கேம்பஸ் நியூஸ்



அமெரிக்கா அள்ளித் தரும் சலுகைகள்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் மாணவர்களின் ஆர்வத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்கும் வகையில், அங்கு வேலை செய்பவர்களின் பணி உரிம காலத்தை ஆறு ஆண்டுகளாக நீட்டிக்க, அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது. புதிய விதிமுறைகளின்படி, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதவியல் போன்ற துறைகளில் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பை முடித்து, அமெரிக்காவிலேயே பணிபுரியும் மாணவர்களுக்கான பணி உரிம கால அவகாசத்தை, ஆறு ஆண்டுகளாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படி அங்கு சென்று பட்டப் படிப்பை படிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய மாணவர்கள் என்பதால், அவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விடுதி வசதி!

சென்னை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ‘பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், கல்லூரி மாணவர்களுக்கு 8 விடுதிகளும் மாணவியருக்கு 5 விடுதிகளும் செயல்படுகின்றன. இதில், உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. உள்ளிட்ட பிரிவுகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேரத் தகுதியுடைவர்கள்.

இந்த மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்குள்ளும், இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் கல்வி நிறுவனத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ தொலைவுக்குள்ளும் இருக்க வேண்டும். இந்த தொலைவுக்கான விதிமுறை மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய கல்லூரி விடுதிகளில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகம், கல்லூரி விடுதியின் காப்பாளர்கள் ஆகியோரிடம் இலவசமாகப் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 15க்குள் அவற்றை வாங்கிய இடங்களிலேயே சமர்ப்பிக்கலாம். சாதிச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை விடுதியில் சேரும்போது அளித்தால் போதுமானது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு யு.பி.எஸ்.சி தேர்வில் சலுகை

சிவில் சர்வீஸ் முதல்நிலை மற்றும் பிரதான தேர்வெழுத, மாற்றுத்திறனாளிகள் துணைக்கு ஆள் வைத்துக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிக்கையில், ‘சிவில் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர், 40 சதவீதம் வரை பார்வைக் குறைபாடு, கை, கால் முடம், பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், வேறொருவர் துணையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். இவர்களுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரத்துக்கு 20 நிமிடம் வீதம் அவகாசம் அளிக்கப்படும். முதல் நிலை மற்றும் பிரதானத் தேர்வு ஆகியவற்றுக்கு இச்சலுகை கிடைக்கும். குறைபாடுகள் இல்லாத பிற விண்ணப்பதாரர்கள், எக்காரணத்தைக் கொண்டும் வேறொருவர் துணையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என  கூறப்பட்டுள்ளது.

10ம் வகுப்புத் தேர்வு இனி ஈஸி!

பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள் வசதிக்காக, 10ம் வகுப்புத் தேர்வை எப்போது வேண்டுமானாலும், ஒவ்வொரு பாடமாக எழுதி தேர்வு பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர்கள், உயர்கல்வி கற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இவர்கள் வசதிக்காக, 10ம் வகுப்புத் தேர்வை எப்போது வேண்டுமானாலும், நாட்டின் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் எழுதி, தேர்ச்சி அடைவதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தின்படி, ஒரே நேரத்தில் அனைத்துப் பாடங்களையும் எழுத வேண்டிய அவசியமில்லை.

தங்கள் வசதிக்கேற்ப, ஒவ்வொரு பாடமாக எழுதித் தேர்ச்சி பெறலாம். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ‘மாசிவ் ஆன்லைன் ஓபன் கோர்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ் இந்தத் தேர்வை எழுதலாம். தேசிய திறந்தநிலைப் பள்ளி பயிற்சி மையம், இந்தத் திட்டத்தை கண்காணிக்கும். இதுதொடர்பான பாடங்கள் அனைத்தையும், இணையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்து படிக்கலாம். ஐந்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின், சான்றிதழ் அளிக்கப்படும். இவ்வாறு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக வட்டாரத் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய இணைய வழி சான்றிதழ் படிப்புகள்

தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டத்தின் கீழ் (என்.பி.டி.இ.எல்.) புதிதாக 24 இணைய வழி சான்றிதழ் படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்தத் திட்டத்தின் மூலம் 30 படிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். மாணவர்கள் தொழில்நுட்பத்தில் மேம்பாடு அடையும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியின் கீழ் ஏழு ஐ.ஐ.டி.க்களும் சேர்ந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இந்த இணைய வழி படிப்பை முடிப்பவர்களுக்கு என்.பி.டி.இ.எல், ஐ.ஐ.டி. ஆகிய இரண்டு நிறுவனங்கள் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். இதுவரை 30 படிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சான்றிதழ்களைப் பெற்றுச் சென்றுள்ளனர். இப்போது 28 இணைய வழி படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏரோஸ்பேஸ், எலெக்ட்ரிக்கல், மேலாண்மை அறிவியல் ஆகிய துறைகளின் கீழ் கூடுதலாக 24 இணைய வழி படிப்புகள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.விருப்பமுள்ளவர்கள் www.onlinecourses.nptel.ac.in  என்ற இணையதளம் மூலம் இந்தப் படிப்பில் சேர்ந்துகொள்ள முடியும். இதில் உள்ள பாடங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாகவே படித்துப் பயன்பெற முடியும். சான்றிதழ் பெற விரும்புபவர்கள் மட்டும், தேர்வுக்கான குறைந்த அளவிலான கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். வருகிற செப்டம்பர், நவம்பர் மாதங்களில் இதற்கான தேர்வுகள் நடத்தப்படும்.

கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, படிப்பை முடித்து பணியில் இருப்பவர்களுக்கும் இது மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள வீடியோ பாட கற்பித்தல் வகுப்புகள், விரும்பும் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும்.

அண்ணா பல்கலையில் எம்.இ., எம்.டெக் சேர்க்கை

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட எஞ்சினியரிங் கல்லூரிகளில், எம்.இ.,  எம்.டெக்.,  எம்.ஆர்க்., எம்.பிளான்., போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர, டான்செட் என்ற தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நுழைவுத்தேர்வு முடிவு, கடந்த மாதம் வெளியானது. ஆன்லைனில் மதிப்பெண் சான்றிதழ் சென்ற மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதுநிலை எஞ்சினியரிங் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. இதற்கு அண்ணா பல்கலையின் இணையதளம் மூலம், ஜூலை 4ம் தேதி வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் பதிவு செய்யும் தகவல்களைப் பதிவிறக்கம் செய்து, வங்கி வரைவோலையுடன், தமிழ்நாடு மாணவர் சேர்க்கை செயலர், அண்ணா பல்கலைக்கழகம் என்ற முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கூடுதல் விவரங்களை அறிய www.annauniv.edu  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.