சாதனைப் பெண் பெனோ ஜெபின்



பார்வை தாண்டிய பயணம்!

இந்தியாவின் முதல் பார்வையற்ற ஐ.எஃப்.எஸ். அதிகாரியாகி இருக்கிறார், பெனோ ஜெபின். சென்னைப் பெண்ணான இவர் இந்த உச்சத்தை எட்ட சந்தித்த இடர்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அத்தனையையும் தகர்த்தெறிந்து சாதனைப் பெண்ணாக உயர்ந்து நிற்கிறார்.  டெல்லியில் மத்திய அமைச்சர் தலைமையில் பாராட்டு விழா, சென்னையில் அவர் படித்த பள்ளியில் பாராட்டு விழா என ஜெபின் இப்போது படுபிஸி. வாழ்த்துகளோடு சந்தித்தோம். புன்னகையோடு எதிர்கொண்டவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்... முதல்ல என்னோட பள்ளி, கல்லூாி ஆசிரியர்கள், கோச்சிங் சென்டர்ஸ்னு எனக்கு உதவியா இருந்த அத்தனை பேருக்கும் நன்றி’’ என நெகிழும் அவரது முகத்தில் அத்தனைபரவசம். ‘‘சென்னை, வில்லிவாக்கம்தான் நான் பொறந்து வளர்ந்ததெல்லாம். அப்பா லூக் அந்தோணி சார்லஸ், ரயில்வே ஊழியர். அம்மா மேரி பத்மஜா. ரெண்டு பேரும்தான் இந்த ஐ.எஃப்.எஸ்-ஐ உருவாக்குற வேலையை செஞ்சாங்க. ஒரே அண்ணன் கனடா வாசி.

பொறக்கும்போதே எனக்கு நூறு சதவீதம் பார்வை கிடையாது. இதனால, அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க.  லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளியில சேர்த்துவிட்டாங்க. இந்தப் பள்ளிதான் என்னை வளர்த்தெடுத்துச்சு. ஸ்கூல்ல படிக்கும்போதே நிறைய பேச்சுப் போட்டிகளுக்குப் போவேன். டீச்சர்ஸ், பிரின்சிபால் எல்லோரும் ரொம்ப ஊக்கம் கொடுப்பாங்க. +2 படிக்கும்போது ஐ.ஏ.எஸ். ஆகணும்ங்கிற கனவு வந்துடுச்சு. காரணம், நான் சமூகப் பிரச்னைகள் பற்றின செய்திகள் அதிகமா வாசிப்பேன். அதைப் பேச்சு போட்டிகள்ல பேசுவேன். அதுதான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கு.

ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ்ல பி.ஏ., ஆங்கிலம் சேர்ந்தேன். அடுத்து, லயோலாவுல எம்.ஏ., முடிச்சேன். அதே சமயத்துல கோச்சிங் சென்டர்ஸ் போய் படிக்க ஆரம்பிச்சுட்டேன். 2013ம் வருஷம், எஸ்.பி.ஐ., வங்கியில பி.ஓ., போஸ்ட்டுக்கான தேர்வு வந்துச்சு. அதுல பாஸாகி அண்ணா நகர் மேற்கு, அம்பத்தூர்னு நாலஞ்சு பிராஞ்ச்ல வேலை பார்த்தேன். அப்புறம், ஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதினேன். முதல் தடவை எனக்கு வாய்ப்பு கிடைக்கலை. 2013-2014 வருஷம் நடந்த தேர்வுல 343வது இடம் கிடைச்சது. ஆனா, நேர்காணல் பயம் கொடுத்துச்சு. அதுல வடகிழக்கு மாநிலங்கள், வெளிநாட்டு உறவுகள், ஊழல்னு பல கேள்விகள் கேட்டாங்க. எல்லா கேள்விக்கும் பதிலளிச்சேன். எந்த நாட்டுக்கும், எந்த இடத்துக்கும் போய் வேலை பார்க்கத் தயார்னு சொன்னேன்.  இப்போ, இந்தியாவிலேயே முழுவதும் பார்வையிழந்த முதல் ஐ.எஃப்.எஸ் பெண் அதிகாரி நான்தான்.

இப்போ, வேலையில சேர அறுபது நாட்கள்  டைம் கொடுத்திருக்காங்க. அதுக்கு முன்னாடி மத்திய பணியாளர் நலத்துறை  அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில பாராட்டு விழா நடத்துனாங்க. அதுல  அமைச்சர், ‘தடைகளைத் தாண்டி ஒரு நல்ல பதவிக்கு வருவது சாதாரண விஷயமில்லை’ன்னு  பாராட்டினாங்க. அப்புறமா எங்கிட்ட நல்ல நிர்வாகத்தை அமைக்க பாடுபடணும்.  நிறைய உழைக்கணும். வாழ்த்துக்கள்’னு சொன்னாங்க. இப்போ என்னோட நோக்கம்,  லட்சியமெல்லாம் எந்த இடத்துல என்னை பணியமர்த்தினாலும் அங்குள்ள சவால்களை  எதிர்கொண்டு முன்னேறணும்ங்கிறதுதான்’’ என்கிறார் பெனோ! உங்களால முடியும் பெனோ!

ரொம்பப் பெருமையா இருக்கு!

ஒரு பார்வையற்ற பெண் குழந்தையை வளர்த்து நாடு போற்றும் அளவுக்கு உயர்த்தியதில் பெற்றவர்களின் அர்ப்பணிப்பை இங்கே வார்த்தையாக்க முடியாது. பெண்ணின் சாதனையில் நெகிழ்ந்து நிற்கிறார்கள் சார்லஸூம் மேரியும். ‘‘அவ  ெபாறக்கும்போது பார்வையில்லனு தெரிஞ்சப்ப ரொம்ப கலங்குனோம். இப்போ அதிகமா  சந்தோஷப்படுறதும் நாங்களாதான் இருப்போம். சின்ன வயசுலேயே துறுதுறுன்னு  இருப்பா. ஒரு விஷயத்தை நினைச்சுட்டாள்னா அதை அடையக் கடுமையா உழைப்பா. அதுதான்  அவளோட பெரிய பலம்.

பத்தாம் வகுப்புல 464 மார்க் வாங்கி பார்வையற்ற  மாணவர்கள்ல மாநிலத்துல முதல் ரேங்க் வாங்கினா. +2வுல 1074  மார்க் எடுத்தா. இதனால, நல்லா வந்துடுவான்னு எங்களுக்கு நம்பிக்கை இருந்தது.  ஆனா, சிவில் சர்வீஸ் தேர்வு வரைக்கும் வருவாள்னு நினைக்கலை.  இப்போ, டெல்லியில வேலைக்குப் போனதும் ஒரு பத்துநாள் அவகூட இருந்துட்டு சென்னை  வந்துடலாம்னு இருக்கோம். முன்னாடி இருந்த கவலை இப்போ இல்ல. அவளை அவளே  பார்த்துப்பா. நிச்சயமா சிறந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரின்னு பெயர் வாங்குவா’’ என்கிறார்கள் அவர்கள்.

சக்ஸஸ் ஃபார்முலா!

 சாதனை இளவரசி பெனோ ஜெபின் இப்போது கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பகுதிநேர பி.எச்டி படித்துக் கொண்டிருக்கிறார். ‘தேர்வில் வெல்லடிப்ஸ் ப்ளீஸ்’ என்றால், மூன்று மந்திரங்களைச் சொல்கிறார்.‘‘ஐ.ஏ.எஸ்., ஆக ஆசைப்படறவங்களுக்கு  முதல் தேவை நம்பிக்கை. எவ்வளவு நேரம் படிக்கிறோம்ங்கிறது முக்கியமில்ல; என்ன படிக்கிறோம்ங்கிறதுதான் முக்கியம். பத்து மணி நேரமா உட்கார்ந்து படிக்கிறேன்னு நினைச்சு கவனமில்லாம படிச்சா அது வேஸ்ட். ஒரு நாளைக்கு கவனமா படிச்சா நாலு மணி நேரம் போதும். பாடத்திட்டம், பழைய கேள்வித்தாள்கள் இதெல்லாம் அடிக்கடி பார்த்து கவனமா படிக்கணும். அப்புறமென்ன வெற்றி நிச்சயம்!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்