ஆர்க்கிடெக்சர் படிப்புக்கு அழகான எதிர்காலம்!



மார்க் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் ஆர்க்கிடெக்சர் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கட்டிடக்கலை படிப்பு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பேராசிரியர்கள் சேவியர் பெனிடிக்ட் மற்றும் கட்டிடக்கலை நிபுணர் சேரலாதன் ஆகியோர் பி.ஆர்க். படிப்பின் எதிர்காலம் குறித்து பேசினார்கள்.பி.ஆர்க் என்று சொல்லப்படும் கட்டிடக்கலை படிப்பு 5 ஆண்டுகளைக் கொண்ட இளநிலைப் பட்டப்படிப்பு. கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டது இது. கட்டிடங்களை வடிவமைத்தல், தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ற வகையில் உருவாக்குதல் போன்ற பாடத் திட்டங்களைக் கொண்டிருக்கும். இப்படிப்பின் அவசியம் பற்றியும் எதிர்காலம் குறித்தும் பேராசிரியர் பெனிடிக்ட் பேசினார்.

‘‘ஆர்க்கிடெக்சர் படிக்க விரும்பும் மாணவர்கள், வரைதல், எழுதுதல் போன்றவற்றில் அதிக ஆர்வத்துடன் இருக்க வேண்டும். கணிதம், பொருளாதாரம், கட்டிடக்கலையின் வரலாறு, உள் அலங்காரம் போன்ற பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படும்.பிளஸ் 2 படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். இதில் சேர  நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்றது. பி.ஆர்க்கில் 18 விதமான பாடத்திட்டங்கள் உள்ளன. இந்தத்  துறையை எடுத்துப் படிக்கும்போது பல்வேறு விதமான வேலைகளில் சேரமுடியும். மேற்கொண்டு மாஸ்டர் டிகிரியும் படிக்கும்போது ஏராளமான பணி வாய்ப்புகள் சுலபமாக கிடைக்கும். உதாரணமாக, ஃபெசிலிட்டி மேனேஜ்மென்ட், கன்ஸ்ட்ரக்‌ஷன் மேனேஜ்மென்ட், ப்ராஜெக்ட் மேனெஜ்மென்ட், எம்.டெக் இன் கன்ஸ்ட்ரக்‌ஷன் மேனேஜ்மென்ட் போன்றவற்றைப் படிக்கலாம். பன்முகத்துறை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரக்கூடியது பி.ஆர்க்.

உதாரணமாக, ப்ராப்பர்ட்டி வேல்யூ ஆஃப் பிளானிங் படித்தால் வங்கிகளில் வேலை கிடைக்கும். தனியாக கம்பெனி துவங்கிட கவுன்சில் ஆஃப் ஆர்க்கிடெக்ட்டில் பதிவு செய்துவிட்டால் போதும். ஆர்க்கிடெக்ட் சார்ந்த சொந்தமான கம்பெனி வைத்து நடத்தலாம். எஞ்சினியரிங் முடித்துவிட்டு வெளியில் வருவதைவிட பி.ஆர்க் முடித்துவிட்டு வெளியே வரும்போது வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இதில் ஒரு பிரிவை ப்ராடெக்ட் டிசைன் என்று சொல்வார்கள். கையில் உள்ள மொபைல் முதல் கார் டிசைன் வரை செய்யலாம். இதில் மாஸ்டர் டிகிரியைப் படிக்கலாம். அதை எம்.டஸ்(M.Des) என்று சொல்வார்கள். இதற்கு அடிப்படையாக படிக்க வேண்டியது பி.ஆர்க். இதற்கு வெளியிலும் அரசு துறைகளிலும் அதிக வாய்ப்புகள் உள்ளன. நமக்கு பி.ஆர்க் புது கோர்ஸ் போல தெரியும், ஆனால் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளிநாடுகளில் எப்போதோ பிரபலமாகிவிட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஐந்து வருடங்களில்தான் அதிகமாக பிரபலமாகி வருகிறது. இந்தப் பாடத்திட்டம் முன்பு இரண்டு கல்லூரிகளில்தான் இருந்தது. இப்போது நிறைய கல்லூரிகளில் உள்ளது. இப்போது அரசே விழித்துக்கொண்டு
இந்தத் துறையை மேம்படுத்தி வருகிறது.

எஞ்சினியரிங்கில் தேர்வு எழுதி தோல்வியடைந்துவிட்டால் அரியர்களை தேர்வு எழுதி பாஸ் ஆகிவிடலாம். பி.ஆர்க்கில் ஐந்து வருடப் படிப்பில் ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். ஒரு செமஸ்டர் பாஸ் பண்ணினால்தான் அடுத்த செமஸ்டருக்குப் போக முடியும். மேலும் டிசைனில் ஐந்தாம் ஆண்டில் உங்கள் திறமையை விவரித்து
விரிவுரையாற்ற வேண்டும். இதனால் ஆங்கில மொழித்திறனும் வளரும், தனித்திறன் அதிகமாகும். அதேபோல பி.ஆர்க்கைப் பொறுத்தவரை எல்லோரும் படித்துவிட முடியாது. ஆர்வமும் தனித்திறமையும் உள்ளவர்கள்தான் உயர்வடையமுடியும்.

அகில இந்திய அளவில் NATA என்ற நுழைவுத்தேர்வு நடத்தித்தான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பது அரசின் சட்டம். அதனால் சுமாரான மாணவர்களுக்கு இது சிரமம்தான். தமிழ்நாட்டில்தான் பி.ஆர்க் படிப்பு அதிகமான கல்லூரிகளில் உள்ளது. மொத்தம் 73 கல்லூரிகளில் இந்தப் பிரிவு உள்ளது. அதற்கு அடுத்ததாக மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மாநிலங்கள் உள்ளன.   பி.ஆர்க். முடித்தவர்களுக்கு மேலும் சில மேற்படிப்புகளை படிக்க வாய்ப்பு உள்ளது. எம்.டெக். படிப்பில் என்விரான்மென்டல் பிளானிங், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிளானிங், அர்பன் அண்ட் ரீஜினல் பிளானிங் உள்ளிட்ட படிப்புகளைப் படிக்கலாம். ஏராளமான சான்றிதழ் படிப்புகளும் உள்ளன. வேலைவாய்ப்பு வளர்ந்து வரும் உலகில் குடியிருப்பு மற்றும் தொழில் நிறுவனங்களுக்காக புதிது புதிதாக கட்டிடங்கள் உருவாகிக் கொண்டேதான் இருக்கும். அதற்காக ஏராளமான ஆர்க்கிடெக்ட்கள் தேவைப்படுவார்கள். எனவே, ஆர்க்கிடெக்ட்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது’’ என்றார்.

கட்டிடக்கலை நிபுணர்  சேரலாதன் பேசும்போது, ‘‘ஆர்க்கிடெக்சர் மற்றும் சிவில் எஞ்சினியரிங் இரண்டுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. பி.ஆர்க்., படிப்பில் கலாசார ரீதியிலான நகர கட்டமைப்பு, டிசைனிங் உள்ளிட்டவை அதிகளவில் இடம்பெறும். ஆக்கப்பூர்வமான சிந்தனை, புதிய வடிவமைப்பு, விசாலமான எண்ணம் ஆகியவை கட்டிடக்கலைத் துறைக்குத் தேவையானவை.பொதுவாக, கட்டிடக் கலைஞர்கள் தங்கள் எண்ணத்தில் உருவாக்கிய வடிவமைப்பை சரியாகப் புரிந்துகொண்டு அவற்றைக் கட்டுமானத்தில் கொண்டுவருவதே சிவில் எஞ்சினியர்களின் பணி. எனவே, ஒரு ஆர்க்கிடெக்ட்டின் கற்பனையிலும், புத்தாக்க சிந்தனையிலும் உருவான வடிவமைப்பிற்கே சிவில் எஞ்சினியர்கள் நிஜத்தில் உருவம் கொடுக்கின்றனர். சிவில் எஞ்சினியரிங் படிப்பில் கணிதம், மெட்டீரியல், கட்டிடத்தின் தன்மை குறித்த பாடங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

நல்ல கட்டிடக் கலைஞருக்கு ஆரம்பமே மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். சில ஆண்டுகள் அனுபவத்தில் ரூ.75 ஆயிரம் பெற முடியும். வெளிநாடுகளிலும் பெரிய அளவில் தேவை உள்ளதால், சம்பளத்திற்கு மட்டுமல்ல வளமான வாழ்வுக்கும் குறைவிருக்காது’’ என்று ஆர்க்கிடெக்சர் படிப்பின் பயன்களை பட்டியலிட்டார்.

- எம்.நாகமணி