்ளிகேஷன்ஸ், காஸ்ட் அண்டு வொர்க்ஸ் அக்கவுண்டன்சி, பிசினஸ் மேனேஜ்மென்ட் ஆகியவை உள்ளன.

அறிவியல் பிரிவு சார் சான்றிதழ் படிப்புகளாக ஆக்சுவரியல் சயின்ஸ், பயோ இன்பர்மேட்டிக்ஸ், ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி, இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஃபுட் அனலைசிஸ் அண்டு குவாலிட்டி அஸ்யூரன்ஸ், ஃபாரன்சிக் சயின்ஸ், பயோ ரிசோர்சஸ் அண்டு யூடிலிசேஷன் டெக்னிக்ஸ், சவுண்டு ரெகார்டிங் அண்டு சவுண்டு ரீபுரடக்சன், டெலிகம்யூனிகேசன் மேனேஜ்மென்ட் ஆகியவற்றைச் சொல்லலாம். உடனடி வேலைவாய்பிற்கு ஏற்ற படிப்பு.

பட்டயப்படிப்பு (டிப்ளோமா): இது 3 ஆண்டு படிப்பு. தொழில்நுட்பத் துறைகள் , மருத்துவத் துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் எனப் பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில்நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன.

டிப்ளோமா படித்து முடித்துவிட்டும்கூட மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில்நுட்பத் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.

- முத்துமணி