பிள்ளைகளுக்குச் சத்தான உணவளிக்க ஒரு வீடியோ கேம்



புதுமை

சாப்பாடு என்றாலே கூப்பாடு போட்டு ஓடும் குழந்தைகள் சத்தான உணவு, பச்சைக்காய்கறிகள், பட்டாணி, பழங்கள் என்றால் சொல்லவா வேண்டும் காத தூரம் ஓடும். சாப்பிட அடம்பிடித்து ஓடும் பிள்ளைகளையும் ஒலிம்பிக் ஓட்டம் போல் ஓடி உணவளிக்கும் அம்மாக்களையும் நாம் கட்டாயம் பார்த்திருப்போம். பிள்ளைகளை ஒரு டம்ப்ளர் பால் குடிக்க வைக்கிறதுகுள்ள நாம தலைகீழா நின்னு ஒரு பாட்டில் தண்ணி குடிச்சிடலாம் என்கிற அளவுக்கு அம்மாக்களின் கவலைக் கதை உள்ளது.

இதற்காகவே இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமான எக்ஸிடெர் பயனுள்ள வீடியோ கேம் ஒன்றை உருவாக்கியுள்ளது. மிக எளிமையான இந்த வீடியோ கேம் குழந்தைகளை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் தூண்டுவதாக தெரிவித்துள்ளார் ஆய்வுக் குழு தலைவர் நடாலியா லாரன்ஸ். இந்த கேமானது படங்களுக்கு ஏற்ப அதற்குரிய ரியாக்ஷன்களைக் காண்பிக்கும்.

கேமில் காய்கறிகள், பழங்கள், பால், முட்டை என ஆரோக்கியமான உணவுகளும், உடலை பாதிக்கும் சாக்லேட், கேக், குளிர்பானங்கள், பர்கர், உள்ளிட்ட ஆரோக்கியமற்ற உணவுகளும் இருக்கும். வீடியோ கேம் திரையில் வெறுமனே சிரித்த ஸ்மைலிகள் மற்றும் சற்றே சோகமான ஸ்மைலிகள் தோன்றும். சிரித்த ஸ்மைலிகளை க்ளிக் செய்தால் ஆரோக்கிய உணவுகள் தோன்றும்.

அதேசமயம் சோகமான ஸ்மைலிகளை க்ளிக் செய்தால் ஆரோக்கியமற்ற உணவுகள் திரையில் தோன்றும். இந்த கேம்கள் பிள்ளைகளின் ஆழ்மனதில் அவர்களுக்கே தெரியாமல் சாக்லேட், கேக்குகளை ஆரோக்கியமல்லாத உணவு என்பதாக பதிவு செய்து, அவற்றை அவர்களே ஒதுக்கும்படி செய்யும். ஒரு கட்டத்தில் சிரிக்கும் ஹேப்பி ஸ்மைலிகளை மட்டுமே க்ளிக் செய்ய குழந்தைகள் விரும்புவார்கள்.

இது ஒரு ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு முதல் பதினோரு வயதுடைய 200 பள்ளிச் சிறுவர்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தியுள்ளனர். ஆரம்பத்தில் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களைப் பார்க்கையில் குழந்தைகளின் மூளை உற்சாகம் காட்டினாலும் நேரம் ஆக ஆக அவர்களுக்கு சோகமான ஸ்மைலியை க்ளிக் செய்யும் ஆசை இல்லாமல் போனதையும் அவர்கள் ஆரோக்கிய உணவையே தேர்வு செய்ததையும் உறுதி செய்திருக்கிறார்கள். இது தவிர்த்து இதே கேமில் இன்னொரு வகையாக ஷாப்பிங் கேமும் உள்ளது. ஒரு நிமிடத்தில் ஆரோக்கியமான உணவுகளைத் தேடி சேர்க்க வேண்டும். இந்த விளையாட்டு நிச்சயம் அவர்களின் ஆழ்மனதில் ஆரோக்கிய உணவு வகைகளைப் பதியச் செய்யும்.

ஒருவேளை அவர்கள் வீட்டில் காய்கறிகள் சாப்பிட அடம்பிடித்தால் கூட இந்த கேமைக் கொண்டு அவர்களை திசை திருப்ப முடியும் என்பதே ஆய்வின் முடிவு. கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளை விட மிகக் குறைந்த வயதுடைய குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த கேம் பயனுள்ளதாக இருக்கும் என்கிறது ஆய்வறிக்கை.

இப்படியான கேம்கள் நம் ஆண்ட்ராய்டு உலகிலும் சில இருக்கின்றன. ஃப்ரூட் நிஞ்சா, பேக்கரி ஸ்டோரி, ஃபார்ம் வில்லேக்கள் போன்றவைதான் அவை. இவையனைத்தும் 14 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் கேம்கள். இந்த கேம்கள் அனைத்தும் ஆரோக்கிய உணவுகளை மையமாகக்கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளன.

மொபைல் போன்களை குழந்தைகள் கைகளில் கொடுக்கவே கூடாது என்பதுதான் பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், ட்ரென்ட், இன்றைய தலைமுறையின் சாதுர்யம் என்று பார்க்கும்போது மொபைல் போன்களை குழந்தைகளுக்கு எட்டாமல் நாம் பயன்படுத்துவது அரிது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் குறைந்தபட்சம் அவைகளைக் கொண்டு நல்ல விஷயங்களையேனும் பழக்க முயற்சிக்கலாம்.

இந்த விளையாட்டுகளை முடிந்தவரை குழந்தைகள் அருகில் அமர்ந்து ஒவ்வொரு காய்கறிகள், ஆரோக்கிய உணவுகள் வருகையில் அவர்களை சொல்ல வைத்து மனதில் பதிய வைக்கலாம். எது எப்படியோ பிள்ளைகளை நாசமாக்கும் வீடியோ கேம்களுக்கு மத்தியில் சத்தான உணவளிக்க வந்த வீடியோ கேம் வரவேற்கத்தக்கதே!

- ஷாலினி நியூட்டன்