கவின்கலைப் பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை!



+2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணைவு (Affiliated to University) பெற்று சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் கவின்கலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரமிது.

இளங்கவின்கலைப் படிப்பு: சென்னை, அரசுக் கவின்கலைக் கல்லூரியில் நான்கு ஆண்டு கால அளவிலான காட்சிவழித் தொடர் வடிவமைப்பு (Visual Communication Design), வண்ணக்கலை (Painting), சிற்பக்கலை (Sculpture), சுடுமண் (ஆலையக) வடிவமைப்பு (Industrial Design in Ceramic), துகிலியல் (ஆலையக) வடிவமைப்பு (Industrial Design in Textile), பதிப்போவியம் (Print Making) எனும் ஆறு பிரிவுகளிலும், கும்பகோணம் அரசுக் கவின் கலைக்கல்லூரியில் காட்சிவழித் தொடர் வடிவமைப்பு (Visual Communication Design), வண்ணக்கலை (Painting), சிற்பக்கலை (Sculpture) எனும் மூன்று பிரிவு களிலும் இளங்கவின்கலைப் பட்டப்படிப்புகள் (Bachelor of Fine Arts - BFA) இடம் பெற்றிருக்கின்றன.

இப்பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு +2 அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 1.7.2017 அன்று 23 வயது நிறைவடையாதவர்களாக இருக்கவேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு உண்டு.

முதுகவின்கலைப் படிப்பு: சென்னை, அரசுக் கவின்கலைக் கல்லூரியில் இரண்டு ஆண்டு கால அளவிலான காட்சிவழித் தொடர் வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக் கலை, சுடுமண் வடிவமைப்பு, துகிலியல் வடிவமைப்பு எனும் ஐந்து பிரிவுகளிலும், கும்பகோணம் அரசு கவின்கலைக் கல்லூரி யில் காட்சிவழித் தொடர் வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை எனும் மூன்று பிரிவுகளிலும் முதுகவின்கலைப் பட்டப்
படிப்புகள் (Master of Fine Arts - MFA) இடம்பெற்றிருக்கின்றன.

இப்பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு உரிய துறையில் இளங்கவின்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்படிப்புச் சேர்க்கைக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்கும் முறை: சென்னையிலுள்ள கல்லூரிக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் சென்னையிலுள்ள கவின்கலைக் கல்லூரி முதல்வரது பெயருக்கும், கும்பகோணம் கல்லூரிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கும்பகோணத்திலுள்ள கவின்கலைக் கல்லூரி முதல்வர் பெயருக்கு ரூ.100க்கும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.50க்கும் வங்கி வரைவோலை பெற்றுக் கல்லூரி அலுவலகத்தில் நேரடியாகக் கொடுத்து விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

அஞ்சல் வழியில் பெற விரும்புபவர்கள் மேற்காணும் வங்கி வரைவோலையுடன், ரூ.15-க்கான அஞ்சல்தலை ஒட்டப்பட்ட 25 X 10 செ.மீ அளவுடைய சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையினை இணைத்து அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் சாதிச் சான்றிதழ் நகலை இணைத்து அனுப்பிடவேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பம் கல்லூரி அலுவலகத்திற்குச் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 21.6.2017.மேலும் கூடுதல் தகவல்களை அறிய விரும்புவோர் http://www.tnmfau.in/ எனும் இணைய முகவரியில் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தைப் பார்வையிடலாம். சென்னையிலிருக்கும் கல்லூரிக்கு அரசுக் கவின் கலைக்கல்லூரி, எண் 31, ஈ. வே. ரா. பெரியார் நெடுஞ்சாலை, பெரிய மேடு, சென்னை-600 003” எனும் முகவரிக்கும், கும்பகோணத்திலிருக்கும் கல்லூரிக்கு ‘‘அரசுக் கவின் கலைக்கல்லூரி, சுவாமிமலை முதன்மைச் சாலை, மேலக்காவிரி அஞ்சல், கும்பகோணம்  612 002’’ எனும் முகவரிக்கும் நேரில் சென்றோ அல்லது அஞ்சல் வழியில் தொடர்புகொண்டோ தகவல்களைப் பெறலாம். சென்னை கல்லூரிக்கு 044-25610878, கும்பகோணம் கல்லூரிக்கு 0435-2481371 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறலாம்.

- உ.தாமரைச்செல்வி