இசைக்கலையில் பட்டப்படிப்புகளும்…பட்டயப்படிப்புகளும்!



அட்மிஷன்

10ம் வகுப்பு படித்தவர்களும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்!


தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் இசைக்கலை தொடர்பான பட்டயப்படிப்பு (Diploma), இளங்கலை இசைப் பட்டப்படிப்பு, முதுகலை இசைப் பட்டப்படிப்பு மற்றும் இசை ஆசிரியர் பயிற்சிப் பட்டயப்படிப்பு போன்றவற்றில் 2017-2018 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இசைக் கல்லூரிகள்: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருவையாறு ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இக்கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்றுச் செயல்பட்டுவருகின்றன.

வழங்கும் படிப்புகள்: சென்னையிலிருக்கும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதசுரம், தவில், கடம், கஞ்சிரா, மோர்சிங், கிராமியக்கலை, பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் பட்டயப்படிப்புகளும், குரலிசை, வயலின், வீணை ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டு கால அளவிலான இளங்கலை இசைப் பட்டப்படிப்பும், நட்டுவாங்கக் கலைமணி எனும் இரண்டாண்டு கால அளவிலான பட்டயப்படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.

மதுரையிலிருக்கும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், நாதசுரம், தவில், புல்லாங்குழல், கிராமியக்கலை, பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் பட்டயப்படிப்புகளும், குரலிசை எனும் பிரிவில் மூன்றாண்டு கால அளவிலான இளங்கலை இசைப் பட்டப்படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.

கோயம்புத்தூரிலிருக்கும் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் குரலிசை, வயலின், வீணை, பரதநாட்டியம் பிரிவுகளில் பட்டயப்படிப்புகளும், குரலிசை, வயலின், வீணை ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டு கால அளவிலான இளங்கலை இசைப் பட்டப்படிப்பும் டம்பெற்றிருக்கின்றன.

திருவையாறுவிலிருக்கும் தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், நாதசுரம், தவில், பரதநாட்டியம் ஆகிய பிரிவுகளில் பட்டயப்படிப்புகளும், குரலிசை, வீணை ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டு கால அளவிலான இளங்கலை இசைப் பட்டப்படிப்புகளும், குரலிசை, வீணை ஆகிய பிரிவுகளில் முதுகலை இசைப் பட்டப்படிப்புகளும், இசையில் முனைவர் பட்ட (Ph.D) ஆய்வுப்படிப்பும் (முழுநேரம் மற்றும் பகுதிநேரம்) இடம்பெற்றிருக்கின்றன. நான்கு இசைக் கல்லூரிகளிலும் ஓராண்டு கால அளவிலான இசை ஆசிரியர் பயிற்சிப் பட்டயப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் செயல்படும் மாலைநேர இசைக் கல்லூரிகளில் சென்னை மற்றும் மதுரையில் குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம் பிரிவுகளிலான பட்டயப்படிப்பும், மதுரையில் கூடுதலாகப் பரதநாட்டியம் பிரிவிலான பட்டயப்படிப்பும், கோயம்புத்தூரில் குரலிசை, வயலின், வீணை ஆகிய பிரிவுகளிலான பட்டப்படிப்பும் இடம்பெற்றிருக்கின்றன.

இவை தவிர, மாணவ, மாணவிகள், இல்லத்தரசிகள் போன்றவர்களுக்காக மாலை நேரம் மற்றும் வார விடுமுறை நாட்களில் செயல்படும் மூன்றாண்டு கால அளவிலான இசை மற்றும் நடனப் பிரிவுகளிலான இளங்கலைப் பட்டப்படிப்பு சென்னை இசைக் கல்லூரியில் மட்டும் இடம்பெற்றிருக்கிறது.

கல்வித் தகுதி: இசைக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் பட்டயப்படிப்புகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியும், இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை இசைப் பட்டப்படிப்பிற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியும், நட்டுவாங்கக் கலைமணிப் பட்டயப்படிப்பிற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஆடற்கலைமணி பட்டயப் படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்கவேண்டும். இசை ஆசிரியர் பயிற்சிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இளங்கலைமணி பட்டயப்படிப்பு அல்லது இளங்கலை இசைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். முதுகலை இசைப் பட்டப்படிப்பிற்கு இளங்கலை இசைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டயப்படிப்புகளுக்கு 16 முதல் 21 வயது வரையிலும், இளங்கலை இசைப் பட்டப்படிப்பிற்கு 17 முதல் 22 வயது வரையிலும், நட்டு வாங்கக் கலைமணிப் பட்டயப்படிப்பு மற்றும் இசை ஆசிரியர் பயிற்சிக்கு 16 முதல் 25 வயது வரையிலும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுகலை இசைப் பட்டப்படிப்பிற்கும், மாலை நேரக் கல்லூரிகளிலுள்ள அனைத்துப் படிப்புகளுக்கும் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: இசைக் கல்லூரிகளில் இருக்கும் பட்டயப்படிப்புகளுக்கு ரூ. 5ம் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கு ரூ.25ம் என இந்திய அஞ்சல் ஆணையினை “முதல்வர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, சென்னை / மதுரை / கோயம்புத்தூர் / திருவையாறு”  என்று சேர விரும்பும் கல்லூரியின் பெயருக்குப் பெற்று, நேரடியாக அந்தந்தக் கல்லூரிகளில் கொடுத்து விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பினைப் பெற்றுக்கொள்ளலாம்.

அஞ்சல் வழியில் பெற விரும்புவோர் வேண்டுதல் கடிதம் மற்றும் விண்ணப்பக் கட்டணத்திற்கான அஞ்சல் ஆணையுடன் ரூ10 அஞ்சல்தலை ஒட்டப்பட்ட 10x23 செ.மீ அளவுகொண்ட சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை ஒன்றினைச் சேர்த்து அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பப் பதிவு: நிரப்பப்பட்ட விண்ணப்பங்களில் பட்டயப்படிப்பு விண்ணப்பத்துடன் ரூ.1, பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்துடன் ரூ.10-க்கான இந்திய அஞ்சல் ஆணையை உரிய கல்லூரியின் முதல்வர் பெயருக்குப் பெற்றுப் பதிவுக் கட்டணமாகச் சேர்த்து அனுப்பி வைக்கவேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்புடைய கல்லூரிகளுக்குச் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 30.6.2017.

மாணவர் சேர்க்கை: இசைக் கல்லூரிகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களைக் கொண்டு, தமிழ்நாடு அரசு இட ஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தக் கல்லூரிகளில் பயிலும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் ஓராண்டில் 10 மாதங்கள் என்று கணக்கிட்டு, மாதந்தோறும் ரூ.500 வீதம் தமிழ்நாடு அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

கூடுதல் தகவல்கள் அறிய மேற்காணும் ஊர்களிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம் அல்லது சென்னை: 044  24937217, மதுரை:  0452  2370861, கோயம்புத்தூர்: 0422  2479686, திருவையாறு:  04362  261600 எனும் கல்லூரியின் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம்.

- தேனி மு.சுப்பிரமணி