நீங்களும் ராணுவ அதிகாரி ஆகலாம்!



வாய்ப்புகள்

பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!


இந்திய ராணுவம் தரைப்படை, கடற்படை, விமானப்படை எனும் முப்பிரிவுகளாகச் செயல்படுகிறது. சர்வதேச அளவில் நமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேரா வண்ணம் இந்தப் படைப்பிரிவுகள் காத்துக் கடமையாற்றுகின்றன. உள்நாட்டிற்குள்ளேயே ஏற்படும் சமூக விரோதச் செயல்களை அடக்குவதற்காகத் துணை ராணுவப் படைகள் செயல்பட்டுவருகின்றன.

இந்த ராணுவ அமைப்புகளுக்கு உதவிக் கரமாகச் செயல்படும் வகையில் ‘டெரிட்டோரியல் ஆர்மி’ எனும் ‘பிராந்திய ராணுவ’ அமைப்பு இயங்குகிறது. காவல்துறைக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர் செயல்படுவதுபோல, ராணுவத்தின் ஓர் உதவி அமைப்பாக இந்தப் பிராந்திய ராணுவம் செயல்படுகிறது.ராணுவப் பணியை விரும்பும் இளைஞர்கள், தாங்கள் செய்யும் வேலைக்கு இடையூறு இல்லாமல், இருக்கும் இடத்திலேயே குறிப்பிட்டகாலப் பயிற்சி பெற்றுப் பிராந்திய ராணுவத்தில் சேவையாற்றலாம். அரசுப் பணி, தனியார் பணி, சுயதொழில் என எந்தத் தொழிலில் இருப்பவர்களும் இதில் சேரலாம்.

பணிக்காலத்தில் ராணுவ அதிகாரிகள் பெறும் ஊதியம் மற்றும் சலுகைகளையும் பெறலாம். தற்போது பிராந்திய ராணுவத்தில் அதிகாரி பணிக்கு பட்டதாரிகளைச் சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சேருவதற்கான மேலும் கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட சில விவரங்களை இனி பார்ப்போம்...

கல்வித்தகுதி மற்றும் வயதுவரம்பு: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய மாநில அரசு வேலைகள், பகுதி நேர அரசு-தனியார் வேலைகள், சொந்தத் தொழில் என எந்தப் பணியில் இருப்பவரும் இதில் சேர விண்ணப்பிக்கலாம். ஆனால், காவல்துறை, ஆயுதப்படை, துணை ராணுவப் பிரிவுகளில் பணியில் இருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. 
சுயதொழில்புரிபவர்கள் அபிடவிட் (Affidavit) மற்றும் பான் (Pan) கார்டு சமர்பிக்க வேண்டும். மற்றவர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் தடையில்லாச்சான்று பெற்றுத் தரவேண்டும். வயது 18 - 42 வரை இருக்கவேண்டும்.

தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மருத்துவப்பரிசோதனை நடத்தப்பட்டு, பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். முதல் 2 ஆண்டுகளுக்கு அவ்வப்போது ராணுவப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் அவர்கள் வழக்கமாக செய்யும் பணியில் நீடித்துக்கொண்டே ராணுவ அதிகாரியாகப் பணியாற்றலாம். லெப்டினன்ட் அதிகாரியாகப் பணி பெறும் அவர்கள் பணிக்காலத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறமுடியும்.

இப்பணியில் சேர விரும்பு வோருக்கு 30.7.2017 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும். இதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.எழுத்துத் தேர்வு எவ்வாறு இருக்கும்? எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. ஒவ்வொரு தேர்வும் 2 மணி நேரத் தேர்வாகும். முதல் தாளில் பகுதி 1-ல் ரீசனிங் என்ற தலைப்பில் 50 வினாக்களும், பகுதி 2-ல் அடிப்படைக் கணிதத்தில் 50 வினாக்களும் கேட்கப்படும்.

இரண்டாம் தாளில் பகுதி 1-ல் பொது அறிவில் 50 வினாக்களும், பகுதி 2-ல் ஆங்கிலத்தில் 50 வினாக்களும் கேட்கப்படும். முதல் தாளுக்கு 100 மதிப்பெண்களும், இரண்டாம் தாளுக்கு 100 மதிப்பெண்களுமாக மொத்தம் 200 மதிப்பெண்களாகும். கணிதம் 10ஆம் வகுப்பு தரத்திலும், மற்ற பாடங்கள் பட்டப்படிப்புத் தரத்திலும் இருக்கும்.சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான (அப்ஜக்டிவ் டைப்) இத்தேர்வில், தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப்படும். இத்தேர்வில் குறைந்தபட்ச தகுதியாக, ஒவ்வொரு பாடத்திலும் 40 விழுக்காடும், கூட்டுச் சராசரியில் 50 விழுக்காடும் பெற வேண்டும்.

எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைனில் www.joinindianarmy.nic.in என்ற இணையம் வழியாக IFA(TA1-9 (Revised) Part I) என்ற படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 200 ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 30.6.2017.

தேர்வு எங்கு நடைபெறும்?
சண்டிகர், லக்னோ, பாட்னா, கொல்கத்தா, ஷில்லாங், ஜெய்ப்பூர், புனே, பெங்களூரு, ஐதராபாத், உதய்ப்
பூர், நகர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.

தேர்ச்சி பெற்றவர்கள் என்ன பதவியை எப்படிப் பெறுவார்கள்?

எழுத்துத் தேர்வு முடிந்து, அதில் தேர்ச்சி பெற்றவர்கள் டெரிட்டோரியல் ஆர்மி குரூப் ஹெட் குவார்ட்டர்ஸ் நடத்தும் முதல்நிலை நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதன் பின் சர்வீஸ் செலக்சன் போர்டு (Service Selection Board) நடத்தும் நேர்முகத் தேர்விலும், மெடிக்கல் போர்டு (Medical Board) நடத்தும் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

இதற்குப்பின், இவற்றில் முறையாகத் தேர்ச்சி பெற்றவர்கள், ஒரு மாத அடிப்படைப் பயிற்சியைப் பெறுவார்கள். ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் இரண்டு மாத ஆண்டு இறுதிப் பயிற்சியாக முகாமில் பங்கு பெறுவார்கள். இதன்பின் டேராடூன் இந்தியன் மிலிட்டரி அகாடமியில் மூன்று மாதப்பயிற்சி தரப்படும். இதன் பின் லெஃடினென்ட் (Lieuftenant) என்ற அந்தஸ்த்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

இதனைத் தொடர்ந்து படிப்படியாக கேப்டன் (Captain), மேஜர் (Major), லெஃடினென்ட் கர்னல் (Lt Colonel), கர்னல் (Colonel), பிரிகேடியர் (Brigadier) என்ற உயர் பதிவிகளைப் பெறலாம். ராணுவத்தில் பணியாற்ற விரும்பி, லட்சியமாகக் கொண்டு தவிர்க்க முடியாத காரணங்களால் ஈடேறாமல் போயிருந்தால் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள அரிய வாய்ப்பு. விண்ணப்பிக்கத் தயாராகுங்க இளைஞர்களே! வாழ்த்துகள்!                 
எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு மையத்தில் வேலை!

ஆல் இண்டியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் எனும் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வுக்கான நிறுவனத்தின் பாட்னா கிளை மற்றும் புவனேஸ்வர் கிளைக்களில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.அதில் பாட்னா கிளையில் சீனியர் ரெசிடென்ட் எனும் மருத்துவர் பணி மற்றும் அனாடமி, பீடியாட்ரிக்ஸ் உட்பட 36 மருத்துவத் துறைகளில் பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 242 இடங்கள்.
கல்வித்தகுதி: துறைகளுக்கு ஏற்ப மருத்துவத்தில் முதுகலைப் படிப்பு
வயது வரம்பு: 33க்குள்
தேர்வு முறை: நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 27.6.17
மேலதிக தகவல்களுக்கு: www.aiimspatna.org

எய்ம்ஸ் மருத்துவமனையின் புவனேஸ்வர் கிளையில் குரூப் பி அடிப்படையிலானபப்ளிக் ஹெல்த், ஃபிசியோதெரபி உட்பட 56 துறைகளில் நான்டெக்னிக்கல் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1211 பணியிடங்கள்.

கல்வித்தகுதி: மருத்துவம் தொடர்பான வேலைகள் என்பதால் பி.எஸ்.சி நர்சிங், மைக்ரோபயாலஜி போன்ற படிப்புகளில் துறைகளுக்கு ஏற்ப படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: 21லிருந்து 36 வரை, 21லிருந்து 30 வரை மற்றும் 17லிருந்து 20 வரை எனத் துறைகளுக்கு ஏற்ப வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 28.6.17
மேலதிக தகவல்களுக்கு: www.aiimsbhubaneswar.edu.in

ஆர்.ராஜராஜன்